நலம் வாழ

உயிர் வளர்த்தேனே 43: நோயிலிருந்து மீட்கும் சாம்பார் மருந்து

போப்பு

கடந்த வாரம் சத்துக்கள் மிகுந்த முளைகட்டிய துவரம் பயறு அடை செய்முறையைப் பார்த்தோம். பதின்ம வயதினருக்கு மிகவும் ஏற்ற உணவு அது. வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு, உயிர்ச்சத்துக்கள் நிறைய தேவைப்படும். ஆனால் இன்றைய உணவு முறை பொருத்தமான சத்துக்களை வழங்குவதில்லை. எனவே, அவர்கள் நொறுக்குத் தீனிகளை நாடுவது இயல்புதான்.

நம் வாரிசுகள் அந்தப் பண்டங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க விரும்பினால், மேற்படி முளைகட்டிய துவரம் பயறு அடையை தம் வாரிசுகளின் உடல்நலத்தில் அக்கறையுள்ள பெற்றோர் வாரம் ஒருமுறையேனும் வீட்டில் செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

வீட்டு உணவில் அவர்களது சுவை மற்றும் சத்துத் தேவை நிறைவு செய்யப்படாததால்தான், குழந்தைகள் வணிகப் பண்டங்களின் மீது மோகம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

கூண்டை விட்டு வெளியேறுவோம்

எனது நண்பர் தனது மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அவன் அங்கிருந்து சற்று விலகின வேளையில் "பையன் அதிகச் சதையுடன் இருப்பதாகத் தோன்றுகிறதே" என்று எனது வார்த்தைகளுக்கு அதிபட்ச நயம் சேர்த்துக் கேட்டேன். டிராபிக்கில் பச்சை சிக்னல் கிடைத்ததும் முண்டியடுத்து உறுமிச் சீறும் வாகனங்களைப் போல, வார்த்தைகளை முன்னுக்குப் பின்னாகச் சீற்றத்தில் கொட்டினார்.

“அவங்கம்மா நோயுற்று இறந்த பின்னர், அவன் போக்கில் விட்டுட்டேன். பேக்கரிக்குப் போனா இருநூறு ரூபாய்க்கு வைச்சி அமுக்குறான். தந்தூரிச் சிக்கனா தள்ளுறான். என் மகன்தான். இருந்தாலும் உள்ளதைச் சொல்லாம இருக்க முடியல. அவனுடைய சாப்பிடுற வெறி, எனக்கே அருவருப்பா இருக்கு. அதான் உங்கள்ட்ட கூட்டிட்டு வந்தேன்”.

“வயசு என்ன இருபத்தி நாலு, அஞ்சி இருக்குமா... அந்த வயசுக்கு இந்த ஒடம்பு கொஞ்சம் அதிகந்தான்” என்றேன்.

“அட நீங்க வேற, வெறும் பதினெட்டு வயசுதான் சார் ஆவுது” என்றபோது ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிக்கொண்டால் நாகரிகமாக இராது.

உயிராற்றல் இல்லையே

பின்னர் தனியாக அவனிடம் பேசத் தொடங்கினேன். “வீட்டுல வேலை செய்யிற அக்கா ஒரு வாரத்துக்குத் தேவையான தோசை மாவை மொத்தமா அரைச்சு பிரிட்ஜ்ல வைச்சுட்டுப் போயிடுறாங்க. காலையிலயும் நைட்லேயும் தோசையத் தின்னு தின்னு வெறுப்பாயிடுது அங்கிள். தொட்டுக்க ஊறுகாய், பாட்டில் வத்தக் குழம்பு, எப்பவாச்சும் தக்காளிச் சட்னி. எவ்வளவு தின்னாலும் பசியடங்குறதில்ல. அதான் சான்ஸ் கெடைச்சா புகுந்து வெளையாடுறேன்” என்றான்.

அந்தப் பையனுக்கு உயிராற்றல் வழங்கும் அன்னையும் இல்லை. உயிராற்றல் வழங்கும் உணவும் இல்லை. உணவு என்ற பெயரால் வாயைக் கடந்து போவதெல்லாம் உடலுக்குத் தேவையான சத்துகளைத் தராமல், வெறும் சதையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. அப்புறம் உடல் பெருக்கத்தை நொந்து என்ன செய்வது?

வீட்டில் உண்பதற்கு ஒன்றிரண்டு நபர்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் சமைப்பதற்கென்றே எளிய வழிமுறைகள் நிறைய உண்டு. அவற்றைக் கற்றுக்கொள்ளத் தயாராவதற்கு குளிர்பதனக் கூண்டை (ஃபிரிட்ஜை) விட்டு முதலில் வெளியேற வேண்டும். பிறகு, புதிய வழிகள் தானாகப் பிறக்கும்.

10 நிமிட சாம்பார்

பாசிப் பயறைக்கொண்டு சத்தும் சுவையும் மிகுந்த உணவைச் சமைப்பது குறித்துப் பார்ப்போம். நம் காலத்தில் உணவு எவ்வளவுக்கு எவ்வளவு வணிகமயமாகிப் போனதோ, அதே அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவுக்கு ஆரோக்கிய உணவு கைக்கெட்டும் தொலைவுக்குச் சாத்தியமாகியும் உள்ளது.

பாசிப் பருப்பு சேர்த்துச் செய்யப்படும் பொங்கல், பாயசம் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பருப்பில் சாம்பார் செய்தால், அதன் சுவையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. தோல் நீக்கிய பாசிப் பருப்பில் அளவில்லாத கலப்படம். இந்தக் கலப்பட பருப்புகள் உடலுக்கு நன்மை செய்வதில்லை.

தோலுடன் கூடிய பாசிப் பருப்பை நாம் தேர்வு செய்கிறபோது, அது பாசிப் பருப்பாக மட்டுமே இருக்க முடியும். இது எந்த நீரிலும் சடுதியில் வெந்து விடக்கூடியது. துவரம் பருப்பு சாம்பார் செய்முறையிலேயே மண் பாத்திரத்தில் நமக்கு வேண்டிய அளவு தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பருப்பைக் குறைவான நீரில் வேக விட வேண்டும்.

உடன் வெங்காயம் போடத் தேவையில்லை. பாசிப் பருப்பில் அமிலத் தன்மை குறைவு என்பதால், அதை முறிக்கும் காரச் சுவைக்கு வெங்காயம் அவசியமல்ல. உடன் தக்காளியைப் பிசைந்துவிட வேண்டும். பிறகு நீர்ப் பண்பு மிகுந்த சக்கரவர்த்திக் கீரை எனப்படும் பருப்புக் கீரை அல்லது பாலக் கீரை அல்லது சாரநத்திக் கீரை எனப்படுகிற வழவழப்பு மிகுந்த காட்டுக் கீரை போன்ற கிள்ளினால் ஈரம் சொட்டுகிற ஒரு கீரையை சுத்தம் செய்து போடவும். இரண்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, குறைவான தணலில் வேகவிட வேண்டும். உடன் அரைத் தேக்கரண்டி சீரகத்தை உள்ளங்கையில் இட்டு நசுக்கித் தூவி விட்டு, மூடியைப் போட்டு ஐந்தே நிமிடங்களில் இறக்கி விடலாம்.

கீரை சுத்தம் செய்கிற நேரம் போக மொத்தம் பத்தே நிமிடங்களில் குக்கரின் துணையில்லாமல் தயாராகி விடும் பாசிப் பருப்பு சாம்பார். சுவைக்குச் சுவை மட்டுமல்ல, அற்புதமான மருத்துவக் குணமும் உடையது இது.

நோயிலிருந்து மீட்கும்

முட்டிக் காலில் நீர் கோத்து நடக்க முடியாமல் அவதிப்படுவோரும், காலில், பாதங்களில் வீக்கம் கண்டு உணர்ச்சி மரத்துப் போகிறவர்களும் இந்தச் சாம்பாரை வாரத்தில் ஓரிரு முறையேனும் சோற்றுடன் பிசைந்து உண்டால், இலகுவாக சிறுநீர்ப் பிரிந்து தொல்லைகளில் இருந்து விரைவாக குணம் பெறுவதை உணர முடியும். கீரையின் உயிர்ப் பண்பும், பாசிப் பருப்பின் குறைவான புரதப் பண்பும் செரிக்க எளிதாக இருப்பதால் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும்.

அடிக்கடி சோர்ந்து படுக்கத் தோன்றுகிறவர்களும், சாப்பாட்டின் மீது நாட்டம் இல்லாத அளவுக்கு மந்தவுணர்வு பெற்றவர்களும், இந்த சாம்பாரை உண்ட பிறகு உடலில் ஏற்படும் சாதகமான மாற்றத்தை உணர முடியும்.

மசாலா சேர்க்கப்படாத இந்தச் சாம்பாரை, திட உணவுக்குப் பழக்கும் ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் சோற்றுடன் பிசைந்து ஊட்டலாம். கீரை சாம்பார் என்றால் அது ஏழைகளின் சாம்பார் என்ற ஒரு கருத்து பொதுவாக உண்டு. உண்மையில் இந்தக் கீரை சாம்பார், நோயிலிருந்து மீட்கும் சாம்பார்.

இது பலாப் பழங்களின் காலம். பாசிப் பருப்பைக்கொண்டு எப்படி பலாப்பழ பாயாசம் வைப்பது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

SCROLL FOR NEXT