நலம் வாழ

எலும்புக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி

வந்தனா சிவாமாயா கோவர்தன்

நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி என்ற சிறுதானியத்தில், நம் அன்றாட தேவைக்கான அவசிய ஊட்டச்சத்துகள் பலவும் பொதிந்துள்ளன.

பெருந்தன்மை மிகுந்த இயற்கையிடம், சிறுதானியங்களைப் பற்றிக் கேட்டால், "ஒரு சாதாரணத் தண்டிலிருந்து ஆயிரம் விதைகள் முளைக்கட்டும்" என்றே சொல்லியிருக்கும்.

மறக்கப்பட்ட சிறுதானியங்களை நமது உணவுப் பழக்கத்துக்குத் திரும்பக்கொண்டுவர கடந்த 25 ஆண்டுகளாக நவதான்யா (டெல்லியில் செயல்படும் சூழலியல் அமைப்பு) பணிபுரிந்து வருகிறது. இந்தச் சிறுதானியங்கள், நமது விவசாயத்தின் கதாநாயகர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். சிறுதானியங்களுக்கு அதிகக் கவனிப்பு தேவையில்லை, குறைந்த தண்ணீரே போதும், பெரிதாகப் பண்படுத்தப்படாத நிலத்திலேயே வளரும், அனைத்தையும் தாண்டி மற்றப் பயிர்களுடன் ஒப்பிட்டால் ஏக்கருக்கு அதிகபட்ச ஊட்டச்சத்தையும் தருகின்றன.

குதிரைவாலி எனப்படும் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியம் நாம் சாப்பிடவும் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

ஊட்டச்சத்துகள்

நமது உடலுக்குக் கனிமச்சத்தும் பாஸ்பரஸும் முக்கியம். நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் செயல்பாடுகளின் ஊக்கியாகவும் அவை செயல்படுகின்றன. பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்து. அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.

குதிரைவாலி என்ற இந்த உள்ளூர் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தைப் பற்றி யோசித்தால், நார்ச்சத்து மிகுந்த உணவாக இருப்பது மட்டுமில்லாமல், நமது அன்றாட தேவைக்கான பல்வேறு அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன.

தோற்றம்

தவிடு நீக்கப்பட்ட இந்தத் தானியம் இளம் பழுப்பு நிறத்திலும், ஓரளவு முட்டை வடிவத்திலும் இருக்கும். தற்போது இறக்குமதி செய்யப்பட்டுப் பிரபலப்படுத்தப்படும் கீன்வா (quinoa) தானியத்தைப் போலவும் இருக்கும். குதிரைவாலியை அரிசி போலவும் பயன்படுத்தலாம், ரவையைப் போலவும் பயன்படுத்தலாம்.

வட இந்தியாவில் இந்தத் தானியம் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நவராத்திரி விரதக் காலத்தில் அதிகச் சக்தியைத் தரக்கூடியதும் எளிதாகச் செரிக்கக் கூடியதுமான குதிரைவாலி பயன்படுத்தப்படுகிறது. கார்வால் மலைப் பகுதிகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தும் பெண் விவசாயிகளுக்கு நீடித்த சக்தியைத் தருவதற்குக் குதிரைவாலி உணவு வகைகளே உதவுகின்றன.

சூழலியல் அக்கறை

பருவநிலை மாற்றம் அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து வளரக்கூடிய நமது மறக்கப்பட்ட தானியங்கள், எதிர்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். அதற்குக் காரணம் சூழலியலின் தன்மைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை அவை பெற்றிருப்பதுதான். சூழலியல் அக்கறை மிகுந்த குடிமக்களாக நாம் மாறி, நமது உணவு தேர்வும் அதற்கு ஏற்றதாக அமைந்தால் கார்பன் வெளியீடு குறைந்து பருவநிலை மாற்றத்தைத் தள்ளிப்போடலாம். உள்ளூரில் விளைவிக்கப்பட்ட பயிர்களை, அதிலும் குறிப்பாகச் சிறுதானியங்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, எதிர்காலத்தில் நம்மை அச்சுறுத்தவரும் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு எதிர்ப்பு நடவடிக்கையாகவும் இது அமையும்.

(சுருக்கமான மொழிபெயர்ப்பு)

தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி

SCROLL FOR NEXT