நலம் வாழ

வாசகர் பக்கம்: செஞ்சிலுவைச் சங்க நாள்

செய்திப்பிரிவு

செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் ஹென்றி டூனன்ட். இவருடைய பிறந்த நாளான மே 8-ம் தேதியே சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க நாள்.

1859-ம் ஆண்டில் ஆஸ்திரியப் படைகளுக்கும், பிரான்ஸின் சார்டீனியா நாட்டுப் படைகளுக்கும் இடையே வட இத்தாலியிலுள்ள சோல்பெரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் கொடூரத்தை நேரில் கண்டு வேதனையடைந்தார் ஜெனிவாவைச் சேர்ந்த இளைஞர் டூனன்ட். அதன் காரணமாகவே போரில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யச் செஞ்சிலுவைச் சங்கத்தை 1863-ம் ஆண்டில் அவர் உருவாக்கினார்.

உடல்நலம் பாதிக்கப்படுவோருக்கு மனிதாபிமானத்துடன் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் எங்கெல்லாம் மனிதர்களுக்குத் துன்பம் நேர்கிறதோ, அங்கெல்லாம் பாதிப்புகளைத் தடுக்கவோ அல்லது அவற்றின் பாதிப்புகளைக் குறைக்கவோ செஞ்சிலுவைச் சங்கம் பாடுபட்டுவருகிறது.

சர்வதேசச் செஞ்சிலுவை சங்கம் முக்கியமான ஏழு கொள்கைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது: மனிதநேயம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சுதந்திர உரிமை, சர்வதேச மயம்.

1864-ம் ஆண்டு ஜெனிவா உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டபோது செஞ்சிலுவை சங்கத்துக்கான முத்திரையாக வெள்ளைக் கொடியில் செஞ்சிலுவை அங்கீகரிக்கப்பட்டது.

1876-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகள் விடுத்த வேண்டுகோளின்படி செம்பிறையை முத்திரையாகக் கொண்ட தனிச் சங்கம் உருவாக்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம் செய்யும் அதே பணிகளை இஸ்லாமிய நாடுகளில் செம்பிறைச் சங்கம் செய்துவருகிறது.

- கிரிஜா மணாளன், திருச்சி.

SCROLL FOR NEXT