நலம் வாழ

இதய நோய்: அச்சம் தவிர்ப்போம்

சி.ஹரி

இதய நோயாளிகளில் பலர், தங்களுடைய நோயைப் பற்றிப் பெருங்கவலையுடன் இருக்கிறார்கள். இதனால் உணவு, உறக்கம், ஓய்வு ஆகியவற்றில் தாங்களாகவே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலான நேரத்தைத் தனிமையிலும் ஆழ்ந்த சிந்தனையிலும் கலக்கத்திலும் அவர்கள் செலவிடுகிறார்கள்.

பலரும் நடமாட்டத்தையும் உடலின் அன்றாட செயல்பாடுகளையும்கூடக் குறைத்துக் கொண்டுவிடுகிறார்கள். சிலர் நமக்குத்தான் இதயம் பழுதாகியிருக்கிறதே, அதற்கு மேலும் வேலை கொடுப்பானேன் என்று நினைத்துக்கூடப் பல வேலைகளைச் செய்யாமல் குறைத்துக்கொள்கின்றனர்.

ஆனால், இதயம் நன்றாக இருந்தபோது செய்த வேலைகளில் பெரும்பாலானவற்றைத் தொடர்ந்து செய்யலாம் என்பதே மருத்துவ ரீதியான உண்மை. மலையேற்றம், அதிகப் படிகள் உள்ள கட்டடங்களில் ஏறுவது, சுமைகளைத் தூக்குவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, ஆக்சிஜன் குறைவாக உள்ள இடங்களில் இருப்பது, அதிகக் கூட்டம், இரைச்சல், அசுத்தம் உள்ள இடங்களுக்குச் செல்வது போன்றவற்றை மட்டும் தவிர்த்தால் போதும்.

குடும்ப டாக்டர் அல்லது இதய நோய்க்காக ஆலோசனை பெறும் டாக்டரிடமே கேட்டு, அன்றாடம் மேற்கொள்ளக்கூடிய செயல்களைத் தெரிந்துகொண்டு அவற்றைத் தவறாது கடைபிடிக்கலாம்.

* உறவினர்கள், நண்பர்கள் போன்றோரை அழைத்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கலாம். வீட்டில் உள்ளவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு, மனதுக்கு அமைதி தரும் விஷயங்களில் நேரத்தைக் கழிக்கலாம். நகைச்சுவைத் திரைப்படங்களைப் பார்க்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். நமக்கு ஏதோ பெரிதாக வந்துவிட்டது என்று நினைத்து நினைத்து மருண்டுபோக வேண்டிய அவசியமே இல்லை.

* உடலியக்க வேலைகளை நிறுத்தி வைத்திருந்தால் அவற்றைப் படிப்படியாக மீண்டும் தொடங்கி, சாதாரணமாக இருந்தபோது செய்த வேலைகளைத் தொடரலாம். உடலுக்கும் உள்ளத்துக்கும் சோர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைகளைத் தவிர்க்கலாம். டாக்டர்களால் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை வயிறாரச் சாப்பிடலாம். இதய நோயாளிகளின் உற்றார், உறவினரும் அவருடைய நலனில் அக்கறை செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவரைப் பார்க்கும்போதெல்லாம், ‘உடம்பு எப்படி இருக்கிறது?' என்று கேட்டு அவர் மீண்டும் மீண்டும் நோயை நினைக்கும்படி செய்யக் கூடாது. துக்ககரமான, கேட்பதற்கே தாங்காத செய்திகளையும் தகவல்களையும் அவர்களிடம் சொல்லக் கூடாது. அவர்கள் விரும்பும் செயல்களைச் செய்து, மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.

* இப்படியெல்லாம் செய்யும்போது சில வேளைகளில், தற்போது உள்ளதைவிட இதயம் நன்றாகச் செயல்படவும் தொடங்கலாம்!

SCROLL FOR NEXT