நலம் வாழ

ஆட்டிசம்: புத்தகங்கள் கவனப்படுத்தாத அறிகுறிகள்

டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் துறை சார்ந்த வல்லுநர்களால் தமிழில் எழுதப்பட்ட பல நூல்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அண்மைக் காலம்வரை புனைகதைகள், கலை இலக்கிய நூல்கள், பாடப் புத்தகங்கள் போன்றவற்றையே பெரும்பாலும் வெளியிட்டுவந்த தமிழ்ப் பதிப்பகங்கள், சமீபத்திய ஆண்டுகளாகத் துறை சார்ந்த வல்லுநர்களால் எழுதப்பட்ட நூல்களைப் பிரசுரித்து வருவதைக் காண முடிந்தது. இனவரைவியல் (ஆ. சிவசுப்பிரமணியன், சி. இளங்கோ), மானிடவியல் (பக்தவத்சல பாரதி, சு.கி.ஜெயகரன்), மனநலம் (டாக்டர் மா. திருநாவுக்கரசு) போன்ற துறைகளில் தரமான, ஆங்கில நூல்களுக்கு இணையான பல நூல்கள் தமிழிலும் வெளிவந்திருந்தன. இவற்றை வாசகர்கள் தேடித் தேடி வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

தவறான கருத்து

இந்தப் பின்னணியில், சில மருத்துவ அறிவியல் சார்ந்த புத்தகங்களின் தரம் மெச்சத்தக்க வகையில் இல்லை என்பதோடு தவறான தகவல்களையும் கருத்துகளையும் கொண்டிருந்தன என்பதையும் இங்கே கூற வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஆட்டிசம், கற்றல் குறைபாடு, அறிவாற்றல் குறைபாடு போன்ற வளர்ச்சிக் குறைபாடுகள் பற்றிய புத்தகங்கள் பலவற்றில் பொருட் பிழைகளும், சில நேரம் அப்பட்டமான தவறுகளும் இருந்தன.

இந்தக் குறைபாடுகள் பொதுவானவை. உதாரணத்துக்கு டாக்டர் வே. ஹேம நளினி எழுதியுள்ள தற்புனைவு ஆழ்வு (AUTISM), சாந்தா பப்ளிஷர்ஸ்), யெஸ். பாலபாரதி எழுதியுள்ள ‘ஆட்டிசம், சில புரிதல்கள்’ (புக்ஸ் ஃபார் சில்ரன்) - இந்த இரண்டு புத்தகங்களும் ஆட்டிசத்தின் அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளன. ஆனால், இந்த அறிகுறிகளில் எவை ஆட்டிசத்தில் மட்டுமே காணப்படும் என்பதை விளக்கத் தவறிவிடுகின்றன. ஆட்டிசத்தின் தனித்துவமான பண்புகள் எவை என்பதை இந்த நூல்கள் சுட்டிக்காட்டவில்லை. இதனால் ஆட்டிசத்தைப் பற்றி தவறான கருத்து வாசகர் மனதில் ஏற்பட்டுவிட அதிகச் சாத்தியம் உண்டு.

புலனுணர்வுப் பிரச்சினை மட்டுமா?

‘ஆட்டிசம், சில புரிதல்கள்’ என்கிற நூல்: “ இவர்களில் அநேகரை ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய பிரச்சினை என்றால், அது புலனுணர்வு (sensory) பிரச்சினைகள்தான்” (பக். 37) என்கிறது. மொத்தம் 14 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலில் புலனுணர்வுப் பிரச்சினைகள் பற்றி ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. ஆனால், ஆட்டிசத்தின் அறிகுறிகளை விளக்க ஒரு பக்கமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ‘தற்புனைவு ஆழ்வு’ என்ற நூலின் ஆசிரியை “தற்புனைவு ஆழ்வுக்கு உட்பட்ட குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்சினை 'புலனுணர்வுப் பிரச்சினை' என்றே கூறலாம்” (பக். 53) என்று அழுத்தமாகவே கூறுகிறார்.

எனவே, இதைப் படிக்கும் வாசகர்கள் ஆட்டிசத்தின் முதன்மை குணாம்சம் புலனுணர்வு சார்ந்த அறிகுறிகளே என்ற தவறான முடிவுக்கு வருவதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது.

அடிப்படைப் பண்புகள்

சரி, ஆட்டிசம் குறித்த ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன? பல தசாப்தங்களாக நடைபெற்ற ஆராய்ச்சிகளின் பலனாக ஆட்டிசத்தை அடையாளப்படுத்தும் தனிப் பண்புகள் எவை என்பது துல்லியமாகத் தெரியவந்துள்ளது. ஆட்டிசத்தின் மையப் பண்புகள் (core features of autism) என்று அழைக்கப்படுபவை மூன்று தலைப்புகளின் கீழ் விவரிக்கப்படுகின்றன:

1. பேச்சு, மொழி மற்றும் மற்றவர்களுடன் கருத்து பரிமாறும் திறனில் காணப்படக் கூடிய, நீண்டகாலமாக நிலைத்து நிற்கிற குறைபாடுகள் (persistent deficits in speech, language and communication).

2. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் ஒட்டி உறவாடுவதிலும் உள்ள சிரமங்கள் (persistent deficits in social interaction and social communication). ஊடாட்டம், இடை வினையாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை இது சுட்டுகிறது.

3. இறுக்கமான, நெகிழ்வற்ற செயல்கள், சிந்தனைப்பாங்கு, திரும்பத்திரும்ப ஒரே செயலைச் செய்யும் தொடர் பழக்கவழக்கங்கள் (rigid, repetitive patterns of behaviour, interests, or activities). தொடர் செய்கைகள், மாற்றத்தை விரும்பாத போக்கு.

இந்த மூன்று அறிகுறித் தொகுப்புகளுமே ஆட்டிசத்தின் முக்கிய அடையாளங்கள். இவை ஆட்டிசத்தின் இன்றியமையாத பண்புகள். இவை மூன்றும் ஒருவரிடம் காணப்படாவிட்டால் , அவருக்கு ஆட்டிசம் இல்லை என்றே கூறலாம்.

துணைப் பண்புகள்

ஆட்டிசத்தில் மேற்கூறிய மையப் பண்புகளைத் தவிர வேறு சில குணாம்சங்களும் சிலரிடம் காணப்படலாம். அவை துணைப் பண்புகள் எனப்படுகின்றன. சிலருக்கு மிகையான அல்லது குறைவான புலனுணர்ச்சி இருப்பதுண்டு. வலி, சுவை, மணம், தொடு உணர்ச்சி போன்ற புலன்கள் இயல்பு நிலையைவிட அதிகமாகவோ அல்லது குறை வாகவோ இருக்கலாம். இதன் காரணமாகவே ஆட்டிசத்தைக் கொண்டுள்ள சிலர் மற்றவர்கள் தம்மைத் தொடுவதை விரும்புவது இல்லை.

இதேபோல, ஆட்டிசப் பாதிப்பு உள்ள சிலருக்கு வலி உணர்வு குறைவாக இருக்கும். எனவே காயங்கள் ஏற்படும்போது இவர்கள் அழுவது இல்லை. இவை ஆட்டிசம் உள்ள எல்லோருக்கும் இருப்பதில்லை. மேலும், இவை அறிவாற்றல் குறைபாடு போன்ற பிற வளர்ச்சிக் குறைபாடுகளில் காணப்படும் சாத்தியமும் உண்டு.

இந்த நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதால் ஏற்பட்ட குளறுபடிதான் மேலே கூறப்பட்ட நூல்களில் காணப்படும் தவறான செய்திகளும் கருத்துப் பிழைகளும். யானைக்கும் நாலு கால்கள், பூனைக்கும் நாலு கால்கள். தும்பிக்கையும், பருமனுமே யானையை அடையாளப்படுத்தும் குணாம்சங்கள். இதேபோல, ஆட்டிசத்தின் தனி அடையாளங்கள் எவை? அதோடு அவ்வப்போது ஒட்டிவரும் பிரச்சினைகள் எவை என்பதைப் பிரித்து உணர்ந்துகொள்வது முக்கியம். இல்லாவிட்டால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதைதான்.

அதேபோல, ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ என்ற நூலில் குளூட்டன், கேசின் என்ற புரதங்களின் ஒவ்வாமை சிலருக்கு ஆட்டிசத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது (பக். 63-67). சில இணையதளங்களிலும் காணக்கூடிய இந்தக் கருத்து தவறு. இந்த உணவுகளை ஒதுக்கினால் ஆட்டிச அறிகுறிகள் குறைவதில்லை என்பதை ஆய்வுகள் தீர்க்கமாகக் கூறுகின்றன.

ஆட்டிசம் ஒன்றல்ல

கடைசியாக, ஆட்டிசம் குறித்த பெரும்பாலான நூல்கள் ஆட்டிசத்தின் தீவிரத்தன்மை ஆளுக்கு ஆள் பெருமளவுக்கு எவ்வாறு வேறுபடும் என்பதைச் சுட்டிக்காட்டத் தவறிவிடுகின்றன. ஆட்டிசத்தின் தீவிரத்தன்மையை (severity) முன்வைத்துக் கடுமையான ஆட்டிசம், மிதமான ஆட்டிசம், சுமாரான (சிறிய அளவிலான) ஆட்டிசம் (அஸ்பர்ஜர் சின்ட்ரோம்) என்று பிரிப்பதே இப்போது நடைமுறையில் உள்ள வழக்கம்.

கடுமையான ஆட்டிச பாதிப்புள்ள பல குழந்தைகள் பேச்சுத் திறன் முற்றிலும் அற்றவர் களாக இருப்பார்கள் அல்லது அவர்களுடைய பேச்சு மற்றவர்களுக்குப் புரியாது. ஆனால், சிறிதளவு ஆட்டிசம் உள்ளவர்களிடையே பாதிப்பு நுணுக்கமானவையாக, எளிதில் கண்ணுக்குப் புலப்படாததாகவும் இருக்கும். இவர்களில் பலர் மேல்நிலைப் படிப்பு படித்தவர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்குகிறார்கள்.

எனவே, ஆட்டிசம் எந்த அளவுக்கு ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதும், அந்தக் குழந்தைக்குத் தேவையான ஆதரவு, வசதிகள், சிகிச்சைகள் போன்றவை என்ன என்பதைத் தீர்மானிப்பதும் ஆட்டிசத்தின் கடுமையைப் பொருத்ததே. இதை மேற்கண்ட இரண்டு புத்தகங்களும் சுட்டிக்காட்டவே இல்லை.

தேவை உள்ளடக்க மாற்றம்

இன்றைய நாளில் எந்த ஒரு துறை பற்றியும் இணையத் தளங்கள் வாயிலாகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு பொருள் பற்றி அறிந்துகொள்வது வேறு, அதைப் புரிந்துகொள்வது வேறு. ஆட்டிசம், கற்றல் குறைபாடுகள் போன்ற குழந்தை மேம்பாட்டு குறைபாடுகள் சிக்கலானவை, எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. குழந்தைநல மருத்துவர்களையும் மனநல மருத்துவர் களையுமே திணற வைக்கக் கூடியவை.

உள்ளடக்கத்தில் - குறிப்பாக ஆட்டிசம், கற்றல் குறைபாடு போன்ற மருத்துவ அறிவியல் சார்ந்த நூல்களில் துல்லியம் தேவை என்பதைச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்த நூல்கள் உணர்த்தின. அறிவியல் கண்ணோட்டம், துறை சார்ந்த ஆதாரங்கள், ஆராய்ச்சி வழி நின்று எழுதப்படும் நூல்களின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் இது அமைகிறது. இதில் பதிப்பகங்களுக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

SCROLL FOR NEXT