- ச.ச.சிவசங்கர்
இந்திய அளவில் கண் மருத்துவத்தில் தனக்கென தனி இடத்தைப் பெற்றது ‘அரவிந்த் கண் மருத்துவமனை’. தரமான கண் மருத்துவ சிகிச்சைக்காக உலகப் புகழ்பெற்றது இந்த மருத்துவமனை. மதுரையில் எளிமையாகத் தொடங்கப்பட்ட ‘அரவிந்த் கண் மருத்துவமனை’, அதன் தனித்துவமான பயணத்தின் விளைவாக இன்று கண் மருத்துவ சிகிச்சையில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் தனது சேவையை அளித்துவந்த இந்த மருத்துவமனையின் சேவை சமீபகாலமாக சென்னை மக்களுக்குப் பயன்படும்வகையில் பூந்தமல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
வட மாவட்ட மக்களுக்கு…
‘லட்சக்கணக்கான மக்களுக்கு உலகத் தரத்தில் கண் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்’ என்ற லட்சியத்துடன் மருத்துவர் வேங்கடசாமியால் தொடங்கப்பட்டது அரவிந்த் மருத்துவமனை. தொடக்க காலத்தில் இருந்தே மற்ற கண் மருத்துவமனைகளிலிருந்து மாறுபட்டு தனித்துவத்துடன் இந்த மருத்துவமனை சிகிச்சையை அளித்துவருகிறது. இந்த மருத்துவமனையின் கிளை அமைந்துள்ள அனைத்து நகரங்களிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்கிவருகிறது.
சென்னை மாநகரை ஒட்டி பல புறநகர்ப் பகுதிகள் புதிதுபுதிதாக உருவாகியுள்ளன. ஆனால், அங்கெல்லாம் முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கான வசதி மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் தனது சேவை பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் சென்னையில் 2017-ல் மருத்துவமனையின் கிளை தொடங்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெறும் வகையில் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாடுகள் உள்ளன. இங்கு வரும் நோயாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது: இலவசப் பிரிவு, சலுகைப் பிரிவு, பொதுப் பிரிவு. இவற்றில் நோயாளிகளின் விருப்பத்துக்கேற்ப தங்களது பிரிவைத் தேர்வுசெய்துகொள்ளலாம். மூன்று பிரிவுகளிலும் கட்டணம் மட்டுமே வேறுபடுகிறது, மற்றபடி சிகிச்சை முறையில் ஒரே தரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் ஏழை, நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். அத்துடன் சாதாரண மக்களை அதிகமாகச் சென்றுசேர வேண்டும் என்பதற்காக வாரம்தோறும் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கும் இலவசக் கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டுவருகிறது.
சூழலுக்கு இணக்கம்
தற்போது பல பெரிய மருத்துமனைகள் வந்துவிட்டன. ஆனாலும் கண் சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனையை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதற்கு, தனித்துவமான சிகிச்சை முறைகள் அடையாளமாக இருப்பதே காரணம். கண்ணின் பாகங்களான விழித்திரை, பார்வை நரம்பு, விழித்திரைக் குருதிக்கலன்கள், விழி வெண்படலம், கருவிழி என ஒவ்வொன்றுக்கும் சிகிச்சை அளிக்க இங்கே தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் நிபுணத் துவம் கொண்ட பல மருத்துவர்கள் இருக்கின்றனர். இதனால் கண் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடுகளிலிருந்துகூட அதிகமானோர் இங்கு வந்து செல்கிறார்கள். பொதுவாக, கண்ணாடி வாங்க வருபவர்களுக்குக்கூட பரிசோதனை செய்த பிறகே இங்கே கண்ணாடி வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர்கள் சொல்வதை மட்டுமே கருத்தில்கொள்ளாமல், அவர்களின் ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் பரிசோதித்த பிறகே ஆலோசனையோ சிகிச்சையோ வழங்கப்படுகிறது என்பதே அரவிந்தின் சிறப்பு.
தொடரும் முன்னேற்றம்
இந்த மருத்துவமனையைப் பொறுத்த அளவில் அனைவருக்கும் பார்வை கிடைக்க வேண்டும், அதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், இங்கு வரும் நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் குறைத்திருக்கிறார்கள். அது போக கண் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரை இனம் காண்பதற்காக ஒவ்வொரு வாரமும் கிராமங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. அதில் அறுவை சிகிச்சை தேவைப் படும் பிரத்யேக நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“மருத்துவமனை பராமரிப்பிலும் தனிக் கவனம் செலுத்துகிறோம். மருத்துவ சிகிச்சையில் தரத்தைக் கடைப்பிடிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையிலும் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மருத்துவமனை வளாகத்திலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பூங்காவுக்கும் கழிவறைகளுக்கும் பயன்படுத்துகிறோம். சென்னையின் பிரச்சினைகளில் முதன்மையாக இருப்பது நீர் என்பதால், மழைநீர் சேகரிப்பு வசதியையும் செய்துள்ளோம். மின்சாரத் தேவைக்காகச் சூரிய மின்தகடுகளைப் பயன்படுத்து கிறோம். மொத்தத்தில் சூழலுக்கு உகந்த வகையில் மருத்துவமனையை அமைத்திருக்கிறோம்” என்கிறார் நிர்வாக மேலாளர் ஞானசேகரன்.
இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியாக மருத்துவர் வேங்கடசாமியால் தொடங்கப்பட்ட ‘ஆரோ லேப்’ மிக முக்கியமான பணியைச் செய்துவருகிறது. அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உள்விழி லென்ஸ் சாமானிய மக்களுக்குக் கட்டுப்படியாகாத விலையில் விற்கப்பட்டுவந்தது. இப்போது அந்த உள்விழி லென்ஸ் அனைத்து மக்களுக்கும் கட்டுப்படியாகும் விலையில் ‘ஆரோ லேப்’ தயாரித்து அளித்துவருகிறது.
தமிழ்நாட்டில் கிளைவிரித்திருக்கும் இந்த மருத்துவமனை ஏன் உலகளாவிய கவனம் பெற்றது என்பதற்கான காரணங்களை, இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ‘சோஷியல் இன்னோவெஷன் ரிவ்யு’ போன்ற அமைப்புகள் தேர்ந்தெடுத்த முன்மாதிரியாகவும் பாராட்டுக்குரிய நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் இந்த மருத்துவமனை உள்ளதில் வியப்பேதுமில்லை.
ஆண்டுக்கு 5 லட்சம் அறுவை சிகிச்சை
சென்னை அரவிந்த் மருத்துவமனை பதினோரு தளங்களைக் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 4,000 வெளி நோயாளிகளைக் கையாளும் திறனும் 400 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளும் திறனும் கொண்டது இந்த மருத்துவமனை.
உலக அளவில் கண் மருத்துவத்துக்குப் புகழ்பெற்ற இந்த மருத்துவமனையின் கிளைகள் கடந்த ஆண்டு 44 லட்சம் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளன. 5 லட்சம் அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் சென்னை மருத்துவமனையில் மட்டுமே ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சையும் 12,500 அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
கட்டுரையாளர் தொடர்புக்கு: sivasankar.ss@hindutamil.co.in