நலம் வாழ

மரபு மருத்துவம்: மறந்து போன எண்ணெய்க் குளியல்

டாக்டர் பி.திருவருட்செல்வா

நமது வண்டியைச் சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்யவில்லை என்றால், வண்டி ஓட மறுக்கிறது; பிரச்சினை செய்கிறது. அதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் வண்டியைப் பராமரிக்கிறோம். ஆனால், நாம் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டு தாக்குப்பிடிக்கும் உடலை முறைப்படி சர்வீஸ் செய்கிறோமா? குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை.

இப்போது நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகளைப்போல், நம் முன்னோர்களுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் அன்றைய கோட்பாடான உணவு முறை, வாழ்க்கை முறை. அதில் எண்ணெய் குளியலும் அடக்கம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வாத, பித்த, கபத் தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான மாத்திரை அளவில் வைப்பதற்கு உதவுகிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை உத்தம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று இடையில் நம்பப்பட்டு வந்தது. இப்போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

கிடைக்கும் நன்மைகள்

‘சிரசாசனம்’ செய்யும்போது தலைப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் எடுத்துச் செல்லப்பட்டு மூளைப் பகுதி எவ்வாறு பலப்படுகிறதோ, அதேபோல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்தவோட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு எண்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் மன அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இவற்றால் உடல் வெப்பமடையும். மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள், தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

பின்பற்ற வேண்டிய முறை

“நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு” என்பது சித்தர்கள் வாக்கு.

நாள் இரண்டு மலம் கழித்தல்; வாரம் இரண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்தல்; மாதம் இரண்டு - உடலுறவு கொள்ளல்; வருடம் இரண்டு பேதி மருந்து அருந்துதல். எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக் கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம்வரை, காலை இளம் வெயிலில் நின்ற பிறகு குளிக்கலாம்.

தலை முதல் உள்ளங்கால்வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக வட்ட வடிவில் தேய்த்தால், உள்ளுறுப்புகள் வெப்பத்தைச் சரிவரப் பராமரிக்கப்படும். மேலும் மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையையும் கொடுக்கும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர்ச்சியால் சளி பிடித்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும், முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்மையான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

என்ன எண்ணெய்?

உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும். ரிஃபைண்டு ஆயில் வேண்டாம். சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

எண்ணெய் குளியலை மீட்டெடுப்பதற்கான காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம்.

எண்ணெய் குளியல் தரும் நன்மைகள்

# முடி உதிர்தலைக் குறைக்கும்

# பார்வை பலப்படும்

# முதுமையைத் தாமதப்படுத்தும்

# ஆயுட்காலத்தைக் கூட்டும்

# தோலைப் பளபளப்புடன் வைத்திருக்க உதவும்

# உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும்

# உள்ளுறுப்புகள் தங்களுடைய செயல்களைச் சிறப்பாகச் செய்யும்

# மனதை நல்ல நிலையில் வைத்திருக்கும்

# முறையான தூக்கத்தைத் தரும்

# உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பற்றாலுடனும் வைத்திருக்கும்

# மூட்டுக்கு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தைக் குறைக்கும்.

# எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடிக்கிறது எனப் பெரும்பாலான மக்கள் நம்புவதற்கு மாறாக, கபத்தையும் இது நல்ல நிலையில் வைத்திருப்பதால் கால மாறுபாட்டால் வரும் தொந்தரவுகளையும் தவிர்க்கிறது.

# உடலுக்கு ஆதாரமான, உடல் இயக்கத்துக்கு அடிப்படையான மூன்று தோஷங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

SCROLL FOR NEXT