சர்க்கரை எந்த அளவுக்கு மனிதனை அடிமைப்படுத்துகிறது?
போதைப்பொருள் கோகெய்னைவிட, சர்க்கரையின் ருசி அதிகம் அடிமைப்படுத்தும் தன்மைகொண்டது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலங்குகளுக்கு சுக்ரோஸ், கோகெய்னைக் கொடுத்து விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர். விலங்குகள் சுக்ரோசையே தேர்வு செய்தன. கோகேய்னின் அளவை அதிகரித்த பின்னரும், விலங்குகள் இனிப்பையே அதிகம் நாடுவது தெரியவந்துள்ளது.
சாக்லேட்களில் உள்ள கொழுப்பு உடலுக்குத் தீங்கு செய்யுமா?
கோகோ வெண்ணெயிலிருந்து உருவாகும் நிறைகொழுப்பு தான் சாக்லேட்களில் உள்ளது. அதில் அதிகமும் ஸ்டீரிக் அமிலமே உள்ளது. அந்த அமிலம் உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்காது. சாக்லேட் சாப்பிட விரும்புபவர்கள் மில்க் சாக்லேட்டைத் தவிர்ப்பது நல்லது. பாலில் கொழுப்பும் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட சர்க்கரையும் இருப்பதால், டார்க் சாக்லேட் தரும் பலன்கள் கிடைக்காமல் போகும். டார்க் சாக்லேட்டைவிட மில்க் சாக்லேட்டில் இரண்டு மடங்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது.
அல்சைமர் நோயைத் தடுக்க என்ன சாப்பிடலாம்?
கையளவு வால்நட் விதைகளைத் தினசரிச் சாப்பிட வேண்டும். டிமென்ஷியாவைத் தோற்றுவிக்கும் பீட்டா அமிலாய்ட் தாக்குதலிலிருந்து வால்நட் பாதுகாக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. தசைகளின் செயல்பாட்டையும் நினைவுத் திறனையும் வால்நட் விதைகள் அதிகரிக்கின்றன.
மார்பக நோய்கள், புற்றுநோயின் அறிகுறியா?
மார்பில் தோன்றும் வீக்கங்கள் அனைத்தையும் புற்றுநோய் என்று நினைக்க வேண்டியதில்லை. மார்பகக் கட்டிகளில் 20 சதவீதத்துக்குக் குறைவானவையே புற்றுநோயுடன் தொடர்புடையவை. மடிவீக்க நோய், நார்க்கோளம் ஆகியவை பொதுவாக வரக் கூடிய மார்பக நோய்கள்.