நம்மிடம் நன்கு பழகியவர் எப்போதும் இப்படித்தான் இருப்பார் என்று நினைப்போம். ஆனால், ஒரு மனிதர் ஒரு நேரத்தில் ஒரு மாதிரியாகவும், கொஞ்ச நாட்களிலேயே அதற்கு நேரெதிராக தலைகீழாகவும் மாறிவிடுகிறார் என்றால், அவருக்கு மனநலப் பிரச்சினை காரணமாக இருக்கலாம். இந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்ட திரைப்படம் தனுஷ் நடித்து, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3'.
தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடித்திருந்த இப்படம், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரைப் பின்னணியாகக் கொண்டது. இப்படத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியுமாக அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்குவார்கள். ஆனால், திடீரென தனுஷுக்கு மனநலம் பாதிக்கப்படும். அன்றாட வேலைகளில் இருந்து தவறுவார். அளவுக்கு மீறிய கோபம் வரும். காதல் மனைவியுடன் சண்டை போட்டு அடிக்கப் போவார். இது மட்டுமல்லாமல், கவலை அதிகரிக்கும். தற்கொலை எண்ணமும் அவருக்கு வரும்.
இதை மனநல மருத்துவத்தில் ‘மன அழுத்த நோய்’ என்கிறோம். இதன் அடுத்த நிலை ‘மன எழுச்சி’. மன அழுத்தமாகத் தொடங்கி மன எழுச்சியாக மாறும்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள், மிக மோசமான நிலைக்குச் செல்வார்கள். மன அழுத்தம், மன எழுச்சி இரண்டும் மாறி மாறி வரும். அதனால் இந்த நோய் ‘இருதுருவ மனநலப் பாதிப்பு’ (Bipolar disorder) எனச் சொல்லப்படுகிறது. நோய்க்குரிய அம்சங்களுடன் பார்த்தால், இந்தப் படம் அப்பிரச்சினையைச் சரியாகவே சித்திரித்துள்ளது.
நோயின் பின்புலம்
கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates), இந்நோயைக் குறித்து ஆராய்ந்துள்ளார். அவர் முதன்முதலாக இந்த நோயைக் குறித்துக் குறிப்பிடும்போது பித்து, மனச் சோர்வு (Mania, Melancholia) என இரு நோய்களாக விவரித்தார். 1889-ல் இந்த நோயைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மெல் கிரம்பின், ‘பித்து மன அழுத்த நோய்’ (Manic Depressive Psychosis) என்றார். உலகம் முழுவதும் ஒரு சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மனநலம் மருத்துவம் தொடர்பான ஓர் ஆய்வு சொல்கிறது. எட்டு வயதிலிருந்தே இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 30 - 35 வயதினர்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
நோயின் அம்சங்கள்
தொடக்கத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். தனக்கு யாரும் இல்லை என்று மனம் சூன்யமாக இருக்கும். உடல் சோர்வும், தற்கொலை எண்ணங்களும் தோன்றும். குற்ற உணர்வு அதிகம் வெளிப்படும். இந்த மன அழுத்தம் ஒரு நாளில் இருந்து இரண்டு வாரம்வரை நீடிக்கலாம். பிறகு அது, மன எழுச்சியாக மாறும். சிலருக்கு இரு நாட்களிலேயே மன எழுச்சியாக மாறிவிடும். இந்த நிலையில் தங்கள் உணர்வுகளை அபரிமிதமாக வெளிப்படுத்துவார்கள். அதிகப்படியான சந்தோஷத்துடன் இருப்பார்கள்; கோபப்படுவார்கள்; அதிகமாகச் செலவு செய்வார்கள்; அதிகமாகப் பயணிப்பார்கள். எல்லா நடவடிக்கைகளும் வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியானதாக இருக்கும்.
உதாரணமாக ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் படித்தால் வழக்கமாகச் சிறிது முறுவலிக்கும் பழக்கம் கொண்டவர்கள், இந்த நோயின் தாக்கத்தால் பீடிக்கப்படும்போது அளவுக்கு அதிகமாகச் சிரிப்பார்கள். சொந்த பந்தங்கள் வீட்டில் காலே வைக்காதவர்கள், அடிக்கடி சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள்; அதிகமாகத் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்கள்.
மாயக் குரல்கள்
இவர்களுக்குச் சில மாயக்குரல்கள் கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த மாயக் குரல் சில நேரம், அவர் களுக்குக் கட்டளையிடும் குரலாகவும் இருக்கலாம். உதாரணமாக, தற்கொலை எண்ணங்கள் வந்தால் இந்த மாயக் குரல்கள் அதை நியாயப்படுத்தவும் செய்யும். மேலும், சில தவறான நம்பிக்கைகள் வரும். தன்னிடம் எல்லாம் இருக்கிறது என எண்ணுவார்கள். தனக்கு அளவுக்கு அதிகமாகச் சொத்து இருக்கிறது. தான் ஒரு பெரிய ஆள் என்றும் நினைப்பார்கள்.
எதுகை மோனையுடன் பேசுவார்கள். ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தை பேசுவார்கள். ஒரு கேள்விக்குப் பத்து பதில் சொல்வார்கள். ஆனால், சட்டெனத் தங்கள் நிலையிலிருந்து மாறி ஒரு தீவிரத்தன்மைக்குப் போய்விடுவார்கள். ஒரு சோக மன நிலைக்குப் போய்விடுவார்கள். சமநிலை இல்லாமல் இருப்பார்கள்.
‘3' படத்தில் தனுஷ் இந்த உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருப்பார். கோபத்துட னும் எரிச்சலுடனும் இருப்பார்; கவலையுடன் இருப்பார்; வேலைக்கும் போகாமல் இருப்பார். மனைவியைக்கூடக் கொல்ல நினைப்பார்.
நோய்க்கான காரணம்
பொதுவாக மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் இதற்குக் காரணமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பலவீனமானவர்களும், இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. சட்டென இப்பாதிப்பு வருவதற்கு மரணம், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம். சமூகக் காரணங்களாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், அவற்றைப் பிரதானக் காரணமாகச் சொல்ல முடியாது.
விடாமல் தொடர்ந்த பேச்சு
சில ஆண்டுகளுக்கு முன் மனநலப் பிரச்சினை இருப்பதாக ஒரு பெண்ணை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர் ஒரு குடும்பத்தினர். அவர் ஒரு சொல்லுக்கு மறு சொல் பேச மாட்டார். அந்தளவுக்கு அமைதியானவர்; கூச்ச சுபாவம் உள்ளவர். சொந்த பந்தங்களிடமும் இதே போலத்தான் நடப்பார். அதேபோல காலை எழுந்தவுடன் சமைத்து, குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்தி வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்துமுடிப்பவர்.
திடீரென ஒருநாள் அவரது செயல்களில் பெரும் மாற்றம். யாரிடமும் பேசாதவர், பேசிக்கொண்டே இருந்தார். வீட்டுக் கடமைகளில் இருந்து தவறினார். ஆடம்பரமாக அலங்காரம் செய்யாதவர், நகைகளுடன் வலம் வந்தார். தான் பாட்டுக்கு சொந்த பந்தங்களின் வீட்டு சென்று தின்பண்டங்கள் வாங்கித் தந்தார். இங்கு வந்தபோதும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். என்ன கேள்வி கேட்டாலும் பழமொழிகளைச் சொல்லுவார். அவருக்கு மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகளைக் கொடுத்தோம். 15 நாட்களில் குணமாகிவிட்டார்.
சிகிச்சை
இந்தப் பிரச்சினையில் மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகளுக்கு (Mood stabilizer) முக்கியத்துவம் உண்டு. மன நல ஆலோசனைகளைக் கொடுக்கலாம். ஆனால், இந்த நோயைக் குணப்படுத்த மருந்துகள் அவசியம். மன நல ஆலோசனைகள் மூலம் ஒரு சில தவறான எண்ணங்களை மாற்ற முடியும்.
கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்
மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com