உடைத்துத் தோல் நீக்கிய பாசிப்பருப்பு செரிக்க எளிதானது. கர்நாடக விசேஷ விருந்துகளில் பாசிப்பயறை ஊறவைத்து தேங்காய்ப்பூ, பொடியாக அரிந்த வெள்ளரிக்காய், கொத்துமல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்து உப்பு போட்டுத் தாளித்து வைப்பார்கள். காரத்துக்குச் சன்னமாக அரியப்பட்ட பச்சை மிளகாய் அல்லது உடைத்த மிளகு போட்டுக் கடுகில் தாளிதமும் செய்வதுண்டு. ‘எசுறு பேலக்கால்’ எனப்படும் இந்தப் பச்சடி வகை இடம்பெறாத விருந்து இலையே கர்நாடகாவில் கிடையாது.
மேற்படி எசுறு பேலக்காலை மென்று சுவைத்தால் மவுத் வாஷ் போட்டுக் கொப்புளித்ததைக் காட்டிலும் அத்தனை ஃபிரஷ்ஷாக இருக்கும். விருந்துணவு தரும் மயக்க உணர்வே தோன்றாது. செரிமானத் திறன் மிகுந்த இந்தப் பச்சடி வகையுடன் சிறிதளவு ஊறவைத்த அவல் சேர்த்தால் சிற்றுண்டியாகவே உட்கொள்ளலாம்.
முளைகட்டிய பாசிப்பயறையும், மற்ற பயறுகளை முளைகட்டிக் கலவையாகவும் இப்போது பரவலாக பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதை நேரடியாக உண்பது சரியா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. ஒரு உணவு எத்தனைக்கு எத்தனை உயிர்ப்பண்பு மிக்கதாக இருக்கிறதோ, மற்றவற்றுடன் கலக்காமல் உண்கிறபோது அத்தனைக்கு அத்தனை செரிக்கக் கடினமாகவும் இருக்கும்.
ஜிம்முக்குப் போய்விட்டு வந்து உண்கிற இளசுகளாலும் மேற்படி முளைகட்டிய பயறு வகைகளைத் தொடர்ந்து உண்ண முடியாது. சலிப்பு தோன்றும். காரணம், அவற்றின் சத்துக்கள் நம் உடலில் சேகரமாகி நிறைநிலையை எட்டி விடும். அதனால்தான் நல்ல உணவு என்று சொல்லப்படுகிற எதையுமே நம்மால் தொடர்ந்து உண்ண முடிவதில்லை.
முளைகட்டிய பாசிப்பயற்றை அவித்துத் தாளித்து மிளகுத் தூள் சேர்த்து உண்டால் எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்கு நல்ல ஆற்றலும் கிடைக்கும்.
சிங்கப்பூரில் பாசிப் பயற்றின் முளை மட்டுமே ஈரச் சந்தைகளில் கிடைக்கும். அவற்றை அங்குள்ள சீன, மலாய், இந்திய இன மக்கள் அனைவருமே தம் உணவில் முக்கியப் பகுதியாக உட்கொள்கிறார்கள்.
காய்கறிப் பொரியல், முட்டைப் பொரியல், வறுத்த சோறு (ஃபிரைடு ரைஸ்) ஆகியவற்றுடன் தேங்காய்ப் பூப் போல இதைத் தூவலாகத் தூவிக்கொள்கிறார்கள். பாசிப்பயற்று முளையுடன், வறுத்த நெத்திலிப் பொடித் தூவி உண்பது அபாரமான சுவை.
முளைகட்டிய பயறுக் கலவையைக்கொண்டு இறைச்சி மசாலா, தேங்காய் அரவை சேர்த்து குருமா வைத்தால் வயிற்றுக்குச் செரிமான வேலை குறையும். இறைச்சிக்கு நிகரான ஆற்றலும் உடலுக்குக் கிடைக்கும். ஆனால், நாமோ பழகித் தேய்ந்த ஒரே விதமான உணவு முறைக்குக் கிட்டத்தட்ட அடிமையாக இருக்கிறோம். அதில் மாற்றத்தைக் கொண்டு வராமல் நலம் சரிந்த உடலை மருந்துகளின் மூலமாக மீட்டெடுக்க முயற்சிப்பது மூடநம்பிக்கை.
இத்தொடரில் முன்னரே கூறியுள்ள ஓர் அம்சத்தை மீண்டும் நினைவுபடுத்துவது அவசியம். புரதச் சத்துக்காக பருப்பு வகைகளைச் சார்ந்திருப்பதில் தவறில்லை. ஆனால், பயறுகளில் உறைந்துள்ள கூறுகளைச் சிதைத்து விடுவதால் நலனுக்குப் பதிலாக, உடலுக்குக் கேடுகளையே உருவாக்கிக்கொள்கிறோம்.
இன்றைக்கு ஆலைக்குச் சென்று தோல் நீக்கப்படாத பயறு வகைகளே சந்தையில் இல்லை. நவீனச் சார்புதான் நம் உடல் கேடுகளின் ஊற்றுக்கண் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஹைஜீனிக்’, ‘கம்ப்யூட்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டது’ என்ற பெயரில் பாக்கெட்டில் சிறைபட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே சக்கையாக்கப்பட்டவை என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
எனது நண்பர்கள் ஐந்தாறு பேர் கூட்டாக நிலம் வாங்கி, இயற்கை வேளாண்மை செய்யும் தங்கள் நண்பரின் மேற்பார்வையில் அளித்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் வகையாறாக்களை இரண்டு மூன்று தவணையாக அவர் கொடுத்து விடுகிறார். கடையில் வாங்கினால் என்ன விலை? ஏன் இவ்வளவு செலவு ஆகிறது என்றெல்லாம் நுணுகிக் கணக்குப் பார்ப்பதில்லை.
உரம், பூச்சிக்கொல்லி இல்லாத உணவு மூலப் பொருட்களால் மருத்துவச் செலவு மிச்சம், ஆண்டுக்கு ஆண்டு நிலத்தின் மதிப்பு உயர்கிறது. அதுபோக இயற்கை விவசாய ஊக்குவிப்பில் குறைந்தபட்ச பங்களிப்புச் செய்ய முடிகிற மனநிறைவும் கூடுதலாகக் கிடைக்கிறது.
நகக் கண்ணில் அழுக்குப் படாமல் செய்கிற வேலையே கண்ணியமானது என்று கருதிய காலம் கழிந்து, இயற்கைக்கு ஊறு செய்யாத வாழ்க்கை முறையே பொருள் பொதிந்தது என்ற தீர்க்கமான முடிவுடன் பஞ்சகவ்யத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் ஐடி பொறியாளர்கள் பத்துப் பேரை உடனடியாகப் பட்டியலிட முடியும்.
நமது சிந்தனை முறையில் மாற்றத்தைக் கொண்டுவராமல் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. வாழ்க்கை முறையில் மாற்றமின்றிப் பரவலாக நோயில் சிக்கிச் சரிந்து வரும் உடல்நலனை மீட்டெடுக்க முடியாது.
உடல் நலனில் தீவிர கவனம் செலுத்துகிறேன் என்ற பெயரில் இன்று பலரும் ஊற வைத்த பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என்று இறங்கி விட்டனர். கிலோ நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கும் நாட்டுக் கொண்டைக்கடலையில் இல்லாத விசேஷமான சத்துக்கள் எதுவும் கிலோ ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பாதம் பருப்பில் இல்லை என்பதை மனதில் ஆழமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். காசு, பணம் செலவழித்தால் உடல்நலம் எளிதாகக் கிடைத்து விடும் என்பது நாம் உடலுக்கும் உணவுக்கும் ஒரு சேர இழைக்கும் அவமரியாதை. உணவு விஷயத்தில் கொஞ்சமே கொஞ்சமேனும் மெனக்கெடல் வேண்டும். அதுவோர் தியானம் போன்றது.
தலா நூறு கிராம் முழுப் பாசிப்பயறு, முழு உளுந்து, முழுத் துவரை, முழு நாட்டுக் கொண்டைக்கடலை, முழுக் கொள்ளு ஆகியவற்றை எடுத்து ஒரு நாள் ஊற வைத்து, மறுநாள் ஈரத்துணியில் முளை கட்டிக்கொள்ளுங்கள். ஒருநாள் கழிந்த பின்பு பார்த்தால் அனைத்துப் பயறுகளுமே லேசாக முளைவிட்டிருக்கும். இந்தப் பயறுகளை நல்ல வெயிலில் காய வைத்தால் வாசம் எழும். அதை கனமான சட்டியில் வறுக்க வேண்டும். உடன் ஒன்றரைக் கிலோ இயற்கை முறையில் விளைந்த அரிசி ஒன்றை மேற்படிப் பொருட்களுடன் வறுக்க வேண்டும்.
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரவை எந்திரத்தில் இட்டு ரவைப் பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை நபர் ஒன்றுக்கு சுமார் நூறு கிராம் அளவுக்கு எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கஞ்சியாகக் காய்ச்சி அருந்தலாம். உப்புமாவாகக் கிளறலாம். பொங்கலாகவும் சமைக்கலாம். மேற்படிக் கலவையை மிக மென்மையானப் பதத்துக்கு மாவாக அரைத்துக்கொண்டால் களியாகக் கிண்டலாம், புட்டாக அவிக்கலாம், நீரில் கரைத்துத் தோசையாகவும் சுடலாம்.
உடல் பலவீனம், செரிமானத் தொல்லை, வாயுத் தொல்லை, அமிலப் பிரச்சினை உள்ளவர்கள் மேற்படி உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொண்டுவந்தால், அனைத்து உபாதைகளும் நீங்குவதை உணர முடியும். அன்றாடம் ஒரு நேரமாவது இந்தப் பயறு - அரிசிக் கலவையை மேற்சொன்ன ஏதேனும் ஒருமுறையில் உண்ணப் பழகிக்கொண்டால் ஆரோக்கியத்தின் முதல் படியில் அடியெடுத்து வைத்துவிட்டோம் என்று பொருள்.
மேற்படி மாவுக் கலவையைக் குழந்தைகளுக்கு வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து இனிப்புச் சுவையில் தயாரித்துப் பழக்கப்படுத்தி விட்டால் பள்ளிப் பிள்ளைகளின் காலை உணவு, பெரும் போராட்டம் இல்லாமல் கழிந்துவிடும்.
குதிரை ஆற்றல் வழங்கும் ஹார்ஸ் கிராம் எனப்படும் கொள்ளுப் பயறு குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு:kavipoppu@gmail.com