அந்தப் பெரியவருக்கு மறதி அதிகம். அடிக்கடி கார் சாவியைத் தேடுவார். ஒருமுறை காரை ஓட்டிச் செல்லும்போது கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார். உடனிருந்த மனைவி, ‘அதான் கார் சாவி கிடைச்சிடுச்சில்ல.. இன்னும் என்ன தேடுறீங்க?’ என்றார். அதற்கு அவர், ‘இல்லை. இந்த மூன்றில் எது பிரேக் என்று மறந்து விட்டது. அதைத்தான் பார்க்கிறேன்’ என்றார்.
வயதானால் ஏற்படும் பிரச்சினைகளில் முதன்மையானது மறதி. மூளையின் நரம்பு செல்களான நியூரான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவதாலும், அவற்றுக்கு இடையேயான இணைப்புகள் பலவீனப்படுவதாலும் மறதி ஏற்படுகிறது. ஆனால், இது பயப்படவேண்டிய அளவுக்குப் பெரிய பிரச்சினை இல்லை.
மறதியால் வரும் பிரச்சினையில் பிரதானமானது ஒரு பொருளை வைத்த இடம் தெரியாமல் தேடுவதுதான். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது அந்த விஷயம் எளிதில் மறக்காது. ஒரே இடத்தில் ஒரு பொருளை வைத்துப் பழகினால் தேட வேண்டியிருக்காது. புது இடங்களுக்குச் சென்றால் ‘இந்தப் பொருளை இந்த இடத்தில் வைத்திருக்கிறேன்’ என்று மனைவியிடமோ, பிறரிடமோ சொல்லுங்கள். நாம் விசில் அடித்தால் பதிலுக்கு விசில் அடிக்கும் கீ செயின்கள் இருக்கின்றன. சாவிகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம். ‘இந்த வயதில் விசில் அடிக்கிறதைப் பாரு’ என்று சொல்வதைக் காதில் வாங்காதீர்கள்.
எங்கே என்ன பொருட்கள் உள்ளன என்பதை பட்டியல் எழுதியும் வைத்துக்கொள்ளலாம். எழுதி வைத்துக்கொள்வதற்கு இணையாக எதுவும் இல்லை. வெளியிடங்களுக்குச் செல்லும்போது குடை, பர்ஸ், பை போன்று என்னென்ன பொருட்கள் உள்ளன என்று வேலையை முடித்து வீடு திரும்பும் நேரம் நினைவுபடுத்தும்படி செல்போனில் அலாரம் வைத்துக்கொள்ளலாம். செல்போனையே மறந்துவிடுபவர்களாக இருந்தால் கழுத்தோடு மாலைபோல கயிறு கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் அந்தப் பாதையில் புல் முளைக்காது. அதுபோலத்தான் தொடர்ந்து மூளையின் செல்களைப் பயன்படுத்தி வந்தால் மறதி ஏற்படாது. அவசியம் இல்லாவிட்டாலும் நண்பர்களின் பெயர்கள், வங்கிக் கணக்கு எண்கள், முக்கியமான காலக் கெடு தேதிகள் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மொழி, இசை என்று புதிதாக ஏதாவது கற்கத் தொடங்கலாம். கல்விக்கும் காதலுக்கும் வயதே கிடையாது. நடைபயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு நல்ல நினைவுத்திறன் இருக்கும். பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்து போட்டிகளில் பங்கு பெறலாம். சுடோகுவில் மூழ்கலாம். பேரப் பிள்ளைகளுடன் செஸ் ஆடலாம்.
மேற்கண்ட விளையாட்டுகள் உங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி. இவை நினைவுத் திறனை மேம்படுத்த உதவும். போரடித்தால் பத்திரிகைகளில் பொது அறிவு வினாக்களுக்கான விடையை யோசிக்கலாம். ‘ரிட்டயர்டு ஆன வயதில் டிஎன்பிஎஸ்சி வினாவைப் படித்து என்ன செய்யப்போகிறேன்?’ என்று யோசிக்காமல், அந்த வினாக்களுக்கான விடைகளை யோசியுங்கள். வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.