தொகுப்பு: கனி
மருத்துவ உலகையே புரட்டிப்போடும் புதுமை யான கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. மெய்நிகர் உண்மை, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்கள் அடுத்த சில ஆண்டுகளில் மருத்துவ உலகத்தில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தவிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரி விக்கிறார்கள். 2020-களில் மருத்துவத் துறையில் ஆட்சி செலுத்தவிருக்கும் சில புதுமை யான கண்டுபிடிப்புகள் இவை.
ட்ரோன்களில் மருந்துகள்
மருத்துவ சேவைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது பற்றி அமெரிக்காவின் யுபிஎஸ் நிறுவனம் ‘ஃபிளைட் ஃபார்வேர்டு’ என்ற சோதனைத் திட்டத்தை மேற்கொண்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மருந்துகள் விநியோகம், ரத்த, சிறுநீர்ப் பரிசோதனை சேவைகளை மருத்துவமனைகளுக்கு வழங்க இந்நிறுவனம் முயன்றுவருகிறது. சிலிகான் பள்ளத்தாக்கின் ‘ஜிப்லைன்’ நிறுவனம் ஏற்கெனவே கிராமங்களுக்கு ட்ரோன்களில் மருந்துகளை விநியோகம் செய்யும் சேவையை வழங்கிவருகிறது.
பாக்கெட் அல்ட்ராசவுண்ட்
உலகம் முழுவதும் 400 கோடி மக்கள் மருத்துவப் படிமவியல் (medical imaging) வசதிகளைப் பெறமுடியாமல் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கெல்லாம் பட்டர்ஃபிளை ஐக்யூ என்ற இந்தக் கையடக்க அல்ட்ராசவுண்ட் இயந்திரம் வரப்பிரசாதமாக அமையும். யேல் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சியாளர் ஜோனதன் ரோத்பெர்க், அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தை ‘சிப்’ வடிவமாக மாற்றியிருக்கிறார்.
இந்த அல்ட்ராசவுண்ட் ‘சிப்’பை ஐ-போன் செயலியின் வழியாகக்கூட இயக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம், கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்தத் தொழில்நுட்பத்தை வாங்கும் வசதியிருக்கும் 150 நாடுகளுக்கு விற்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லும் ரோத்பெர்க், அதன் மூலம் கிடைக்கும் நிதியால் கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழியாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்க வசதியில்லாத 53 நாடுகளுக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகச் சொல்கிறார்.
ஸ்டெம்-செல் தீர்வு
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமான உணவுப் பழக்கம், இன்சுலின் ஊசிகள், அன்றாட ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் டஃக் மெல்டன் இதற்கான தீர்வை ஸ்டெம்-செல்லில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.
ஸ்டெம்-செல்களின் மூலம் இன்சுலின் தயாரிக்கும் பீட்டா செல்களை உருவாக்க முடியும் என்ற தன் கருத்தை முன்வைத்திருக்கிறார். பத்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் முன்வைத்திருக்கும் இந்தக் கருத்து நம்பிக்கை, சர்ச்சை என இரண்டையும் மருத்துவ உலகில் உருவாக்கி இருக்கிறது. இந்த ஆராய்ச்சி, விலங்குகளிடம் வெற்றிகரமாகச் செயல்பட்டதுபோல், மனிதர்களிடமும் வெற்றியடைந்தால் யாரும் நீரிழிவு நோய்த் தாக்கத்தில் வாழ வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார் மெல்டன்.
புற்றுநோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க இயலாது. இந்தப் பிரச்சினைக்கு சிடி ஸ்கேன் முழுத் தீர்வை வழங்க முடிவதில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்று கூகுள் சுகாதார ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் ஸ்ரவ்யா கண்டறிந்துள்ளார்.
மனிதக் கதிரியக்க வல்லுநர்களைவிட, இவர்கள் வடிவமைத்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, நுரையீரல் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மருத்துவ உலகில் பெரும் நம்பிக்கையை உருவாக்கும் என்று ஸ்ரவ்யா தெரிவித்துள்ளார்.
3-டி டிஜிட்டல் இதயம்
முன்னாள் ஸ்டான்ஃபோர்டு பேராசிரியர் சார்லஸ் டெய்லர், இதயப் பிரச்சினைகளை மருத்துவர்கள் எளிமையாகக் கண்டறிவதற்கு உதவும் படி, தனிநபர்களின் தேவைக்கேற்றபடி 3டி மாதிரி இதயங்களை உருவாக்கியிருக்கிறார். இவரது ‘ஹார்ட் ஃப்ளோ’ நிறுவனம், இதய நோயாளிகளின் பிரச்சினைகளை மருத்துவர்கள் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்காக 3-டி டிஜிட்டல் இதயங்களை வடிவமைத்துள்ளது. இந்த முப்பரிமாண இதயங்களின் மூலம், மருத்துவர்கள் நோயாளிகளின் இதயங்களைச் சுழற்றியும், பெரிதாக்கியும் திரையில் பார்த்து, இதய நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்.
மனத்தைப் படிக்கும் கைப்பட்டை
சிடிஆர்எல் என்ற நிறுவனம் வடிவமைத்திருக்கும் கைப்பட்டை, மனத்தில் நினைப்பதை வைத்து டிஜிட்டல் இயந்திரங்களை இயங்கவைக்கும் திறன்கொண்டது. கைகளை அசைக்காமலேயே ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நினைத்த வுடன், இந்தக் கைப்பட்டையில் இருக்கும் மின் தூண்டல்கள் அதைக் கண்டறிந்து, மோட்டார் நியூரான்கள் வழியாகப் பயணம்செய்து கை திசுக்களிலிருந்து கைகளுக்குச் செல்கிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர், நரம்பியல் விஞ்ஞானி தாமஸ் ரியர்டன், பக்கவாதம், பார்கின்சன் நோய், நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று சொல்கிறார்.
கட்டுரைகள் ஆய்வுக்குச் செயற்கை நுண்ணறிவு
உலகம் முழுவதும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பிக்கும் அறிவியல் கட்டுரைகளை ஆய்வுசெய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ‘பெனவ்லென்ட்ஏஐ’ (BenevolentAI) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜோன்னா ஷெல்ட்ஸ் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் 20 லட்சம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை அலசி ஆராய இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.