‘கிளிக்கு றெக்கை மொளைச்சுடுத்து. பறந்து போயிடுத்து’ - இது கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் பேசிய பிரபலமான வசனம். கூட்டுக்குள்ளிருந்த பறவை இறக்கை முளைத்துத் தன்வழியே செல்வதைப்போல் தன்னுடைய படிப்பு மற்றும் வேலைக்காக வீட்டைவிட்டுச் செல்கிறார்கள் பிள்ளைகள். இவ்வளவுநாள் உடனிருந்தவர்கள் பிரிந்தவுடன் இவர்களது பெற்றோர்கள் திடீரென்று ஏற்படும் தனிமையைத் தாங்க முடியாமல் தவிப்பார்கள். இது ‘காலிக் கூடு சிண்ட்ரோம்’ (Empty Nest Syndrome) எனப்படுகிறது.
எந்நேரமும் தங்கள் பிள்ளைகளை நினைத்து வருந்துவது, நிமிடத்துக்கு நிமிடம் அவர்களுக்கு போன் செய்வது, ஒருநாள் அவர்களைத் தொடர்புகொள்ள முடியாவிட்டாலும் பதறுவது, அவர்களுக்கு என்னவோ ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயப்படுவது, வீட்டின் அன்றாட வேலைகளைச் செய்யாமல், தங்களைக்கூட கவனித்துக் கொள்ளாமல் விரக்தியுடன் இருப்பது என்று பல்வேறு விதமாக நடந்துகொள்வார்கள்.
இந்த காலிக் கூடு மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால், முதலில் தங்களைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டியது அவசியம்.
மேலை நாடுகளில் பிள்ளைகளுக்குப் பெருமளவு சுதந்திரம் இருக்கும். அவர்களிடம் இருந்து பெற்றோர் கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் இருப்பார்கள். அத்தகைய நாடுகளிலேயே காலிக் கூடு மனப்பான்மையால் அவதிப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கும்போது, வேலை கிடைத்து திருமணம் ஆகும் வரை சாதம் ஊட்டிவிடும் தாய்மார்கள் உள்ள நம் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் இருக்க மாட்டார்களா?
மோட்டு வளையையே பார்த்துக்கொண்டு புலம்பாமல்இருக்க என்ன செய்யவேண்டும்? உங்களுக்குப் பிடித்த- பல வருடங்களாக நேரம் இல்லாததால் செய்யாமல் இருந்த விஷயங்களை மீண்டும் செய்யத் தொடங்குங்கள். பரணில் இருக்கும் வீணையைத் தூசு தட்டி எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கலாம். வெகுநாட்களாகப் போகாமலிருந்த உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குப் போகலாம். பார்க்கத் தவறிய திரைப்படங்களைப் பார்க்கலாம். மரம் நடலாம். ஏன் அழகு நிலையத்துக்குப் போய் முகத்தைக்கூட பொலிவாக்கிக் கொள்ளலாம். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
பல வருடங்களாகக் கணவன் - மனைவிக்குள் இல்லாமல் இருந்த நெருக்கத்தை மீண்டும் அதிகரிக்கும் நேரமாக இதைக் கருதலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் பேசுங்கள். பிள்ளைகளுக்காக அவர்களைச் சரியாக கவனிக்காமல் இருந்திருப்போம். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்தல், இணைந்து வாக்கிங் செல்லுதல், இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்லுதல் என்று ஈடுபடுங்கள்.
உங்களைப் போலவே தனிமையில் இருக்கும் பெற்றோர்களை இணைத்து ஒரு குழுவாக அமைத்து ஒவ்வொருவர் வீட்டி்லும் கூடிப் பொழுதைக் கழிக்கலாம்.
‘என் குஞ்சு பிரிந்துவிட்டதே’ என்று எந்தப் பறவையும் அழுவதில்லை. இறக்கை முளைத்துவிட்டது என்று பெருமைதான் படுகின்றன. வாழ்க்கை வீணாக்குவதற்கு அல்ல. உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்.