உலகில் மிகவும் அரிதான மன நோய், பல்வகை ஆளுமை நோய் (Multiple Personality Disorder). இது மிகவும் சிக்கலான பிரச்சினைதான். இந்தக் கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே அந்நியன். ஆனால், அந்தப் படத்தில் வருவது போலத்தான் பல்வகை ஆளுமை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே இருப்பார்களா?
அந்நியன் திரைப்படம் மூன்று விதமான பண்புகள் கொண்ட ஒரு மனிதனைச் சித்திரிக்கிறது. ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலிக்கும் ஒருவன்; சமூக அவலங்களைக் கண்டு பொங்கும் கோபக்கார மனிதனாக ஒருவன்; பிறகு சாதுவான ஒரு சாமானியன். ஒரு மனிதனின் தீவிரக் காதல் ரெமோ பாத்திரத்தின் வழியாகவும், சமூகக் கோபம் அந்நியன் கதாபாத்திரம் வழியாகவும் வெளிப்படும். இதைத்தான் பல்வகை ஆளுமை நோய் (Multiple Personality Disorder) என்கிறோம்.
சரியான சித்திரிப்பா?
அந்நியன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அம்பி கதாபாத்திரம் சாமானியனாக இருக்கும். இந்தப் பாத்திரத்துக்குள்தான் ‘அந்நியன்’, ‘ரெமோ’என இரண்டு வகை ஆளுமைப் பண்புகள் வெளிப்படும். அரசு ஊழியர்களின் பொறுப்பின்மையால் அம்பியின் தங்கை உயிரிழந்திருப்பாள். இந்தச் சம்பவம் அவரது மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அம்பியின் சமூகக் கோபத்துக்கு அது ஒரு காரணமாக இருக்கும்.
மனநல மருத்துவ அறிவியல், பல்வகை ஆளுமை நோய்க்கு சிறுவயதில் ஏற்படும் சின்னச் சின்ன சம்பவங்கள் காரணமாக இருக்கலாம் என்கிறது. அதன்படி, இது சரியான சித்திரிப்பு. ஆனால், இந்தப் படத்தில் உள்ள பெரும்பிழை என்னவென்றால் வேறொரு ஆளுமையாக மாறும்போது, அந்த ஆளுமைக்காக எந்த நோயாளியும் தனியாக உடை அலங்காரமோ, ஒப்பனையோ செய்துகொள்வதில்லை.
ஆனால், திரைப்படத்தில் அந்நியன் என்ற ஆளுமைக்காக பிரத்யேக ‘மேக்-அப்’ செட்டுகளை அம்பி கதாபாத்திரம் வாங்கி வைத்திருப்பான். மேலும், ரெமோ ஆளுமையும் வேறொரு ஆடையில் வெளிப்படும். இது இந்த நோயின் தன்மைக்கு மாறானது. நாசர் நடிப்பில் நீண்டகாலத்துக்கு முன் வெளியான ‘மிஸ்டர் பிரசாத்' என்ற படம் பல்வகை ஆளுமை நோயைச் சரியாகச் சித்திரித்த தமிழ்ப் படம் எனலாம்.
நோயின் இயல்புகள்
பல்வகை ஆளுமை நோய் (Multiple Personality Disorder) உலகில் மிகவும் அரிதான மன நோய். பெண்கள்தான் இந்த நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒவ்வொரு ஆளுமைக்கும் தனித்த சிந்தனை, தனி அடையாளம் கொண்டிருப்பார்கள். அதாவது அம்பியாக இருப்பவனும் அந்நியனும் உடல் அளவில் ஒருவர் என்றாலும், சிந்தனை அளவிலும் அடையாளத்திலும் தனித்த அடையாளம் கொண்டிருப்பார்கள். இவர்களால் ரகசியம் காப்பது இயலாத காரியமாக இருக்கும். இது தொடர்பறு அடையாளப் பாதிப்பு (Dissociative identity disorder) என்பது இந்தப் பாதிப்பின் இன்னொரு அம்சம்.
இந்த நோய் பாதிப்பைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். பல்வகை ஆளுமை நோய்ப் பாதிப்பு தொடக்க நிலையில் உள்ளவர்கள், பேசும்போது தன்னையே வேறு ஒரு நபர் போலப் பாவித்துப் பேசுவார். பல விஷயங்களை நினைவில் இருந்து மறந்துவிடுவார். கால மறதி ஏற்படும். அதாவது இரண்டு காலகட்டத்திலும் குறிப்பிட்ட சில நாட்களை மறந்துவிடுவார்கள். திடீரென வெகு தூரம் பயணித்து ஒரு புதிய இடத்துக்குச் சென்று, அங்கு ஒரு புதிய மனிதன் போல வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
இசை, ஓவியம், விளையாட்டு என ஏதாவது ஒன்றில் திறமைசாலியாக இருப்பார். உணர்ச்சிகள் நிலையில்லாமல் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். சவாலான காரியங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
சந்நியாசியான தொழிலதிபர்
பல்வகை ஆளுமை நோய் மிக ஆபூர்வமான நோய் என்பதால் எனது இத்தனை வருட அனுபவத்தில், அந்தப் பாதிப்பு உள்ள ஒருவரையும் சந்தித்ததில்லை. ஆனால் தொடர்பறு அடையாளப் பாதிப்பு (Dissociative identity disorder) ஏற்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய அனுபவம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஒரு நடுத்தர வயது நபர் வந்தார். அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். குடும்பம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார். திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். பொறுப்புமிக்க அவர் சாதாரணமாக சொல்லிக்கொள்ளாமல் எங்கும் செல்லமாட்டார். ஆனால், சென்று பல நாட்களாகியும் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
அவர் எங்கு சென்றார் என்றால், தொலைவில் உள்ள ஒரு மலைக் கோயிலுக்குச் சென்றுவிட்டார். அங்கு சென்று ஒரு பிச்சைக்காரன் போல வாழ்ந்திருக்கிறார். தான் யார், தனது அடையாளம் என்ன என்பது போன்ற எந்த நினைவும் இன்றி ஒரு புதிய மனிதனாக வாழ்ந்திருக்கிறார். அங்கு போவோர், வருவோரிடம் உணவு வாங்கி உண்டு, அங்கேயே உறங்கி நாட்களைக் கழித்திருக்கிறார். திடீரென நினைவு திரும்பி, அங்குள்ளவர்களிடம் கூறி ஊர் திரும்பியிருக்கிறார்.
சிகிச்சை
பெரும்பாலும் பல்வகை ஆளுமை நோயைக் குணப்படுத்துவது கடினம். இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் குடி, போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். தற்கொலை எண்ணங்கள் வரும். இதற்கெனத் தனித்துவமான சிகிச்சைகள் இல்லை. படத்தில் சித்திரித்ததுபோல ஹிப்னாடிச முறையில் சிகிச்சை அளிக்கலாம். நோயின் தன்மையைப் பரிசோதித்த பிறகு மருந்துகள் அளிக்கலாம்.
கட்டுரையாளர்,
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: arulmanas@gmail.com