ரேணுகா
ஒரு பழக்கம் நமது இயல்பாக மாற 26 நாட்கள் ஆகும் என்று இதுவரை கூறப்பட்டது. சமீபத்திய ஆய்வு ஒன்று, எந்த ஒரு பழக்கமும் நமது இயல்பாக மாறுவதற்கு 66 நாட்களாகும் என்று தெரிவிக்கிறது. நமது இயல்பாக மாறிய பழக்கத்தைக் கைவிடுவது எளிதாக இருக்குமா? கண்டிப்பாக எளிதாக இருக்காது என்று நமது அனுபவ அறிவு தெரிவிக்கிறது என்றால், அதற்குக் கூடுதல் நாட்களாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயல்பாக மாறிய பழக்கத்தை ஏன் துறக்க வேண்டும்? ஏனென்றால், நாம் ஏற்றுக்கொண்ட எல்லாப் பழக்கங்களும் நமக்கு நன்மை பயப்பவையாக இருக்காது என்று நமது அனுபவ அறிவோ கற்பிதங்களோ தெரிவிக்கலாம். உதாரணத்துக்கு, புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம். இருந்தாலும், நல்லவை அல்ல என்று அறிவுறுத்தப்படும் எல்லாப் பழக்கங்களும் மோசமானவை அல்ல என்று இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நகம் கடிக்கலாமா?
நகம் கடிக்கும் பழக்கம் மிகப் பெரிய பிரச்சினையாகப் பலருக்கு உள்ளது. அதைப் பிரச்சினையாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் நகம் கடிக்கும்போது நகத்தில் உள்ள பாக்டீரியா உங்களின் வாயின் வழியாக உடலுக்கு உள்ளே செல்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து, பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து உடல் தன்னை பாதுகாத்துக்கொள்கிறது. இது எவ்வாறு நடக்கிறது என்றால், முதன் முதலில் நகம் கடிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் பாக்டீரியா குறித்து மனித மூளை தன்னுள் பதிவு செய்துகொள்கிறது.
இதனால் அடுத்த முறை நீங்கள் நகம் கடிக்கும்போது மூளை விரைவாகச் செயல்பட்டு உடலுக்குள் செல்லும் பாக்டீரியாக்களை அழிக்க வெள்ளை ரத்த அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் நகம் கடிப்பவர்களுக்கு எளிதில் அலர்ஜி ஏற்படுவது இல்லை. அதற்காக நகம் கடிப்பது நல்லது என்று அர்த்தமில்லை.
குளிக்கும்போது சிறுநீர் கழிக்கலாமா?
பொதுவாக, குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 75 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது குளிக்கும்போது சிறுநீர் கழித் திருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதை நினைத்து அவமானப்படத் தேவையில்லை. குளிக்கும்போது சிறுநீர் வெளியேறுவதால் அதில் உள்ள யூரிக் அமிலம், அம்மோனியா ஆகியவை நமது பாதங்களில் பூஞ்சை தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாயு வெளியேற்றலாமா?
உடலிலிருந்து வெளியேறும் கெட்ட வாயுவைப் பற்றிப் பேசுவது, அருவருப்பான விஷயமாகவோ கேலியான விஷயமாகவோ கருதப்படுகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 14 முறை கெட்ட வாயுவை மனிதன் வெளியேற்றுகிறான். தூக்கத்தில் மட்டும் 3 -5 முறை வாயு வெளியேறுகிறது. பொது இடத்தில் கெட்ட வாயுவை வெளியேற்றுவது அருவருப்பு எனக் கருதிப் பலர் அதை அடக்க முயல்கிறார்கள். ஆனால், கெட்ட வாயுவை வெளியேறுவது உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பிட்ட உணவைக் குடல் செரிமானம் செய்யும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களே கெட்ட வாயுவாக வெளியேறுகின்றன. இதை அடக்குவதால் வாயுத் தொல்லை அதிகரிக்கும், வயிற்றுவலி, வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்படவும் அதிக சாத்தியமுண்டு.
சூயிங்கம் சாப்பிடலாமா?
குழந்தைகள் சூயிங்கம் சாப்பிடுவது தவறான பழக்கம் எனக் கருதப்படுகிறது. சூயிங்கம் சாப்பிடாமல் இருக்குமாறு குழந்தைகளும் எச்சரிக்கப்படுகிறார்கள். ஆனால், சூயிங்கம் மெல்வது, மனத்தை ஒருமுகப்படுத்தும், நினைவாற்றலைப் பெருக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கும் என இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சூயிங் கம் மென்று ருசிப்பதற்கு மட்டும்தான், விழுங்குவதற்கு அல்ல என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏப்பம் விடலாமா?
சாப்பிட்டு முடித்தபின் வெளியேறும் ஏப்பமே நன்றாகச் சாப்பிட்டதற்கான அடையாளம். இருப்பினும், பொதுவெளியில் ஏப்பம் விடுவது, அசிங்கமாகவோ தவறானதாகவோ பலரால் கருதப்படுகிறது. வயிற்றில் உள்ள வாயு ஏப்பம் மூலமாக எளிதாக வெளியேறுகிறது. ஏப்பம் வரும்போது அதை அடக்குவதால் நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். நீங்கள் அடிக்கடி ஏப்பம் விடும் நபராக இருந்தால், உங்களுக்கு அமில எதிர்க்களித்தல் பாதிப்பு இருக்கச் சாத்தியமுள்ளது. இதற்கு உடனடியாக மருத்துவரைச் சென்று பார்ப்பது நல்லது.