எனக்கு வயது 46. கடுமையான வாயுத்தொல்லை யால் அவதிப்படுகிறேன். உடலின் தோள்பட்டை மற்றும் பல்வேறு பகுதியிலும் துடிப்பு இருக்கிறது. எனக்கு என்ன சிகிச்சை?
- பாலாஜி, ஈரோடு
வாசகரின் கேள்விக்கு இந்த வாரம் பதில் அளிக்கிறார் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ்:
மருத்துவர் பரிந்துரை பெற்றுச் சர்க்கரை சத்து, கொழுப்பு சத்தி, ரத்த அளவு, உப்புச் சத்து, எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகைப் பலகாரங்களை உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் மேற்கண்ட வாயுத் தொல்லை, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.
வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம்.
வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம், சீனி கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமத் தீநீர் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.
உடலின் தசைத் துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம். முக்குற்றத்தையும் சமப்படுத்தும் இவை, வருமுன் காக்க நாம் அனைவரும் உட்கொள்ளக்கூடியவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2