தொடர்ந்து செய்யும் உடல் பயிற்சி, பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைக்காமல் இருப்பது, உடல் எடையை அளவோடு வைத்திருப்பது, சத்தான உணவை மட்டுமே உண்பது, மதுபானப் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் நினைவிழப்பு நோய் அண்டாது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
உடல் பயிற்சி செய்கிறவர்களில் 60% பேருக்கு நினைவிழத்தல் நோய் ஏற்படுவதில்லை. உடல் பயிற்சி செய்கிறவர்களுக்குச் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பும் 70% குறைகிறது.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களுக்குப் பெரும்பாலான வியாதிகள் வருவதில்லை. அவர்களுக்குத் தடுப்பு மருத்துவ முறைகளோ மருந்துகளோ அவசியப்படுவதே இல்லை. இயற்கையாகவே ஆரோக்கியமும் கிடைத்துவிடுகிறது.
அமெரிக்காவின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் எல்வுட் இதைத் தெரிவித்துள்ளார்.
நல்ல பழக்க வழக்கங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது ஒவ்வொரு தனி நபரின் அத்தியாவசியக் கடமையாகும். மிகச் சிலர்தான் வாழ்க்கையில் எல்லா விதங்களிலும் ஆரோக்கியமான பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆய்வில் தெரிந்த சோகமான உண்மை என்றும் அவர் வருத்தப்படுகிறார்.
எங்களுடைய ஆய்வுக்குப் பிறகு, புகைபிடிப்பதை விட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிறார். அதாவது, ஆரம்பத்திலிருந்தே நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தால் உடல் நலம் கெடாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.