நலம் வாழ

டெடி டாக்டர்ஸ்!

ஆர்.சி.ஜெயந்தன்

பெற்றோரிடம் வீறாப்பாகப் பேசும் பல குழந்தைகள் டாக்டருக்குப் பயந்து நடுங்குவார்கள். பல நோய்களை முன்கூட்டியே தடுக்க சிறு வயதில் தடுப்பூசி போடவும், அவசியம் ஏற்படும்போது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இதனால் டாக்டர் என்றாலே ஊசி போடுபவராக, கசப்பு மருந்து தருபவராக பல குழந்தைகளின் மனதில் பதிந்துவிடுகிறார்.

இதனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும்போது மருத்துவப் பரிசோதனைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்காகவும் மருத்துவமனைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அச்சம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. மருத்துவர், மருத்துவமனை குறித்த இந்த அச்சத்தை சிறுவர், சிறுமிகளிடம் போக்குவதற்காக துபாய் அரசு ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. அதுதான் ‘டெடி பேர் ஹாஸ்பிடல்’!

பஞ்சினால் செய்யப்பட்ட விதவிதமான கரடி மென்பொம்மைகள் இன்று குழந்தைகளின் உலகில் முக்கிய அங்கமாகிவிட்டன. இந்த பொம்மைகளை உயிரற்ற பொருளாகப் பார்க்காமல், அவற்றுக்குப் பெயர் வைத்து, தங்களின் செல்லமாகவே படுக்கை அறைவரை கொண்டுவந்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். விளையாடிய பின் அவற்றை அணைத்துக்குக்கொண்டு தூங்கும் குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள். அந்த அளவுக்குப் புசுபுசுவென்ற கரடி பொம்மைகள் குழந்தைகளின் பிரியத்துக்குரிய விளையாட்டுச் செல்லங்களாக மாறிவிட்டன.

எத்தனை விலை உயர்ந்த கரடி பொம்மையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கிழிந்து, பஞ்சு வெளியே தெரியும்போது குழந்தைகள் அது பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். சில குழந்தைகள் அவற்றுக்கு அடிபட்டுவிட்டதாகவே கருதுகிறார்கள்.

அவர்களது இந்த உளவியலைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது துபாய் அரசாங்கம். பழுதுபட்ட கரடி பொம்மைகளை சிகிச்சைக்காக அழைத்துவந்து, தேவைப்படும் சிகிச்சையை மேற்கொண்ட பின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ‘டெடி பேர்’ மருத்துவமனையைத் திறந்து, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறது.

மருத்துவரிடமும் மருத்துவமனைக்கும் செல்ல பயப்படும் குழந்தைகள் மட்டுமல்ல, 13 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளுமே தங்களுக்குப் பிடித்தமான கரடி பொம்மையுடன் பெற்றோர், பள்ளி ஆசிரியர் துணையுடன் தனியாகவோ குழுவாகவோ இங்கே வருகிறார்கள். தங்கள் பொம்மைகளை டெடி டாக்டரிடம் காட்டுகிறார்கள். அவர் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதனை செய்தபின் ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கிறார். பின்னர் பொம்மைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு குணமாகிவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அனுப்புகிறார்கள். கொஞ்சம் பெரிய குழந்தைகள் என்றால், அவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த சுவாரசியமான வகுப்புகளும் உண்டு. இப்படி இங்கே வந்துசெல்லும் குழந்தைகளுக்குச் சான்றிதழும் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

“இப்படிச் செய்வதால் மருத்துவமனை குறித்த குழந்தைகளின் பயம் இங்கே போக்கப்படுகிறது. தவிர மருத்துவ சிகிச்சை, நலவாழ்வுப் பழக்க வழக்கங்கள் ஆகியவை குறித்த அடிப்படை அறிவை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடிகிறது” என்கிறார்கள் இங்கே பணிபுரியும் டெடி பேர் மருத்துவர்கள்.

SCROLL FOR NEXT