நலம் வாழ

ஆரோக்கிய வாழ்க்கை யார் கையில்?

வா.ரவிக்குமார்

உடலைப் பெரிதாக வளர்க்கத் தெரிந்த அளவுக்கு நம் உடலின் ஆரோக்கியம் குறித்த கவனம் நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியைத் தீவிரமாக எழுப்பியது பேராசிரியர் ராம் ஆதித்யாவின் பேச்சு.

சென்னை அடையாறு ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ராம் ஆதித்யா, ஒருங்கிணைந்த உடல்நலம் குறித்துப் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆய்வு நடத்தியவர். தற்போது ஸ்பெயினில் வசித்துவருகிறார்.

ராம் ஆதித்யா, சைக்கலாஜிகல் மெத்தடாலஜி என்னும் பிரிவின் கீழ் ஆய்வு செய்துவருபவர். உதாரணமாக ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு முன்னால், அது எப்படியெல்லாம் ஆய்வு செய்யப்படுகிறது என்பதையே ஆய்வுக்கு உட்படுத்துவதைப் போன்றதுதான் இந்தத் துறை. இந்த அடிப்படையில் பல உண்மைகளை அவர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

தொடக்கத்தில் அவருக்கே உடல்ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. காய், கனிகளை மட்டுமே உணவாக உட்கொண்டதன் மூலமாக அந்தப் பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கிறார், 60 வயதிலும் சுறுசுறுப்பாகப் பேசும் ராம் ஆதித்யா. அவர் கவனப்படுத்திய விஷயங்கள்:

ரேடியம் சாக்லேட்

இன்றைக்கு மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ரேடியம் கண்டுபிடித்த காலத்தில் மருத்துவச் சிகிச்சைகள் பலவற்றிலும் அது தேவையா, தேவையில்லையா என்னும் தர்க்கங்களைத் தாண்டி எல்லாச் சிகிச்சை வடிவங்களிலும் ரேடியம் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டது. உச்சகட்டமாக ரேடியம் கலந்த சாக்லேட்கூட விற்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை இன்றைக்குப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கும். இந்த நடவடிக்கை களுக்குச் சற்றும் குறைவில்லாததாக இன்றைய மருத்துவ உலகில் ஸ்டீராய்டின் பயன்பாடு இருக்கிறது.

நோய்க்கா சிகிச்சை?

தற்போது உடலில் தோன்றும் அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை வழங்கப்படுகிறதே தவிர, நோய்க்கு அல்ல. நோயே வராமல் தடுப்பதற்கான வழி, நம்முடைய வாழ்க்கை முறையை இயற்கை வழியில் திருப்புவதுதான். உலக அளவில் மருத்துவம் சார்ந்த எவ்வளவோ ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் வைட்டமின் டி பற்றாக்குறையுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இது குறித்த ஆய்வுகளை எந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் ஊக்குவிப்பதில்லை. காரணம், வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்துதான் கிடைக்கும். இந்த ஆய்வின் பலனை வியாபாரமாக்க முடியாது என்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

பாதம் பதிய நடைப்பயிற்சி

காலையும் மாலையும் சூரியக் கதிர்கள் உடலில் படுமாறு, மண்ணில் கால் பதித்துத் தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தானாக வந்துசேரும். நம் உடலில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள், பிட்யூட்டரி சுரப்பி போன்றவை சரியான முறையில் சுரப்பதற்குச் சூரிய ஒளி முக்கியம். சூரியக் கதிர்களிலிருந்து வைட்டமின் டி நம் உடலுக்குக் கிடைப்பது உறுதி. அதுபோலவே, மண்ணில் கால் பதித்து நடப்பதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும் என்பதும் அறிவியல் உண்மை. மண்ணில் கால் பதிந்து நடக்கும்போது நம் உடலிலிருந்து மின்காந்த அலைகள் பூமியில் இறங்குகின்றன.

உடலுக்கேற்ற உணவு எது?

மரங்கள், செடி கொடிகள் நிரம்பிய ஒரு குகைக்குள் நம்மை அடைத்துவிட்டால், நாம் எதை உண்டு உயிர் வாழ்வோமோ அதுதான் நம்முடைய இயல்பான உணவாக இருக்க முடியும். இலை, தண்டுகள், காய், கனிகள்தான் நமது உணவில் முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும். கீரையை முதன்மை உணவாக உண்ண வேண்டும். அரிசி, கோதுமைகூடத் தேவையில்லை. அதிலும் இயற்கை வேளாண்மையில் விளைந்த காய், கனிகளாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

பால் குடிப்பதால்தான் நம் உடலில் கால்சியம் சேர்கிறது என்னும் மூடநம்பிக்கை நம்மிடையே காலம் காலமாக இருக்கிறது. 25 கிலோ கன்று 500 கிலோவுக்கு வளர்வதுவரை, அதற்கு உதவும் உணவு பால். இந்தப் பாலை மூன்று கிலோவிலிருந்து அதிகபட்சம் 60 கிலோவரை மட்டுமே எடை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கும் மனிதர்கள் குடிப்பது சரியாக இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT