வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற நிபுணர்கள் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இவற்றை மீறுவது குற்றமாகக் கருதப்படுகிறது.
மருத்துவ நெறிமுறைகளின் மூலகர்த்தா என்று கருதப்படுபவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மெய்யியலாளாரும் மருத்துவருமான ஹிப்போகிரடீஸ்.
மூன்று மந்திரங்கள்
- ஹிப்போகிரடீஸ்
மருத்துவப் பட்டப் படிப்பைப் படித்து முடித்தபின் மருத்துவர்கள் ஏற்கும் உறுதிமொழி இவர் வகுத்த மருத்துவ நெறிமுறைகளை அடைப்படையாகக் கொண்டது.
மருத்துவ நெறிமுறைகளின் ஆதாரமாகக் கருதப்படும் அறநெறிகள் மூன்று. அவை:
# நோயுற்றவருக்கு ஒருபோதும் தீங்கு செய்யாதே;
# எப்போதும் நன்மையே செய்;
# நோயுற்றவரின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்.
தீமை கூடாது
‘தீங்கு செய்யாதே’ (do no harm; primum non nocere) என்பது முதல் கடமை. அவசியமற்ற அறுவைசிகிச்சைகளைச் செய்வது, தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வது, தப்பான அல்லது தேவையற்ற மருந்துகளைக் கொடுப்பது, தன் பயிற்சிக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட சிகிச்சையை அளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வலியுறுத்தும் நெறிமுறை இது.
‘நன்மையே செய்’ (beneficence) என்னும் நெறிமுறை, கிடைக்கும் பலனைப் பற்றிக் கருதாமல் தன் கடமையைச் செய்வதைக் குறிக்கிறது. தன்னிடம் வரும் நோயாளிக்குச் சிகிச்சை தருவது மருத்துவரின் அடிப்படைக் கடமை (duty of care). இதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. அவர் வழங்கும் சிகிச்சை முறையானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும். எனவே, ஒரு மருத்துவர் தன் மருத்துவ அறிவையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்வது அவசியம்.
அந்தரங்கம் முக்கியம்
‘நோயுற்றவரின் உரிமைகளை மதித்து நட’ என்பது நோயாளியை மதித்து நடப்பதையும் அவருடைய உரிமைகளை மீறாமல் அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு நடப்பதைக் குறிக்கும். இதில் நோயுற்றவரின் அந்தரங்கத்தைப் பேணுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, அவருக்கு உள்ள நோய் பற்றிய விவரங்களை அவரது அனுமதியின்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. அதேபோல, ஒரு நோயாளியுடன் பேசும்போது அது வேறு யாருக்கும் தெரியாத சூழ்நிலையை மருத்துவர் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
முறையிடலாம்
இந்திய மருத்துவக் கழகம் (மெடிக்கல் கவுன்சில்) மருத்துவர்களின் நெறிமுறைகளைக் கண்காணிக்கும் அமைப்பாக விளங்கிவருகிறது. மருத்துவர்களுக்கான நடத்தை விதிகளை (code of conduct) இந்த அமைப்பு வரையறை செய்துவருகிறது. மருத்துவர் ஒருவர் இவற்றை மீறும்போது சம்பந்தப்பட்ட நோயாளி மருத்துவக் கழகத்திடம் முறையிடுவதற்கு உரிமை உண்டு.