புத்தகக் காட்சியை ஒட்டி பல மருத்துவ - உடல்நல நூல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர் கு. சிவராமனின் சுற்றமும் சூழலும் நட்பும், நலம் 360 ஆகிய இரண்டு நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
இன்றைக்கு மிகப் பெரிய நோயாக உருவெடுத்துள்ள நீரிழிவு நோய் பற்றி டாக்டர் கு. கணேசன் எளிமையாகவும் விரிவாகவும் விவரித்திருக்கும் ‘சர்க்கரை நோயுடன் வாழ்தல் இனிது’ என்ற நூலை சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
டாக்டர் ஜெ. பாஸ்கரனின் தலைவலி பாதிப்புகளும் தீர்வுகளும் என்ற நூலையும், முனைவர் உஷா சுப்பிரமணியம் எழுதிய உணவுக் கட்டுப்பாடு என்ற நூலையும் உஷா பிரசுரம் வெளியிட்டுள்ளது.
பிரபல மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுனின் ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு வழிகாட்டி நூலைத் திருமகள் நிலையமும், டி. வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி எழுதிய குழந்தை வளர்ப்பு எனும் அரிய கலை என்ற நூலை நர்மதா பதிப்பகமும் வெளியிட்டுள்ளன. ரத்த தானம், உடல் உறுப்பு தானம் பற்றி டாக்டர் சு. நரேந்திரன் எழுதிய நூலைக் கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு வழிகாட்டும் லப் டப் என்ற நூலை டாக்டர் சங்கர் குமார் எழுதியிருக்கிறார், சந்தியா பதிப்பகம் வெளியீடு. நம் சமூகத்துக்கு அவசியம் தேவைப்படும் பாலியல் கல்வி என்ற நூலையும் அவரது எழுத்தில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது
இன்றைக்குப் பலருக்கும் பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ள மன அழுத்தம் பற்றி டாக்டர் ஏ.வி. னிவாசன் எழுதிய மன அழுத்தம் வெல்வோம் என்ற நூலை மதி நிலையம் வெளியிட்டுள்ளது. எஸ். லட்சுமணன் எழுதிய பிசியோதெரபி நூலை நலம் வெளியீடு வெளியிட்டிருக்கிறது.