லைசோசோம் தேக்க நோயினால் அவதியுறும் குழந்தைகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்க வேண்டுமென்று, நடிகர் கார்த்தி சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
லைசோசோம் தேக்க நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவிகள் செய்வது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த நிகழ்ச்சி, பிடல் கேர் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில், சென்னையில் நடந்தது.
இதில், லைசோசோம் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். லைசோசோமல் தேக்க நோய் ஆதரவு சங்கத்தின் தலைவர் மன்ஜித் சிங், டாக்டர் ராணி சுரேஷ், டாக்டர் எஸ்.சுரேஷ், டாக்டர் சுஜாதா ஜெகதீஷ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
லைசோசோம் தேக்க நோய்க் கான விழிப்புணர்வு தூதராக, நடிகர் கார்த்தி சிவக்குமார் பங்கேற்றார். லைசோசோம் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி அவர் பேசியதாவது:
இந்த வகை அரிய நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை யளிக்க ஆண்டொன்றுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் சரியான உதவிகள் கிடைப்பதில்லை. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் பெற் றோர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவவேண்டும். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூலம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள் ளோம். இதேபோல் மத்திய அரசும் வெளிநாடுக ளிலிருந்து இந்த நோய்க்காக இறக்குமதியாகும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் டாக்டர் சுஜாதா ஜெகதீஷ் பேசுகையில், “குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு கணுக்காலில் ரத்த மாதிரி எடுத்து லைசோசோம் நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் புதிய குழந்தைகளுக்கான பரிசோதனை களை எடுக்க, அரசு வழி செய்ய வேண்டும். அரசு இந்த சிகிச்சைக்காக தனியாக நிதி ஒதுக்கி உரிய மருத்துவ உதவிகள் தர வேண்டும். நாட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைசோசோம் நோயால் பாதிக்கப் படுகின்றனர். ஆனால், 300 குழந்தைகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்” என்றார்.