நானும் என் தோழியும் சிதரால் மலைக் கோயிலைப் பார்த்து வருவதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் சிறு இலந்தைப்பழம் போன்ற ஒரு உருண்டையை என் மார்பில் உணர முடிந்தது. அதற்கு ஒரு மாதம் முன்பு தடித்த நரம்பாக அதைப் பார்த்துப் பின் மறந்திருந்தேன்.
இப்போது மறக்கக் கூடாது என்பதற்காகத் தோழியிடம் அதைப் பற்றிச் சொல்லி வைத்தேன். உடனடி யாக மருத்துவரிடம் காட்ட வேண்டும் என இருவரும் பேசிக்கொண்டோம். மருத்துவரிடம் சென்றேன். மார்பைப் பரிசோதித்துக் கொண்டே “அழுத்தமாக, ஆழமாக இருக்கிறது” என்று சொன்னார்.
ஜிப்மரில் தொடங்கிய சிகிச்சை
அடுத்தடுத்த பரிசோதனைகள், ‘கார்சினோமா’ என்று சோதனை முடிவு வந்தபோது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. தோழிகளால் சூழப்பட்டவள் நான். என்னருகில் இருந்த இன்னொரு தோழி மருத்துவத் துறையில் இருக்கும் தோழியை அழைத்து விளக்கம் கேட்டாள். தோழமைகளின் கூட்டு உரையாடலும் குடும்பத்தின் உரையாடலும் சேர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை தொடங்கியது.
ஜிப்மர் மருத்துவமனையைப் பொறுத்தவரை என் நோயின் தன்மை, தேவைப்படும் சிகிச்சை என எதுவாக இருந்தாலும் நோயாளியான என்னிடம்தான் சொல்லுவார்கள். அவற்றை நான் உள்வாங்கி, வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்றவாறு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே புற்று நோய் அனுபவமுள்ள தோழிகள், கவுன்சலர், மருத்துவத் துறையில் உள்ளவர்கள் என எல்லோரும் மாறி மாறி நமக்கு ஆலோசனையும் ஆறுதலும் வழங்கினர். ‘புற்று நோய் கடினமான ஒன்று. அதில் சுலபமாக மீண்டுவரக்கூடிய தன்மையை உடையது மார்பகப் புற்று நோய். அதைப் புரிந்து மருத்துவத்துக்கு ஒத்துழைக்கும்படி’ அவர்கள் கூறினர்.
தோள் கொடுத்த தோழமை
தன் எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு என் அருகிலிருந்து என் வீட்டாருக்குப் பராமரிப்புப் பயிற்சியளித்தார் ஒரு தோழி. கடுகு வாங்க வந்த ஒரு தோழி, புத்தகம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார். உடற்பயிற்சிக்கு உதவ வந்த ஒரு தோழி மனப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். என்னுடன் மருத்துவமனைக்கு வர ஆண், பெண் தோழமைகள் எப்போதும் தயாராயிருந்தனர். சின்னதாய், பெரியதாய் என வரிசைப்படுத்த முடியாத அளவில் நீளும் உதவிகளுக்குச் சொந்தமானவர்களைக் குறிப்பிடுவது அவ்வளவு சுலபமல்ல.
சக நோயாளிகளின் பரிவு
மருத்துவமனையில் என்னைவிட அதிக வலி, அதிக கஷ்டங்கள் உடையவர்களைத் தொடர்ந்து பார்த்தேன். சக பயணிகளாக ஒருவருடன் ஒருவர் உரையாடுவது என்பது மிகுந்த ஆறுதலான ஒன்று. நிறையத் தகவல் பரிமாறிக்கொள்வோம். “வலியை, வாந்தியை, எரிச்சலை, புண்ணை, மருந்தை... எப்படிச் சமாளிப்பது என்பதாகவே அது இருக்கும்”. ஒவ்வொரு நோயாளியும் மிகப்பரந்த மனப்பான்மையுடன் மற்றவர்களுக்குத் தங்கள் அனுபவங் களை வாரி வாரி வழங்குவர். அவை எப்போது வேண்டுமானாலும் பயன்படும். மார்பக ஸ்கேன், மமோகிராம் எடுக்கும் இடங்களில் ஒற்றை மார்போடு அமர்ந்திருக்கும் பெண்கள் தங்கள் பேச்சின் பகுதியாக, இதோ பார் இப்படியில்லையா என்று தன் மார்பைக் காட்டிக் கேட்பர். “மார்பகத்தை மத்தவனுக்குக் காட்டனுமேன்னுதான் வீட்டில் சொல்லவில்லை” என்பது போன்ற மடத்தனத்தை உணரும் பேச்சுகளும், சம்பிரதாயத்திலிருந்து விடுபட்ட மனநிலையும் இயல்பாக ஒருங்கே வெளிப்படும்.
மருத்துவர்களின் பரிவு
தொடர் சிகிச்சை ஏற்படுத்தும் அலுப்பு, மருத்துவ முறைகளை, நோயின் தன்மையை உள் வாங்குவதில் ஏற்படும் சிக்கல்... என நோயாளிகளின் அவஸ்தையை அடுக்கிக்கொண்டே போகலாம். “நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க முடிந்தவரை சூடாகச் சாப்பிடுங்கள்” என்று மருத்துவர் கூறுகிறார். மருத்துவருக்கு நோய்த்தொற்று என்பதன் பொருள் வேறு, நோயாளிக்கு அது ஒரு வார்த்தையாகவும் பின் மறந்துவிடுவதாகவும் இருக்கிறது. நோய்த்தொற்றோடு திரும்பும்போது, “நான் சொன்னேனே” என்பார் மருத்துவர். இப்படி மருத்துவ மொழிகளைப் புரிந்துகொள்ளத் தடுமாறும், என் சக பயணிகளுக்கு இருக்கும் கஷ்டங்கள் எனக்கு இல்லை. நட்பாக முடிந்தவர்களும் மீண்டும் மீண்டும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்களும் நண்பர்களானோம். வாட்ஸ்அப் குழுவில் பேசிக்கொள்ளத் தொடங்கினோம்.
கைகொடுத்த சித்த மருத்துவம்
கீமோ எடுத்துக்கொண்ட நேரத்தில் அதிலிருந்து விடுபட மலர் மருந்து, ஆயுர்வேத சித்த மருந்துகளும் உதவின. ஒரு தையல் பிரிந்ததால் தொற்று ஏற்பட்ட அறுவை சிகிச்சை புண்ணைச் சிவப்பு எண்ணெய் தடவிச் சரிசெய்தோம். எல்லா வேதனைகளுக்கும் இடையில் என் அலுவலக வேலையையும் எழுத்து வேலையையும் செய்ய முடிந்தது. அம்மா, மகள், கணவர், உடன் பிறப்புகள், தோழமைகள் என எப்போதும் என்னைப் பராமரிக்க என் அருகிலிருந்தனர். இயலாமை ஏற்படுத்திய என் கோபத்துக்கு முன் மௌனித்துப்போய் நின்றனர். நோயாளியாய் நான் பட்ட அவஸ்தைகள், உடனிருந்தவர்களைப் படுத்திய பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
நெஞ்சில் நிலைத்த அனுபவங்கள்
வாந்தி எடுக்கச் செல்லும் வழியில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும். நான்கு வீடு தாண்டி கேட்கும் நான் ஏப்பம் விடும் சத்தம். வலுவிழந்த எனது உடலை மீட்டெடுக்கும் பணியில் தொழிற்சாலையாய் இயங்கிக்கொண்டிருந்தது வீடு. ஒரு முறை, வாந்திக்குப் பிறகு “பாப்பா, குடல் வெளிவந்துவிட்டது. அப்பாடா...” என அமர்ந்தேன். “அம்மா, உண்மையாகவா?” என்றாள் என் பத்து வயது மகள். “ஆம்” என்றேன். “நாம் அதற்காக டாக்டரிடம் போக வேண்டாமா? வெளி வந்த குடல் எங்கே என்றாள்?”. நான் மெல்லச் சிரித்தேன். அவள் இன்னும் பதற்றத்துடன், “அம்மா குடல் எங்கே? எடுத்து விழுங்கிவிட்டாயா?” என்றாள். “ஆமாம்” என்றேன். எதற்கும் நாம் ஆஸ்பத்திரிக்குப் போவோம்... புத்தகம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை.
- சாலை செல்வம், கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com