போர் வீரர்கள் போரின்போது தலைக்கவசம் அணிவது அக்கால வழக்கம். இன்றைக்கு இரு சக்கர வாகனப் பயணம் என்பதே போரில் புகுந்து புறப்பட்டுச் செல்வது போல்தான் இருக்கிறது. அதனால், தேவையில்லை என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தலைக்கவசம் அவசியம் என்பதை நீதிமன்றம் சொல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
தலைக்கவசம் அவசியம் என்ற தீர்ப்பு வெளியானவுடன் `ஹெல்மெட்` கடைகளில் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது. இது நல்ல மாற்றம்தான்.
ஹெல்மெட் வரலாறு
தலைக்கவசம் (ஹெல்மெட்) கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1914-லேயே ஹெல்மெட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இங்கிலாந்தில் தொடங்கின. அந்நாட்டில் நடந்துவந்த மோட்டார்சைக்கிள் பந்தயங்களில், அதிவேகமாகச் செல்லும் வீரர்கள், கீழே விழுந்து அடிபடுவது சர்வ சாதாரணமாக இருந்தது. அடிபட்ட பலர் `கோமா` வில் பல ஆண்டுகள் படுத்திருந்த நிலையும் ஏற்பட்டது.
இதற்குத் தீர்வு ஒன்றைக் கண்டுபிடிக்க டாக்டர் எரிக் கார்ட்னர் நினைத்தார். அது தலைக்குக் கவசமாக இருக்க வேண்டும் என்றும், தலையை முழுமையாகக் காக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார். பல மருத்துவக் கண்டுபிடிப்புகள்தானே மனித ஆயுளைக் கூட்டியிருக்கின்றன. தலை போகும் இந்த அவசரத்தை மோஸ் என்ற டிசைனரிடம் கூறி, உறுதியான, இலகுவான தலைக்கவசத்தைத் தயாரிக்கக் கூறினார் டாக்டர் எரிக்.
இந்த நிலையில்தான் மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்களுக்குத் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பல வீரர்கள் ஆரம்பத்தில் இதை எதிர்த்தாலும், கட்டாயம் காரணமாக அணிந்துகொண்டதால் தலையில் அடிபடுவது கணிசமாகக் குறைந்தது. இதனால் தலைக்கவசத்தின் மகத்துவம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தலைக்கவசம் உயிர் காக்கும் கவசமாக மாறியது.
ஆய்வு தந்த ஆறுதல்
விபத்து ஏற்படும்போது, தலையில் அடிபட்டால் உண்டாகும் உள் மற்றும் வெளிக் காயங்கள் ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிடுகின்றன. பிற வாகனங்களைவிட இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகம். விபத்தின்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக் காயம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் ஹெல்மெட் குறைக்கிறது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. வளமாக வாழ, வருமுன் தலை காப்போம்.
குழந்தைகளைக் காப்போம்
இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரின் தலையை மட்டும் காப்பாற்றினால் போதுமா? பெரும்பாலும் குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறோம். குழந்தைகளுக்குப் பொருந்தும் பல வித அளவுகளில் சந்தையில் ஹெல்மெட் கிடைக்கிறது என்கிறது அமேசான் இணையதளம். அதேநேரம் 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தை களுக்கெல்லாம் முதுகெலும்பு வளர்ச்சி முழுமை அடைந்தி ருக்காது. அதனால், அதற்குக் கீழ் உள்ள குழந்தைகள் ஹெல்மெட் அணியக் கூடாது.