நலம் வாழ

உலக ஒளிப்பட நாள்: கத்திக்குப் பதிலாக கேமரா! - - மருத்துவ ஒளிப்படக் கலைஞர் தி.சி.கி. கரன்

ஏ.சண்முகானந்தம்

ஒளிப்படத்துறையில் அதிகளவில் தெரியாத, பேசப்படாத, பலரும் விரும்பாத பிரிவு ‘மருத்துவ ஒளிப்படப் பிரிவு’ (Medical Photography). ஆனால், அதில் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் தி.சி.கி.கரன். இந்திய அளவில் மருத்துவம், அறுவை சிகிச்சை தொடர்பான ஒளிப்படங்களை எடுப்பதற்கு என்று தனியே ஒரு பிரிவே உருவாகாத காலம் தொடங்கி இன்றளவும் அத்துறையின் மிகப்பெரும் கலைஞனாகவும் ஆளுமையாகவும் உள்ளார்.

19CHVAN_Karan01.JPGதி.சி.கி. கரன்

இன்றைய கணினி யுகத்தில் வானில் பறக்கும் பறவைகள், இயற்கை நிலப்படக் காட்சி போன்ற சில படங்களை எடுத்து முகநூலில் பதிவிட்டுவிட்டு, தங்களைத் தாங்களே பெரிய ஒளிப்படக்கலைஞர்களாக கருதிக்கொள்ளும் இளைஞர்கள் மத்தியில், மருந்து நெடி வீசும் அறுவைசிகிச்சை அறைகளில், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தது மட்டுமின்றி 42 ஆயிரத்துக்கும் அதிகமான அறுவைசிகிச்சை ஒளிப்படங்களை எடுத்துள்ள கரன் அவசியம் பேசப்பட வேண்டியவர்.

சென்னையின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்ததால், பல்வேறு வகைப்பட்ட நோயாளிகளைச் சந்திக்கவும் ஆவணப்படுத்துவதற்கும் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவரின் பல ஒளிப்படங்கள், புகழ்பெற்ற சில வெளிநாட்டு மருத்துவமனைகளில் ஆவணமாக வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஒளிப்படங்கள் சார்ந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்:

உங்களது படிப்பு குறித்து…

1957-ம் ஆண்டு என நினைக்கிறேன். ஹோமியோபதி மருத்துவம் படித்துக்கொண்டிருந்தேன். அப்ப ஹோமியோபதி படிப்புக்கென்று தனியாகக் கல்லூரிகள் கிடையாது. ரிஷிவந்தியத்துல ஒரு பயிற்சி மையம் நடத்துனாங்க. வேலூர் மருத்துவமனையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அப்போ நான் ஹோமியோபதி படிப்பில் தேர்ச்சி பெற்றவுடனே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். மருத்துவர்கள் பதிவு பண்ற சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தபோது க. அன்பழகன் சுகாதாரத் துறை அமைச்சரா இருந்தார். அப்போது ஹோமியோபதி டாக்டராக நான்தான் முதல்ல பதிவு பண்ணினேன்.

பிறகு எப்போது மருத்துவ ஒளிப்படத் துறைக்கு வந்தீர்கள்?

நான் அந்தக் காலத்திலேயே கேமராவுல படம் எடுக்கப் பழகியிருந்தேன். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எனக்கு வேலை கிடைத்தது. ‘ஆர்டிஸ்ட் போட்டோகிராபர்’ என்ற பெயரில்தான் எனக்கு அந்த வேலை கிடைத்தது. என்னுடைய பணி ஒய்வுவரை அந்தப் பெயர்தான் நீடித்தது.

அப்ப ஊதியக் குழுவின் செயலாளராக சதாசிவம் இருந்தார். ‘ஆர்ட்டிஸ்ட் போட்டோகிராபர்’ என்ற பணியை சதாசிவம் கமிஷன் வழியே அரசு உருவாக்கியது. ‘ஆர்டிஸ்ட் போட்டோகிராபர்’னு இந்தப் பதவியைச் சொல்றது முட்டாள்தனம் என்று அவரிடம் சொன்னேன். ஏன்னா, ஓவியருக்கும் ஒளிப்படக் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?

அதை ஏன் வச்சாங்கன்னு நானே கண்டுபிடிச்சேன். 35 வயசுல ஒருவரை பணிக்குத் தேர்வு பண்ணியிருந்தாங்க. அரசு விதிகள்படி 35 வயசு ஆன ஒருவருக்குப் பணி ஆணை வழங்கக்கூடாது. பணியில் சேர்ந்தவர் ஒவியர் (Artist) தான். ஒளிப்படக்கலைஞர் (Photographer) கிடையாது.

அதனால இது இரண்டையும் இணைச்சு ‘ஒவிய ஒளிப்படக்கலைஞர்’ (Artist Photographer) என்கிற புதிய பேரில் பணி நியமனம் கொடுத்தாங்க. ஒண்ணு அந்தப் பெயரில் பணியைக் கொடுத்தது தப்பு. ரெண்டாவது 35 வயசுல ஒரு நபரை பணி நியமனம் பண்ணினதும் தப்பு.

‘சரி அதை எப்படி சரி பண்ணலாம்’னு சதாசிவம் கேட்டப்போ, என்னை ‘ஆர்டிஸ்ட் போட்டோகிராபர்'னு சொல்றதுக்கு பதிலாக, ‘மருத்துவ ஒளிப்படக் கலைஞர்’ன்னுதான் (Medical Photographer) கூப்பிட வேண்டும் என்றேன். பிறகு ‘மருத்துவ ஒளிப்படக் கலைஞர்' என்று கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஆனா ஊதியக் குழுவோ கடைசிவரைக்கும் அதை ஏத்துக்கவே இல்லை. இப்ப அந்த பணியையே எடுத்துட்டாங்க. ‘ஒவிய ஒளிப்படக்கலைஞர்’ என்ற பணியே அரசாங்கத்துல கிடையாது.

அந்த வேலையிலும் கடைசிவரைக்கும் என் சொந்த கேமராவுலதான் படமெடுத்தேன். நான் பணியாற்றியபோது, என்னோட சேர்த்து தமிழ்நாட்டுல மொத்தம் 14 மருத்துவ ஒளிப்படக் கலைஞர்கள் இருந்தாங்க. மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த எல்லா மருத்துவமனைகளிலும் அவங்களை நியமிச்சு இருந்தாங்க.

மருத்துவ ஒளிப்படக் கலை சார்ந்த பணியைப் பற்றி புரிந்துகொண்டு, விருப்பத்தின் பேரில்தான் அந்த வேலைக்குப் போனீங்களா?

விருப்பம்னு சொல்ல முடியாது. மருத்துவ நண்பர்களுக்காகப் போனேன். என்கூடப் படிச்சவங்கெல்லாம் மருத்துவராகப் பயிற்சி எடுத்துட்டு இருந்தாங்க. அப்ப அறுவைசிகிச்சை நடைபெறும் அறையில் ஒளிப்படங்கள் எடுக்க என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. அப்பதான் மருத்துவத் துறை சார்ந்தும் அறுவைசிகிச்சைகளையும் படமெடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே என்னை ‘மருத்துவ ஒளிப்படக் கலைஞராக’ ஆக்கிட்டாங்க.

அப்ப எல்லாம் மருத்துவர்கள் எவ்வளவு தூரம் முக்கியமோ, அதே அளவுக்கு மருத்துவ ஒளிப்படக் கலைஞர்களும் முக்கியமானவங்களா கருதப்பட்டாங்க. ஏன்னா, மருத்துவக் கல்லூரியில அறுவை சிகிச்சை தொடர்பா வகுப்பு எடுக்கணும்னா ஸ்லைடு போடணும். அந்த ஸ்லைடை ஒளிப்படக்கலைஞர்தான் உருவாக்க முடியும். அதானாலதான்!

முதல்முறையா அறுவைசிகிச்சை நடைபெறும் அறைக்குள் போனபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எப்படி இருந்தது?

நான் முதல்முறையா ஒளிப்படம் எடுக்கப் போகும்போது பயிற்சி மாணவர்களுக்குப் படம் எடுக்கத்தான் கூட்டிட்டுப் போனாங்க. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள ஸ்டெரிலைஸ் பண்ண துணியைப் போட்டுட்டுத்தான் உள்ள போகணும். இல்லேன்னா நோய்த்தொற்று வந்துரும். அறுவைசிகிச்சை பண்ணும்போது ஒருத்தர் உடம்பு இன்னொருத்தர் உடம்பு மேல படக்கூடாது. தனித் தனியாதான் நிக்கணும். தும்மல் வந்தா வெளிய வந்துடணும். ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட கையுறைதான் போடணும்.

இப்படி மருத்துவர்களோடு நானும் ஒரு மருத்துவனாவே உணர்ந்த மாதிரி, என்னோட முதல் ஷூட் அமைஞ்சது. ஒரே வித்தியாசம்… மருத்துவர்கள்கிட்ட கத்தி இருந்தது. என்கிட்ட கேமரா இருந்தது. அவ்வளவுதான்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT