இந்தியாவுக்குப் பல விஷயங்களில் முன்னோடியாக விளங்கும் சென்னை மாநகரம், யோகாவிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளாலும், தனி நபர்களாலும் யோகா பயிற்சி வகுப்புகள் பரவலாக நடத்தப்படுகின்றன. வெறும் உடற்பயிற்சி, மனதுக்கான பயிற்சி என்பதையும் தாண்டி நோய் தீர்க்கும் சிகிச்சை மையமாகவும் யோகா பயிற்சி மையங்கள் உருவெடுத்துள்ளன. சில முக்கியமான யோகா மையங்கள்:
சிவானந்த யோகா, வேதாந்த மையம்
உள்ளத்துக்கான யோகப் பயிற்சிகள் பற்றி சுவாமி விவேகானந்தர் பேச, உடலுக்கான யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர். இன்றைய யோகாசனங்களுக்கும், பயிற்சி முறைகளுக்கும் இவரே முன்னோடி. சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சிவானந்த யோகா, வேதாந்த மையத்தில் ஒரு மாதம் முதல் ஓராண்டுவரையிலான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
பிராணாயாமம், சூரிய நமஸ்காரம், அடிப்படை ஆசனப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது தவிரத் தியானம், வேதாந்தம், சரிவிகித உணவு, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகளும் இங்கு நடக்கின்றன. ரூ. 200 முதல் ரூ. 16,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: >www.sivananda.org.in/chennai
கிருஷ்ணமாச்சார்ய யோக மந்திரம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி யோகா கற்றுக்கொண்டதால் புகழ்பெற்ற யோகா மையம் இது. கிருஷ்ணமாச்சார்ய யோக மந்திரத்தின் யோகா குரு டி.கே.வி. தேசிகாச்சாரிடம் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளைக் கருணாநிதி கற்றுக்கொண்டார்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள், கார்ப்பரேட் நிறுவனப் பணியாளர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாகப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. வெறும் பிராணாயாமம், ஆசனங்கள், தியானம் மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறையாகவும் யோகா இங்குக் கற்பிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: >www.kym.org
ஆசனா ஆண்டியப்பன் யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
ஆண்டியப்பன் என்ற தனிநபர் தொடங்கிய யோகா பயிற்சி மையம் இன்றைக்கு ஆசனா ஆண்டியப்பன் யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக உருவெடுத்துள்ளது. அண்ணாநகரில் உள்ள இந்தக் கல்லூரியில் அனைத்து நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. 48 வகையான நோய்களுக்கு யோகா தெரபி மூலம் தீர்வு காணும் பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இணையதளம் மூலமும் யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு: >www.andiappanyoga.com
136.1 யோகா ஸ்டுடியோ
50 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாசனத்தைக் கற்றுத் தரும் பிகார் ஸ்கூல் ஆஃப் யோகாவின் நவீன வடிவமே 136.1 யோகா ஸ்டுடியோ. இன்றைய நவீன இளைஞர்களுக்கு ஏற்றவாறு யோகாவில் பல புதுமைகளைப் புகுத்திக் கற்றுத் தருவதால் நவீன இளைஞர்களின் விருப்பத் தேர்வாக இந்த மையம் உள்ளது.
இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக யோகா பயிற்சியை வடிவமைத்துள்ளனர். ஆழ்வார்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் காலை 6.30 முதல் இரவு 7.30 மணிவரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு: >www.136point1.com
விவேகானந்த கேந்திரம்
விவேகானந்த கேந்திரம் நாடு முழுவதும் சாதாரண மக்களிடம் யோகாசனத்தைக் கொண்டு சென்றுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் 365 நாட்களும் யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. கன்னியாகுமரியில் பரந்து விரிந்துள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் சிறப்பு யோகாசனப் பயிற்சி முகாம்களில் வெளிநாட்டவர்களும் பங்கேற்கின்றனர்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகத்தில் காலை, மாலையில் ஒரு மாதப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. கட்டணம் ரூ. 500. இந்தப் பயிற்சி வகுப்பை முடித்தவர்கள் ஓராண்டுக்கு இங்கு வந்து இலவசமாக யோகாசனப் பயிற்சிகளைச் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு: >www.vivekanandakendra.org
கிருஷ்ண யோகா மையம்
கடினமான யோகாசனங்கள் மூலம் புகழ்பெற்ற பி.கே.எஸ். அய்யங்காரைப் பின்பற்றிக் கடந்த 25 ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி அளித்துவருகிறது கிருஷ்ண யோகா மையம். உடல், உள்ளத்துக்கான பயிற்சிகளுடன் பல்வேறு நோய்களுக்கான மருத்துவமனை போலச் செயல்படுகிறது இந்த மையம்.
மேலும் விவரங்களுக்கு: >www.krshnyoga.com
இது தவிர மேலும் பல எண்ணற்ற அமைப்புகளும், தனி நபர்களும் சென்னையில் யோகாசனப் பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.
(அடுத்த வாரம் தமிழகத்தின் மற்ற ஊர்களில் உள்ள யோகா மையங்களைப் பற்றிப் பார்க்கலாம்)
அரசு யோகா பயிற்சி மையங்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பயிற்சிகளை நடத்திவருகிறது. இந்தப் பயிற்சிகள் மாநில யோகாசன அமைப்பு மூலமாகவும், மாவட்ட அளவிலான யோகா பயிற்றுநர்கள் மூலமாகவும் நடத்தப்படுகின்றன.
"யோகா பயிற்சியின்போது வார்ம் அப் பயிற்சிகள், சூரியநமஸ்காரம், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். பயிற்சியின்போது 30 ஆசனங்கள் கற்றுத் தரப்படும். அவை உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும். அதேநேரம் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளிக்கக்கூடியது யோகா" என்கிறார் சென்னை மாவட்ட யோகா பயிற்றுநர் ஏ.ஜி. பழனிவேல்.
சென்னையில் உள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மட்டுமே யோகா தனிப் பாடமாகக் கற்றுத் தரப்படுகிறது. மற்றக் கல்வி நிறுவனங் களில் துணைப் பாடமாகக் கற்றுத் தரப்படுகிறது என்கிறார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் முதல் யோகா பயிற்றுநராக 1989-ல் நியமிக்கப்பட்ட கே.தமிழ்ச்செல்வன்.
"கோடை விடுமுறைக் காலத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விளை யாட்டுப் பயிற்சிகளில், இரண்டு நாட்கள் யோகா பயிற்சியும் வழங்கு கின்றனர். இதேபோலச் சென்னை ஷெனாய் நகரில் அனைத்து வயதின ருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் யோகா பயிற்சியளிக்கின்றனர்" என்கிறார் தமிழ்ச்செல்வன்.
- வி. சாரதா