டாக்டர் சி. அசோக்
கூட்டு மருத்துவ முறையால், உடலியல் பயிற்சியால், மனப் பயிற்சி யால் மூட்டுவலியை முளையிலையே கிள்ளியெறிய முடியும். தேய்ந்த மூட்டைப் புதுப்பிப்பது, கருகிய விதையை முளைக்க வைப்பதைப் போலக் கடினம். ஆனால், வலியைக் குறைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே தேய்ந்த மூட்டு மேலும் தேய்ந்து போகாமல் தடுப்பது சாத்தியம். இதற்குத் தொடர் முயற்சி தேவை.
தனிப்பட்ட முயற்சிகள்
1. நடைப்பயிற்சி: அதிக எடை யால், அதிக நடையால் மூட்டுத் தேய்மானம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகலாம். எனவே, தகுந்த உணவுக் கட்டுப்பாடு, உடலியங்கு நிபுணரின் துணையுடன் நடைப்பயிற்சியைப் பயில வேண்டும்.
2. யோகாவும் நீச்சலும் மூட்டுவலிக்கான சிறந்த தீர்வுகளில் வில்லங்கம் இல்லாத தீர்வுகள்.
வலி நிவாரணிகள்
மூட்டுவலி வந்துவிட்டால் வலி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் கடுமை யான வயிற்றுப் புண்ணில் தொடங்கி சிறுநீரகச் செயல் இழப்புவரை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். மூட்டுவலிக்கு வலி மருந்துகளை மட்டும் நம்பியிருப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய கதையாகிவிடும்.
சில மாத்திரைகள் மூட்டுவலியைக் குறைக்க கொஞ்சம் உதவலாம். இவற்றால் நோயில் எந்தவித மாற்றமும் இல்லாது போனாலும், மூட்டு தேய்மானத்தைக் குறைத்து மூட்டுச் சவ்வுகளுக்குச் சத்துக்களைக் கொடுக்கக்கூடியவை. எனவே, மூட்டு வலிக்கு முதன்மையான தீர்வு வலி மாத்திரை இல்லை.
சிலருக்கு மூட்டுக்கு உள்ளேயே ஊசி மூலம் ஸ்டீராய்டு (அ) இதற்கெனப் பிரத்யேகமான மருந்தைச் செலுத்தினால் பயன் கிடைக்கும். இருந்தாலும், இதில் நிறைய பக்க விளைவுகள் இருப்பதால், தகுதி வாய்ந்த மருத்துவர்களின் துணையுடன் போட்டுக்கொள்ள வேண்டும்
இயன்முறை சிகிச்சை
இயன்முறை சிகிச்சையில் (Physiotherapy) பல வகைகள் உள்ளன. மூட்டுகளை வலுவேற்றும் பயிற்சி, மின்சிகிச்சை (Electrotherapy), மெழுகு ஒற்றடம் என. இது போன்ற சிகிச்சைகள் மூட்டில் ஏற்பட்ட வலியைக் குறைத்து, தசை இறுக்கத்தைத் தளர்த்தி மூட்டுகளின் அசைவை முறைப்படுத்தும். சித்த மருத்துவத்தில் இருக்கும் சில தைலங்கள், உள்மருந்துகள் பாங்கான பலன்களைத் தரும். தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அறுவை சிகிச்சை யாருக்குத் தேவை?
# மூட்டு வலியால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்கள்
# வலி குறைக்கும் மருந்துகளால் போதிய பலன் கிடைக்காதவர்கள்
# தரையில் சம்மணம் இட்டு அமரவோ நீண்டதூரம் நடக்கவோ முடியாதவர்கள்
# கால்கள் வளைந்துகொண்டு, நடப்பதற்குத் தடுமாறுபவர்கள்
அறுவை சிகிச்சைக்கான தகுதிகள்
1. நல்ல உடல் திடத்துடன் இருக்க வேண்டும்
2. நல்ல மனோதிடத்துடனும் ஊக்கத்துடனும் இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் பயப்படுபவர்களாக இருக்கக் கூடாது.
3. சரிவிகித சத்தான உணவை உட்கொள்வதுடன் உடற்பருமன் இல்லாமல் இருப்பது உத்தமம்
4. அறுவை சிகிச்சை முடிந்ததும் நடக்கணும், ஓடணும் என எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்
5. வயதுக்கேற்ற எதிர்பார்ப்பைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்
அறுவை சிகிச்சை வகைகள்
1. சீராக இல்லாத மூட்டுகளைச் சீர்செய்வது (Osteotomy)
2. தேய்ந்த மூட்டின் ஒரு பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, செயற்கை மூட்டை பொருத்துவது (Partial Joint Replacement)
3. பழுதடைந்த மூட்டை அகற்றிவிட்டு, செயற்கை மூட்டைப் பொருத்துவது (Total Joint Replacement). இந்த சிகிச்சை முறை இடுப்பு - முழங்கால் மூட்டுவலிக்கு சிறந்த பலனைக் கொடுக்கிறது. பலருக்கும் அறுவை சிகிச்சை என்றாலே ஒருவித பயமும் தயக்கமும் இருக்கின்றன. அது தேவையற்றது.
என்ன செய்யலாம்?
மூட்டுவலி முதுமையின் விரோதிதான் என்றாலும், அதற்குப் பலவிதக் கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. வெறும் மாத்திரைகளையோ போலி விளம்பரங்களையோ குருட்டுத்தனமான சிகிச்சைகளையோ நம்பி இருப்பது வாழ்க்கையையே முடக்கி போட்டு விடும். மூட்டு வலியில் இருந்துவிட்டு விடுதலை பெற வாழ்க்கை முறை, உணவு முறை, இயன்முறை சிகிச்சை, உடற்பயிற்சி, யோகப் பயிற்சியை இளமையில் இருந்தே விரும்ப வேண்டும்.
லட்சங்களைத் தாண்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதனால் நாட்பட்ட மூட்டுவலியில் தவிப்பவர்கள் பயமில்லாமல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
மூட்டு வலி உள்ளவர்கள் கவனிக்க...
* மூன்றாம் கால் அதாவது கைத்தடி, வாக்கர் போன்றவற்றை வருத்தப்படாமல் பயன்படுத்த வேண்டும். இது மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும்
* அதேபோல் மென்மையான, பொருத்தமான காலணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
* தரையில் அமர்வதையும் மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.
* கழுத்து வலி உள்ளவர்கள் திண்ணை உயரத் தலையணையைத் தவிர்த்து, உயரம் குறைந்த தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.
* முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய நேரம் உட்கார்ந்து இருப்பதும் தொலைக்காட்சியில் தன்னைத் தொலைப்பதும் கூடாது.
எலும்பு ஊக்கத்துக்கான உணவுகள்
* பனீர், பால் சார்ந்த பொருட்கள்
* பச்சைக் காய்கறிகள், கீரைகள், புளிப்புச் சுவை கொண்ட பழங்கள்
* சிறு தானியங்கள், கொட்டை வகைகள்
* மீன் - குறிப்பாகக் கடல் மீன்கள், முட்டை
* எலும்பு ஊக்கம் பெற வெறும் கால்சியம் தாங்கிய உணவு மட்டும் போதாது, புரதச் சத்தும் கண்டிப்பாகத் தேவை. காரணம் 50 சதவீத எலும்புகள் உருவாக புரதம் அவசியம் என்பதை மறக்கக் கூடாது.
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com