நலம் வாழ

தைராய்டு புற்றுநோய் திடீர் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததுதான். ஆனால், பெரும்பாலானோரின் கவனத்துக்கு வராமலே இருக்கும் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய்.

பெண்களை அதிகமாகத் தாக்கும் புற்றுநோய்களில் எட்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது தைராய்டு புற்றுநோய். சென்னை பெருநகரப் புற்றுநோய்ப் பதிவேடு (Madras Metropolitan Tumour Registry), இதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

ஆனால், பலருக்கும் இதன் தீவிரம் புரியாமலே இருக்கிறது. தைராய்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் பரவலாக்காததே இந்த அறியாமைக்குக் காரணம்.

“சமீபத்திய ஆய்வுகளின்படி, தமிழ்நாட்டில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 100 சதவீதம் அதிகரிக்கலாம்” என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை துணைப் பேராசிரியர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.

சிகிச்சையில் கவனம்

பொதுவாக தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அறுவை சிகிச்சை செய்யப்படும். பின்னர்க் கதிரியக்க அயோடின் செலுத்தப்படும். ஆனால், கதிரியக்க அயோடினை மிகுந்த எச்சரிக்கையோடு குறைவான அளவில் மட்டுமே செலுத்த வேண்டும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

தைராய்டு புற்றுநோயானது வளரக்கூடியது (functioning), வளராதது (non-functioning) என இரண்டு வகைப்படும் என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் அணு மருத்துவத் துறையின் தலைவர் ஷெல்லி சைமன். "வளரக்கூடிய தைராய்டு புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் கதிரியக்க அயோடின்.

இந்த வகை தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படும் அணுக்கள் ஆரோக்கியமான அணுக்களைப் போலவே இருக்கும். அவற்றைத் தனியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியாது. அதனால், கதிரியக்க அயோடினைப் பாய்ச்சுவதன் மூலம், பாதிக்கப்பட்ட அணுக்கள் தூண்டப்படும். அவை அயோடினை உள்வாங்கியவுடன், கதிரியக்கம் அவற்றை அழித்துவிடும்" என்கிறார்.

கட்டுப்பாடு தேவை

இந்தச் சிகிச்சை முறை 97 சதவீதம் நோயாளிகளின் வாழ்நாளை 5 வருடக் காலம்வரை நீட்டிப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அதிகப்படியான கதிரியக்கம் அபாயகரமானது. தற்போது 100 முதல் 150 மில்லிகியூரி வரையிலான கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால், 2014 அமெரிக்க தைராய்டு கூட்டமைப்பின் நெறிமுறைப்படி 30 மில்லிகியூரி கதிரியக்கம் மட்டுமே செலுத்தலாம்.

நோயின் ஆரம்ப அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்குக் குறைவான கதிரியக்கம் போதுமானது, பயனளிக்கக்கூடியது. முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் அதிகப்படியான கதிரியக்கத்தைச் செலுத்தலாம்.

அதிகப்படியான கதிரியக்கம் செலுத்தப்படும்போது வாந்தி, குமட்டல், உமிழ்நீர்ச் சுரப்பிகள் செயலிழத்தல் உள்ளிட்ட பக்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடும். பல நோயாளிகள் தனி அறையில் தனிமையில் வாடுவார்கள். சில நேரம் துணைப் புற்றுநோய்கள்கூட அவர்களைத் தாக்கக்கூடும்” என்கிறார் டாக்டர் சைமன்.

கடந்த இருபதாண்டுகளில் தைராய்டு புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சென்னைவாசிகளே என்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. 884 ஆண்களில் 1 ஆண், 450 பெண்களில் 1 பெண் என்ற விகிதத்தில் தைராய்டு புற்றுநோய் தாக்கி வருகிறது என்னும் அதிர்ச்சிகரத் தகவலையும் தெரிவிக்கிறார் அவர்.

தொகுப்பு: ம. சுசித்ரா

SCROLL FOR NEXT