நலம் வாழ

கண்ணுக்குத் தெரியாதவர்களால் காப்பாற்றப்படும் உயிர்

செய்திப்பிரிவு

பவித்ரா 

‘எனது குழந்தைக்கு ஏழு நாட்களில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யா விட்டால் இறந்துபோய்விடும்’ என்பது போன்ற மன்றாடல்களை இணையதளங்களின் செய்திப் பக்கங்களில் தினசரி கடப்பவராக நீங்கள் இருக்கலாம். அதைப் பற்றிய கதைதான் இது. பிரம்மாண்டமான கட்டியுடன் குழந்தைகளின் படம், கணவனின் இதய அறுவை சிகிச்சைக்காக எனக் கோரிக்கை விடுக்கும் நெருங்கிய உறவினர்களின் வேண்டுகோள்கள் போன்றவை நம் மனத்தைக் கனக்க வைக்கும்.

ஒரு வாரத்திலிருந்து 15 நாட்களில் அவசரமாக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் மருத்துவச் செலவுக்காகக் கண்ணுக்குத் தெரியாத இணைய வாசிகளின் கருணையையும் பணத்தையும் கோரும் திரள் நிதி திரட்டல் (crowd funding) தளங்கள்தாம் இப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடுகின்றன. இந்தியாவில் மட்டும் சென்ற ஆண் டில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக திரள் நிதி மூலம் மக்களிடம் திரட்டப்பட்ட பணம் 272 கோடி ரூபாய்.

திரளும் நிதி

உள்ளாடைகள், அலங்காரப் பொருட்கள், வீரிய மருந்துகள் தொடங்கி இணை தேடுவதுவரை எல்லாம் நிகழும் இணையச் சந்தையில்தான், ஒருவர் தனது குழந்தையையோ மனைவியையோ உறவினரையோ காப்பாற்றுவதற்கான நிதிக் கோரிக்கையையும் முன்வைக்கிறார். இணையத்தின் மூலம் மோசடி பெருகி வரும் நாட்களில், ஒருவருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் விடுக்கப்படும் கோரிக்கை விளம்பரங்களையும் சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இணையவாசிகளுக்கு இல்லாமல் இல்லை.

ஆனாலும், மருத்துவ அவசர உதவிகளுக்காகத் திரள் நிதி திரட்டும் ‘மிலாப்’ என்ற இந்திய நிறுவனம் 2018-ம் ஆண்டு 124 கோடி ரூபாய் திரட்டி 830 கல்லீரல் மாற்று சிகிச்சைகளுக்கு உதவியுள்ளது. ஒரு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு 15 லட்ச ரூபாய். இந்தியாவின் முன்னணித் திரள் நிதி திரட்டும் நிறுவனமான மிலாப்-ஐ அடுத்து ‘கெட்டோ’, கடந்த ஆண்டு 97 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. இதையடுத்து ‘இம்பாக்ட் குரு’ என்ற நிறுவனம் ஐம்பது கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது.

ஒரு மாத காலத்துக்குள் மருத்துவ சிகிச்சை மூலம் காப்பாற்றக் கூடிய நிலையில் உள்ள பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சிகிச்சை செலவாகக் கூடிய நோயாளிகள் பயன்பெறும் வண்ணம் இந்தத் திரள் நிதி திரட்டல் தளங்கள் செயல்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைகள், கீமோதெரபி சிகிச்சைகளும் இதில் சேரும். பிறந்தவுடன் தீவிர சிகிச்சை தேவைப் படும் குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைச் செலவுகளுக்கும் திரள் நிதி திரட்டல் தளங்கள் பொறுப்பேற்கின்றன.

ஒளிப்படங்கள் முக்கியம்

இணையம் வழியாக மோசடிகள் பெருகியிருக்கும் நாட்களில் ஒரு நோயாளியின் நம்பகத் தன்மையை நன்கு ஆராய்ந்த பின்னரே சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் கோரிக்கையை வெளியிடுவதாக ‘மிலாப்’ தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாயுக் சவுத்ரி கூறுகிறார். இணையத்தில் வாசிக்க வருபவர், ஒரு ஒளிப்படத்தின் மூலம் கவரப்படுவதற்கு ஒரு நொடியில் ஐந்தில் ஒரு பங்கு காலமே அவகாசம் இருக்கிறது. முகநூலில் உலவும் ஒருவர் ஒரு நொடியில் ஐந்து விஷயங்களைப் பார்வையிடுகிறார். ஒரு ஒளிப்படத்தில் நின்று நிதானித்து அதை ‘கிளிக்’ செய்து தனது வங்கிக் கணக்கிலிருந்து எங்கோ தொலைவில் இருக்கும் அந்த நோயாளிக்கு உதவுவதற்கு, அந்த ஒளிப்படம் ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியமானது என்கிறார் மாயுக் சவுத்ரி.

சந்தேகம் வேண்டாம்

அத்துடன் ஒரு ‘நிதி உதவிக் கோரிக்கை’ பற்றிச் சந்தேகம் இருந்தால், அதைக் குறித்துப் புகார் செய்வதற்கும் ‘ரிப்போர்ட்’ பட்டன் உள்ளது. நிதி உதவி கோரும் நோயாளிக்கு சிகிச்சை முடிந்த பிறகான விவரங்களும் ஆவணங்களாக மருத்துவமனையின் முத்திரை பதித்த கடிதங்களுடன் வெளியிடப்படுகின்றன. அத்துடன், அவசர சிகிச்சையைப் பெறும் நோயாளியின் கணக்கில் அவருக்கான மருத்துவ உதவித் தொகை செலுத்தப்படுவதில்லை. மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடை முறையைத்தான் திரள் நிதி திரட்டும் தளங்கள் செயல்படுத்துகின்றன.

திரள் நிதி திரட்டுவதன் வாயிலாக மட்டுமே ஒரு நோயாளிக்கான முழு சிகிச்சைச் செலவையும் பூர்த்தி செய்ய முடியாது. அறக்கட்டளைகள், முதலமைச்சர் நிவாரண நிதி போன்ற அரசுத் திட்டங்கள், நோயாளி சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உதவி நிதி ஆகியவற்றை வாங்குவதற்குத் திரள் நிதி திரட்டிய ஆவணங்கள் கூடுதல் பயனளிப்பதாக உள்ளன.

கருணையின் வரையறை

இணையத்தில் மக்களிடம் மருத்துவ உதவி சார்ந்து தோன்றும் கருணையிலும்கூட வரையறைகளும் வித்தியாசங்களும் உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் பத்து வயதுக்கு உட்பட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தை நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிகமாகவே குறித்த காலத்தில் நிதி கிடைத்துவிடுகிறது. ஆனால், பத்து வயதுக்கு மேலுள்ளவர்களின் நிதிக் கோரிக்கைகளுக்குச் செவிமடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒரு குழந்தையின் ஒளிப்படம்தான் பண உதவி செய்பவர்களைக் கூடுதலாகப் பாதிக்கிறது.

திரள் நிதி திரட்டல் வாயிலாக, குழந்தைகளுக்கு வரும் சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் திறனும் தொழில்நுட்பத் திறனும் பெருகியுள்ளது இன்னொரு அம்சம். அதைப் போலவே, வெற்றிவாய்ப்புகள் குறைவாகவே உள்ள கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் தரமும் வெற்றி சதவீதமும் சமீபமாக அதிகரித்து வருகின்றன.

திக்கற்றோரைக் காப்பாற்றும் இணையம்

‘பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா’வின் 2018-ம் ஆண்டறிக்கையின்படி, 55 கோடி இந்தியர்களை வறுமைக்குத் தள்ளுவதில் மருத்துவச் செலவே தலையாய இடம் வகிக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 4.5 சதவீதம் அது. அரசு சார்ந்த பொதுநல சேவையின் தரமும் வசதிகளும் போதுமான அளவில் இல்லாத நிலையில், இந்தியாவின் நகர்ப்புற மக்கள் 56 சதவீதமும் கிராம மக்கள் 49 சதவீதமும் தனியார் மருத்துவமனைகளை நாடும் சூழ்நிலையே உள்ளது.

பெரிய மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளும் அளவும் சேமிப்பும் இல்லாத, உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருக்கும் நிலையில் உறவினர்களிடமோ நண்பர்களிடமோ உதவி கோர முடியாத நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கான சாத்தியம் இணையத்தில் ஏற்பட்டுள்ளது என்ற தகவல், திக்கற்றுத் தவிப்போருக்கு ஒரு நம்பிக்கைச் செய்திதான்.

SCROLL FOR NEXT