திருவருட் செல்வா
நம் அனைவரின் உடல் நிலையும் ஆட்டம் காணும் மாதமாக ஆடி இருக்கிறது. கோடையில் சுட்டெரிக்கும் வெயிலில், நோய்க் காரணிகள் வாழ ஏதுவான சூழல் இல்லாமல் அவை செத்து மடியும். ஆனால், ஆடி மாதத்தில் வெயில் சற்றுக் குறைந்து, காற்றும் கூடவே தென் மேற்குப் பருவ மழையும் தொடர்வதால், நோய்க் காரணிகளுக்குரிய தொற்றுகள் வளர ஏதுவான காலமாக ஆடி இருக்கிறது.
ஆடியில் ஏற்படும் உடல் பிரச்சினைகள்
ஆடி மாதக் காற்று, நமது உடலை வாட்டி எளிதில் சோர்வடையச் செய்யும். காற்று நிறைந்துள்ள பகுதியில், நீர்த்தன்மை நிலைத்திடாமல், காற்றானது நீரை விரைவில் உறிஞ்சிவிடும். இதனால், ஆடி மாதத்தில் நம் உடம்பில் வறட்சி ஏற்படும். வெயில் காலத்தைப் போன்று, ஆடி மாசத்திலும் உடல் வறட்சியைப் போக்கக் குளிர்ச்சி தரும் இளநீர், நீர்மோர் போன்றவற்றைப் பருக வேண்டும்.
மேலும், ஆடி மாதத்தில், மூட்டுவலி உள்ளவர்களுக்கு வலியின் தாக்கம் சற்று அதிகரிக்கலாம். பித்த வெடிப்பு, மூலம், ஆசன வெடிப்பு, வறட்சி தொடர் பான தோல் நோய்கள், பொடுகு போன்றவை ஏற்படலாம். செரிமானம் தொடர் பான பிரச்சினைகள் ஏற்படலாம். செரிமானமின்மை, வாந்தி, மலச்சிக்கல், பேதி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
வேப்பிலை, மஞ்சள் மகிமை
ஆடி மாத விழாக்களில் வேப்பிலை, மஞ்சள், கூழ் போன்றவற்றுக்கு முக்கியப் பங்குண்டு. மஞ்சளுக்குப் பலவித நற்குணங்கள் உள்ளன. கிருமி நாசினியாகவும் புழுக் கொல்லியாகவும் அது செயலாற்றுகிறது. மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம், காற்றில் உள்ள தொற்றுக் கிருமிகளைக் கொல்ல முடியும்; ஈ போன்ற பூச்சிகளின் மூலமாகத் தொற்றுக்கள் பரவுவதையும் தடுக்கும். மஞ்சள் கயிறு கட்டுவதும் இதே காரணத்துக்காகத்தான். மஞ்சள் தண்ணீர் போன்றவற்றை மீறி ஒருவேளை தொற்றுக்கள் நெருங்கினால், நம்மைத் தாக்காமல் இருக்கவே வேப்பிலை. வேப்பிலைக்கும் பல வித நற்குணங்கள் உண்டு. கிருமிநாசினி செய்கை இதற்கும் உண்டு. அதனால் காற்றில் பரவக்கூடிய கிருமிகளைக் கொன்று பரவ விடாமல் தடுக்கிறது.
ஊட்டமளிக்கும் கூழ்
ஆடியில் ஊற்றப்படும் கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ் போன்றவை, உடல் வறட்சியைப் போக்குவதுடன் உடலுக்குக் குளிர்ச்சியும் தருகின்றன. உடல் தாதுகளை வலுப்படுத்தும் நுண் கனிமங்கள் நிறைந்த கூழானது, உடலுக்கு ஊட்டம் அளிக்கும். ஒரு வேளை உடலை நோய் தொற்றினாலும் அத்தொற்று வீரியமடைய விடாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கவல்லது கூழ். கூழில் மோரும் சேருவதால், நம் குடலுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உற்பத்தியை அதிகரித்து செரிமானம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காக்கின்றன. அதில் சேர்க்கப்படும் வெந்தயம் குளிர்ச்சி பொருந்தியது மட்டுமல்லாமல் நார்ச் சத்தும் நிறைந்தது, உடல் வறட்சியைக் குறைக்க வல்லது.
ஆடியை வெல்வதற்கு...
# ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்
# நீர் மோர் சேர்த்துக்கொள்ளுங்கள்
# வறட்சியான உணவு வகைகளைத் தவிருங்கள்
# நீர்க் காய்கறிகளான வாழைப்பூ, வாழைத்தண்டு, போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
# நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்
# எலுமிச்சை, சாத்துக்குடி, போன்ற குளிர்ச்சி நிறைந்த பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
# மல்லி, மிளகு, சீரகம், மஞ்சள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்
# தோசை போன்ற வறட்சி உணவைத் தவிருங்கள்
ஆடி மாசத்தில் மிகுந்த எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது நம் உடல் நலனுக்கு அவசியம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிய அம்சங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆடியில் ஏற்படக்கூடிய உடல் பிரச்சினைகளிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளலாம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: siddhathiru@gmail.com