நலம் வாழ

முதுமையும் சுகமே 25: நலம் பயக்குமா மருந்துகளின் கூட்டணி?

செய்திப்பிரிவு

டாக்டர் சி. அசோக்

வியாதி வரும் முன் தற்காத்துக்கொள்பவர்களைவிட வியாதி வந்த பின்பு அங்கலாய்த்துக் கொண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் பலர். மருந்துகளும் பக்க விளைவுகளை உண்டு பண்ணும் என்பதை உணராதவர்கள் அவர்கள். நாற்பது வயதைக் கடந்தவர் களில் பலர் மூன்றில் இருந்து முப்பது மாத்திரைகள்வரை எடுத்துக் கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்வைக் கட்டமைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

முதுமையில் அறிந்தோ அறியாமலோ உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கிவிட்டதன் பயனாகப் பல்வேறு மருந்துகளை எடுக்கும் சூழல்களுக்குத் தள்ளப்படுகிறோம். இதற்குப் பெயர்தான் polypharmacy அதாவது நான்கில் இருந்து அதற்கு மேல் மருந்துகள் எடுப்பவர்களை இப்படி வகைப்படுத்துகிறது மருத்துவ உலகம் முதுமையில் நாம் எடுக்கும் மருந்து களின்மீது ஏன் கவனம் கொள்ள வேண்டும் ?

# உணவும் மருந்தும் உறவாடலாம் அல்லது உறவாடிக் கெடுக்கும் பகையாளி ஆகலாம்.
# வந்திருக்கும் பல்வேறு நோய்களுக்கு ஏற்ப எடுக்கும் பல்வேறு மருந்துகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாமல் இருக்கலாம்.

இதற்கு என்ன காரணம்?

முதுமையில் அனைத்து உடல் உறுப்புகளும் தேய்மான திசை நோக்கிப் பயணிப்பதால் இது நிகழ்கிறது.
# தசைகள், ஈரல் அடர்வு குறைந்து கொழுப்பின் அடர்வு கூடுகிறது.
# உடலுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவது - சிறுநீரகச் செயல் திறன் குறைதல்.
# வந்திருக்கும் நோய்க்கூட்டங்கள், மன அழுத்தம், மனச்சோர்வு - நாளமில்லாச் சுரப்புக் குறைபாடுகளால் உணவு உண்ண முடியாமை அல்லது எடுத்துக்கொள்ளும் உணவுகளைச் சரிவர உட்கிரகிக்க இயலாமை.
# ஊட்டச்சத்து மற்றும் தாது சத்துகளின் குறைபாட்டால் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடலில் சரிவர வேலை செய்யாமல் உடலில் தேங்கிப் போதல்.

உணவும் மருந்தும்

முதுமையில் எந்தெந்த மருந்துகளை எந்தெந்த உணவுடன் கொடுக்க வேண்டும், கொடுக்கக் கூடாது என்பது பற்றிய புரிதல் அவசியம் வேண்டும்.
# இரும்புச் சத்து மாத்திரைகளை உணவுக்கு முன்பு 200 மி.லி நீருடன் பருகவும் ஆரஞ்சுப் பழச்சாறு போன்ற வைட்டமின் சி தாங்கிய உணவு இரும்புச் சத்தைச் சிறப்பாக உள் உறிஞ்ச உதவும் .
# இரும்புச் சத்து மாத்திரைகளை எடுக்கும்போது பால் சார்ந்த பொருட்கள், முட்டை, நார்சத்துள்ள உணவுகள், கால்சியம் மாத்திரைகள், டீ, காப்பி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்
# நடுக்கு வாதத்துக்கு (Parkinson) மருந்துகளை எடுக்கும்போது இரும்புச் சத்து மாத்திரைகளை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ உணவுக்கு 2 மணி நேரத்துக்குப் பின்போ எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல; புரத உணவைக் குறைக்க வேண்டும்.
# நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுக்கும் நேரத்தில் கால்சியம், பிற கனிமச்சத்து மாத்திரைகள், அலுமினி யம் கலந்த அமிலச் சமநிலை (Antacids) மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
# பூஞ்சைத் தொற்று நோய்களுக்கான (Fungal infections) மருந்துகள் எடுக்கும்போது இரைப்பை அமிலச் சுரப்பு மருந்துகள் கூடாது.
# புரதச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் ரத்த உறைவுக்கான மருந்துகள் - வலிப்பு நோய்க்கான மருந்துகளை எடுத்தால் உங்கள் மருத்து வரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
# இரைப்பு (Asthma) நோயாளர் களுக்கு காப்பி, அதிகப் புரத உணவுகள் ஆகாது.
# திராட்சைப் பழச்சாறு சிலவகை ரத்தக் கொதிப்பு (Calcium channel blokers), கொழுப்பு குறைப்பு மருந்துகளுக்கு (Statins) உகந்ததல்ல.
# மனச்சோர்வு மருந்துகளுடன் பதப்படுத்தப்பட்ட பழைய சீஸ், இறைச்சி, மீன், சோயா, மதுபானங்கள் கூடாது.

மதுவும் மருந்தும்

வலி மாத்திரைகள், மன அழுத்த, மனச்சோர்வு மாத்திரைகள், குடியை நிறுத்தக் கொடுக்கும் மருந்துகள், நீரிழிவு நோய்க்கான மருந்துகள், ஒப்பியாடு மருந்துகள் - இவற்றில் ஒன்றோ பலவோ எடுத்துக்கொண்டிருக்கும்போது மது அருந்துவது உயிரையே போக்கக்கூடும்.

சுவை உணர்வும் மருந்துகளும்

புற்று நோய், தொற்று நோய்கள், சிலவகை இதய நோய்கள், நரம்பியல் கோளாறுகள் இவற்றுக்காக எடுக்கும் மருந்துகள் நாவின் சுவை மொட்டை மொட்டையடித்து வாய்ப் புண், வாயில் பூஞ்சைத் தொற்றுக்களை (Candidiasis) உண்டாக்கலாம்.

தீர்வுதான் என்ன?

# முதியோர் தங்களுக்கு வந்திருக்கும் நோய்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
# நோய்களுக்கு ஏற்ற உணவை உண்ண வேண்டும்.
# உங்களுக்கு என்று இருக்கும் நம்பிக்கையான மருத்துவரிடம் வந்துள்ள நோய்கள், அதற்கு எடுக்கும் மருந்துகள், மருந்தால் வரும் பக்க விளைவுகள், உணவு பற்றி ஆலோசனை பெறுங்கள். அதற்கு அவர் சரியான புரிதலை உடைய மருத்துவராக இருக்க வேண்டும்.

முடிந்தவரை மேலை நாட்டில் உள்ளதுபோல் முதியவர்களின் பிரச்சினையைத் தீர்க்க மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், உணவியல் நிபுணர் - உடல் இயங்கு இயல் பயிற்சியாளர் குழுவாக இணைந்து மருத்துவம் செய்யும் நாள் முதியவர் களின் ஆரோக்கியம் பேணி காக்கும் நாளாக இருக்கும்.

இளமையும் முதுமையும்

முதுமையில் வந்திருக்கும் சிறு நோய்களால் கூட மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் முதுமையில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அதற்கு எடுக்கும் மருந்துகளிலும் உணவுகளிலும் நிறையக் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இன்றைய மருத்துவச் சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. வாழ்நாள் முழுதும் தன்னை எரித்துத் தன் குடும்பம் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்களின் இருப்பும் இறப்பும் முதுமையில் கௌரவமாக இருக்க வேண்டும். இது நடக்க வேண்டும் என்றால் இளமையிலே அறம் சார்ந்த சமூகவழிக் கற்றல் வேண்டும்.

இந்த மருந்துகள் இரைப் பை மற்றும் குடல் புண்களை உண்டாக்கலாம்:

பூஞ்சைத் தொற்று, புற்று நோய், எலும்புப் புரை நோய் எதிர்ப்பு (Osteoporo sis), உடல் நோய் எதிர்ப்புச் சத்துக் குறைப்பு மருந்துகள், சிலவகை நரம்பியல் நோய்கள், வலி நிவாரணி மருந்துகள்.

இந்த வகை மருந்துகள் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கலாம்:

# சர்க்கரை நோய் மருந்துகள்
# மது

இந்த வகை மருந்துகள் பசியின் மையை உண்டாக்கலாம் :

# சிலவகைத் தொற்றுநோய் எதிர்ப்பு மருந்து கள்
# புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள்
# இரைப்பு நோய் (Asthma) மருந்துகள்
# சில வகை இருதய நோய்க் கான மருந்துகள்

இந்த வகை மருந்துகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகப்படுத்தலாம்:

# வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள்
# சிறுநீர் பெருக்கி மருந்துகள்
# ரத்தக் கொதிப்பு குறைப்பு மருந்துகள்
# கர்ப்பத்தடை மாத்திரைகள்
# சிலவகை ஹார்மோன் மருந்துகள்
# சில வகை வைட்டமின்கள், காஃபீன் (Caffeine), மனநல மருந்துகள்.

இந்த வகை மருந்துகள் வயிற்றுப் போக்கை உண்டாக்கலாம்:

கிருமித் தொற்று எதிர்ப்பு மருந்துகள், யூரிக் அமிலத் தேக்கத்தால் சிறு மூட்டுக்களில் வரும் வலிக்கான (Gouty Arthritis) மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மற்றும் குடல்பாதை நோய்க்கு எடுக்கும் சில வகை மருந்துகள்.

இந்தவகை மருந்துகள் பசியை அதிகப்படுத்தலாம்:

#மன அழுத்த, மனச்சோர்வு மருந்துகள்
# சில வகை வலிப்பு நோய் மருந்துகள்
# ஸ்டீராய்டு (Steroid) மருந்துகள்.

(நிறைவடைந்தது.) கட்டுரையாளர்,
குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

SCROLL FOR NEXT