மருத்துவர் கு. சிவராமன்
அஞ்சலி: டாக்டர் சி. கோபாலன்
‘பள்ளி மாணவர்களின் படிப்புக்கு முதலில் பசிக்குச் சோறிட வேண்டும்’ என்கிற கருத்தாக்கத்தை இந்திய அறிவியல் தளத்தில், வெகுகாலம் முன்னரே வித்திட்ட மருத்துவர் கொளத்தூர் கோபாலன் சமீபத்தில் மறைந்துவிட்டார். உணவு, ஊட்டச்சத்து ஆகியவற்றை நோய் நீக்கலின், நோய்த் தடுப்பின் மையப் புள்ளியாக மாற்றியதில் அக்டோபர் 8-ம் தேதி தன் 101-வது வயதில் மறைந்த டாக்டர் கோபாலனின் பங்கு மிக முக்கியமானது.
புரிதலை மாற்றிய புத்தகம் ‘Nutritive values of Indian Foods’ என்கிற அவருடைய நூலை வாசித்திருக்காவிட்டால், சிறுதானியங்களின் நுட்பங்களும் அவற்றின் மருத்துவ நுண்கூறு களும் எனக்குத் தெரியாமலே போயிருக்கும். 2002-ல் ‘தேசிய உணவு நிறுவன’த்தில் தற்செயலாக அந்த நூலை புரட்டியதுதான் சிறுதானியம் குறித்த சிந்தனையை எனக்குள் புரட்டிப்போட்டது.
அந்த நூலை அவர் எழுதியது 1971-ல் என்பது இன்னும் அதிர வைக்கும் செய்தி. இந்தியாவில் உள்ள தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்தின் உணவுக்கூறுகள், அவற்றின் கலோரி, அவற்றின் மருத்துவப் பயன் ஆகியவை குறித்து அவர் எழுதிய அந்த நூல்தான், இன்றைக்கும் இந்தியாவின் உணவு மருத்துவ அறிவியலின் பைபிள்.
ஊட்டச்சத்து என்றாலே ஆப்பிள், அவகோடா, புரக்கோலி, கிவி எனப் புறப்படும் இன்றைய இளைய தலைமுறை இந்த நூலை ஒரு முறை வாசித்தால், அவர்களுடைய எண்ணம் உறுதியாக மாறும். தினையிலும் கம்பிலும் பனிவரகிலும் கேழ்வரகிலும் இல்லாததா ஓட்ஸில் உள்ளது? நெல்லியிலும் வெந்தயத்திலும் உள்ளது அனைத்தும் வெளிநாட்டு உணவில் உள்ளதா என்கிற கேள்வியை அவருடைய ஆய்வுகள் தாம் முதலில் கேட்க வைத்தன.
‘இந்திய உணவியலின் தந்தை’ என போற்றப்படுவதற்கும் ‘பத்ம விபூஷண்’ விருதுவரை கொடுக்கப்பட்டு கோபாலன் கொண்டாடப்பட்டமைக்கும் இந்த நூலில் தொடங்கி உணவு சார்ந்து 70 ஆண்டு காலத்துக்குமேல் அவர் செய்த ஆய்வுகள்தாம் காரணங்கள். அர்ப்பணிப்புமிக்க உழைப்பு சேலத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு
1918-ல் மகனாகப் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. பட்டங்கள் பெற்ற பிறகு, இங்கிலாந்தில் முனைவர் படிப்பு முடித்தவர் டாகடர் கோபாலன்.
மருத்துவம் படித்துவிட்டு வழக்கம்போல் மருத்துவப் பயிற்சிக்குச் செல்லாமல், உணவு ஆய்வுக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். 1948-ல் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் படித்து முடித்து இந்தியாவில் காலடி எடுத்துவைத்த நாளில் இருந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு உணவு சார்ந்த பங்களிப்பின் அவசியத்தைத் தன் ஒவ்வொரு ஆய்விலும் செயலிலும் செய்து காட்டியவர் அவர். ‘இந்திய உணவியல் கழக’த்தின் முதல் இயக்குநராகவும், ‘இந்திய மருத்துவ அறிவியல் கழக’த்தின் தலைமை இயக்குநராகவும் நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர்.
குழந்தைகளுக்கு ஊட்டம்
தொடக்கம் முதல் இந்திய உணவியல் கழகத்தில் உழைத்து, உணவு சார்ந்த பல தேசியக் கொள்கைகளுக்கு அவருடைய உழைப்பே வித்திட்டது. இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக் குறைபாட்டை நாடெங்கும் நீக்கி ஏழை நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு இந்தியாவை நகர்த்தியதில் அவருடைய உழைப்பு ஆகப் பெரிது.
இன்றைக்கும் இந்தியா முழுமையும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து உணவுத் திட்டம் (ICDS) இயங்கி, பால்வாடியில் குழந்தைகள் சத்துருண்டை பெறுகின்றன என்றால், அது கோபாலனின் கனவும் நுண்ணிய ஆய்வுத் தரவும் தந்தவையே எனலாம். இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தலைவராக அவர் இருந்த போதுதான் மலேரியாவையும் தொழு நோயையும் தடுக்கும் பெரிய அமைப்புகளும் கொள்கைகளும் உருவாக்கப்பட்டுப் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.
தேசம் உயர்த்திய ஆய்வு
உலக அளவில் மருத்துவத் துறையிலும் உணவு அறிவியல் துறையிலும் பெரும் ஆளுமைகளை உருவாக்கியவர் கோபாலன். டாக்டர் என்.கே. கங்கூலி, புஷ்ப பார்கவா, பி.ஜி. துல்புலே, மஹாதேவ பாம்ஜி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். சில உணவியல் கொள்கைகளில் மாற்றுக் கருத்து கொண்ட புஷ்ப பார்கவா முதலான ஆளுமைகளும்கூட கோபாலனின் ஆய்வு நுணுக்கத்தையும் பங்களிப்பையும் கொண்டாடவே செய்தார்கள்.
தேசப்பற்று மிகுந்த அவருடைய மருத்துவ ஆய்வு அணுகுமுறையே இந்தப் பாராட்டுக்குக் காரணம். நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து சில தனிமனிதர்களின் பெரும் கனவு, உழைப்பு, ஆய்வு, ஆளுமையே நாட்டில் பெருமாற்றத்துக்கு வித்திட்டன. மறைந்த கொளத்தூர் கோபாலன் அவர்களில் ஒருவர்.
கட்டுரையாளர், எழுத்தாளர் - சித்த மருத்துவர் தொடர்புக்கு: herbsiddha@gmail.com