நலம் வாழ

இயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்

உதய சங்கர்

நோய் என்றால் என்ன?

நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்ய விடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய வழக்கங்கள் (Routine) பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது. உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலோருடைய விருப்பமாக இருக்கிறது.

நம்முடைய உடலும் மனமும் இயல்பான உயிரியல் வளர்ச்சியாலும் சூழ்நிலையின் தாக்கத்தாலும் தனக்கே உரிய தனித்துவமான உடல், மன இயக்கத்தை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தத் தனித்துவமான உடல், மன இயக்கத்தை ஒருங்கிணைக்கும் உயிராற்றல் (Vital force) எல்லாவிதமான அகவயமான, புறவயமான சூழல் காரணிகளினால், அவ்வளவு எளிதில் பாதிப்பைக் கண்டுவிடாத வகையில் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறது. உயிராற்றல் தற்காலிகமாகவோ, நீண்டகாலமாகவோ பாதிக்கப்படும்போது நோய் என்ற மாற்றம் உருவாகிறது.

மாற்றத்தால் வருவது

நோய் என்றால் நம்முடைய மன, உடலியக்கத்தில் ஏற்படுகிற மாறுதல் அல்லது மாறுமை. உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாசக் கோசங்களில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது. நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமலிருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டித் தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கிறது. மனநிலையிலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக் கட்டம். சுவாசக் கோசங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீர் மூலமாகச் சிறைப்படுத்துகிறது. பின்பு சிறைபட்ட அந்த அந்நியனைப் பிடரியைப் பிடித்து வெளியே தள்ள, இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது, கூடவே சிறைபட்ட அந்த அந்நியனும். அதாவது அந்தத் தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன. இதை உடனடி தீவிர நோய் (Acute) என்று சொல்லலாம்.

ஒவ்வாமை

இன்னொரு வகை ஒவ்வாமையென்பது ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்தும் அம்சத்தில் இருந்து உருவாகிறது. அவனுடைய தனி வெப்பநிலை (Thermostat) முக்கியப் பங்கு வகிக்கிறது. அவனுடைய தனிவெப்பநிலை குளிர் என்றால் அவனுக்குக் குளிரோ, குளிர்ந்த தட்பவெப்பமோ ஒவ்வாது. அதேபோல அவனுடைய தனிவெப்பநிலை சூடு என்றால் வெப்பம், வெப்பமான சீதோஷ்ணம் ஒவ்வாது. குளிர், சூடு இரண்டுமே ஒவ்வாதவர்களும் இருக்கிறார்கள். இந்த ஒவ்வாமையினாலும் ஜலதோஷம், சளி, இருமல் ஆகியவை தோன்றலாம். சளிச்சவ்வுகள் நிரந்தரமாகச் சளிநீரைச் சுரந்துகொண்டேயிருக்கலாம். இந்த ஒவ்வாமை நீண்டகாலமாகத் தொடரும்போது ஈளை (Asthma) நோயாக மாறலாம்.

முதலில் சொன்ன ஒவ்வாமை உடனடி தீவிர நோய் (Acute) என்றால், பின்னால் சொல்லப்பட்ட ஒவ்வாமை என்பது நீண்ட கால (Chronic) நோயாக மாறும் தன்மைகொண்ட ஒவ்வாமை. உயிராற்றல் வலுவாக இருக்கிறபோது நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். அப்போது ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும், சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களிலும் குணமாகிவிடும்!

மனபாதிப்பு

அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் உயிராற்றலில் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேலதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். அல்லது ஒத்தையில் இருட்டுக்குள் நடந்துவரும் ஒருவர் ஒரு சிறிய நாய்க்குட்டியைப் பார்த்துச் சிங்கத்தைக் கண்டதுபோல மிரண்டு, பயந்து ஓடும்போதும் அவருக்கு மனஅழுத்தம் உருவாகலாம். இந்த மனஅழுத்தத்தை வெளிப்படுத்திவிட முடியும்போது, அது நோயாக மாறுவதில்லை.

அதாவது இந்த மனஅழுத்தம் தனக்குள்ளே அகவயமாகவோ, அல்லது புறவயமாகவோ சமன் செய்ய (Compensation) முடியும்போது, உயிராற்றல் தன்னைச் சமநிலை படுத்திக்கொள்கிறது. அப்படி முடியாதபோது உயிராற்றலில் ஏற்படும் பாதிப்புகள் உடலில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேலதிகாரியிடம் வாங்கிய ஏச்சு தூக்கமின்மையையும், எரிச்சலையும் அதன் தொடர்ச்சியாக மலச்சிக்கலையும் மூலநோயையும், முன்கோபத்தையும் ஏற்படுத்தலாம். இருளும் சிங்கமும் ஏற்படுத்திய பயம், உயிராற்றலைப் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம்.

எது நோய்?

ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைந்து, அதனால் புறவயத்தில் அவருடைய இயல்பு மாறித் தோன்றும் தோற்றம், அடையாளம், செயல், நடவடிக்கை எல்லாமும்தான்.

இன்னொரு வகையில் சொல்வதென்றால், நோய் என்பது ஒரு மனிதனின் உடல், மன, இயக்கத்தை ஒருங்கிணைக்கும் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பும், அதன் விளைவாக வெளியே தோன்றும் அறிகுறிகளும் கொண்ட தொகுப்பு.

மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகின்ற, (உடல் செயல்பாட்டில், உடலின் பாதிப்பால் மனமோ, மனதின் பாதிப்பால் உடலோ அடைகிற) மாற்றங்களின் தொகுப்பு. உயிராற்றலில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பைச் சீர்செய்து உடல்நலத்தை மீட்பதற்கு நம்முடைய உடல், மனம் சொல்லும் மொழியை, அதன் வார்த்தைகளைப் புரிந்துகொள்வது அவசியம். அப்படிப் புரிந்து கொள்ளும்போது உயிராற்றல் தன்னைத் தானே சரி செய்துகொள்ள முடியும். மனமும் உடல்நலமும் நோயிலிருந்து மீளும், சிறக்கும்.

- உதயசங்கர், எழுத்தாளர்,தொடர்புக்கு: udhayasankar.k62@gmail.com

SCROLL FOR NEXT