ராமசாமி
உணவே மருந்து என்றிருந்த காலம் போய் அதுவே விஷமாக மாறியுள்ள இன்றைய காலகட்டத்தில் நம் உடல் பற்றி நாம் அறிந்திருப்பது அவசியம். முக்கியமாக, நமக்கு வயதாகிவிட்டது என்றால், உடலின் மாற்றங்களையும் அதன் பாதிப்புகளையும் அவற்றைக் குணப்படுத்தும் நல்ல மருத்துவர்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
நாற்பதுகளின் இறுதியில் பெரும்பாலான ஆண்கள் சிறுநீர் பாதை அடைப்பால் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீர்ப்பாதை அடைப்புக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது ‘புராஸ்டேட் சுரப்பி பெருத்துவிடுதல்’ கருதப்படுகிறது.
புராஸ்டேட் சுரப்பி பெருத்து விடுதல்
புராஸ்டேட் சுரப்பி பெருத்து விடுதல் காரணமாக, சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு, முழுமையாகச் சிறுநீர் கழிக்க இயலாத நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையில் மீதமுள்ள சிறுநீர் பெரும் தொற்றை ஏற்படுத்தி மோசமான நிலைக்குக் கொண்டுசெல்லும். சிலருக்குச் சிறுநீர் சொட்டு சொட்டாக வடிந்து தீராத அவஸ்தையை உண்டாக்கும்.
புராஸ்டேட் சுரப்பி பெருத்து விடுவதால், ஏறத்தாழ 5 முதல் 10 சதவீத ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். புராஸ்டேட் சுரப்பியின் தசைகளைச் சுருக்கியோ விரித்தோ சிறுநீர் கழிப்பதே இதற்கான எளிதான சிகிச்சை. மற்றொரு எளிதான சிகிச்சை முறை எண்டாஸ்கோப்பி. இந்த முறையின் மூலம் அடைப்பைச் சரிசெய்யலாம், ஆனால் மீண்டும் வராது என்று உறுதி அளிக்க இயலாது.
பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு
பெண்களுக்கு இந்த அடைப்பு எண்ணற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மாதவிடாய் தருணத்தில் அவர்களது ‘ஈஸ்ட்ரொஜென்’ அளவு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் குறையும். இதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ‘பாக்டீரியா’ கலந்து சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படும். பொதுவாக, இது போன்ற பிரச்சினைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தாலே போதும். இந்தப் பாதிப்பை நிரந்தரமாகத் தடுக்க, சில எளிய முறைகளும் உள்ளன. மாதவிடாய் நின்றவர்களுக்கு ‘டிராபிகல் ஈஸ்ட்ரொஜென்’ களிம்பு தடவுவதன் மூலம் நீர்ப்பாதையைப் பலப்படுத்தலாம். ஆனால், மார்பகம் அல்லது கர்ப்பப்பைப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்தக் களிம்பு பரிந்துரைக்கப்படுவதில்லை.
முதுமையில் வேதனை
சிறுநீர் கல் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். செயற்கைக் குழாய் ‘கத்தீட்டர்’ எனப்படுவது சரியாகப் பொருத்தப்படவில்லை என்றாலும் சுத்தமாக இல்லையென்றாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு. முதுமையானவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக நீரடைப்பு உள்ளது. நோவாலும் தனிமையின் வாட்டத்தாலும் தள்ளாடும் முதியவர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாக இந்தப் பிரச்சினை உள்ளது. ஆனால், மேற்கூறிய எந்த அறிகுறியும் முதியவர்களிடம் தென்படாது. எனவே, அவர்கள் சிறு அசௌகரியத்தைப் புரிந்துகொண்டு, தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம், அவர்களின் முதுமையை வலிமையாக்கலாம்.
எவ்வாறு தவிர்க்கலாம்?
நாம் உண்ணும் உணவில் நல்ல பாக்டீரியா இருப்பது அவசியம். அதை அன்றாடம் பயன்படுத்தும் தயிரின் மூலம் நாம் பெறலாம். கொத்தமல்லித்தழையைத் துவையலாக உண்டால், நீரைக் கொதிக்கவைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு தழை சேர்த்து இறக்கி நாள் முழுவதும் பருக, சிறுநீர் சம்மந்தப்பட்ட இன்னல் விலகும்.
சிறுநெருஞ்சிப்பூ - இது இயற்கை தந்த அருமருந்து. இதை வாரம் ஒருமுறை நீரில் போட்டு கொதிக்க விட்டு ஆறிய பின் பருகி வரச் சிறுநீர் அடைப்பு தீரும்.
– நாம் நமது உடலைப் பேணிக் காத்தல் அவசியம். முக்கியமாக கர்ப்பப்பை, ஆசனவாய், பிறப்புறுப்புகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். உடலின் தேவைக்கு ஏற்ப, வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். மேலே உள்ள வழிமுறைகளை நமது மனத்தில் இருத்தி, ‘அடைப்பைத் தவிர்ப்போம் நாற்பதை நமதாக்குவோம்’.