‘வெறுப்பு' ஒரு ‘மனநோய்' என்று அமெரிக்க அறிஞர் காப்மேயர் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இன்று பலரும் பல்வேறு கார ணங்களுக்காகத் தனிமனிதர்கள் மேல் வெறுப்பை உமிழும் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது.
சீமைக்கருவேல மரம்போல் மனங்களில் வெறுப்பு மண்டிய பிறகு, ஆண்டு ஒன்று போனால் என்ன? வயது ஒன்று ஏறினால் என்ன என்கிற விரக்திதான் ஏற்படும்.
நினைத்துப் பாருங்கள் வெறுப்பு உணர்வை மனத்தில் இருந்து நீக்கிவிட்டால் எப்படி இருக்கும் என்று? நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு நிம்மதி உணர்வு பரவுகிறது, இல்லையா?
மூத்தவர்களும் இளையவர்களும் அப்படிப்பட்ட நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், வளம் குறைந்த சிந்தனை மறதிநோயை வளர்க்கும். முதுமையில் உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும், அதற்குத்தானே அரசு ஓய்வு பெறுவதற்கான வயதை வைத்திருக்கிறது என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால்,அதே அரசுதான் அரசியல்வாதிகளுக்கு ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
டிமென்சியா என்கிற மறதி நோய் வந்தவர்களில் 70-80% பேருக்கு அல்சைமர் நோய் என்கிற முற்றின மூளை மறதிநோய் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்போல் வந்துவிடும். இந்த நோய்களை எப்படிக் கையாள்வது?
மறதி நோயைக் கண்டறியும் பரிசோதனைகள்
மூன்று எளிய வார்த்தைகளை நினைவுபடுத்தும் பயிற்சி சுவர்க் கடிகாரத்தைத் துல்லியமாக வரையச் சொல்லுதல் (CDT) இவை இரண்டையும் ஒருங்கே செய்யச் சொல்லுதல் (Mini - Cog) பல்வேறு படங்களைக் காட்டி சரியாக அடையாளம் காட்டச் சொல்லுதல், சரியாக உச்சரிக்கச் சொல்லுதல் (PMIS) தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லி மதிப்பிடுதல் (MMSE) மூளையின் பல்வேறு செயல் திறன்களைக் கண்டறியும் புகழ்பெற்ற MOCA Test மறதிநோய் இருப்பதாக உறுதியாக நம்பினால் CT / MRI / PET பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்
பொதுவான பரிசோதனைகள்
(65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது) ஊட்டச்சத்து குறைபாடுக்கான பரிசோதனை கள் (குறிப்பாக வைட்டமின் பி12) தைராய்டு சுரப்பு குறைபாடு உள்ளதா எனக் கண்டறிதல் (Hypothyroidism)
ரத்தக் குழாய்களில் பாதிப்பு உண்டா எனக் கண்டறியும் பரிசோதனைகள் (Vascular Disease)
இதயத் துடிப்பின் ஆரோக்கியத்தை அறிதல், கூடவே ஈரல் - சிறுநீரகப் பரிசோதனைகள்
புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியும் பரிசோதனைகள் மூளையின் செயல்திறன் குறைபாட்டை அறியும் Bio Markers Test உடல் தாது உப்புக்களின் அளவைக் கண்காணித்தல்
இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் உடலில் மிகையாகாமல் இருப்பதை உறுதி செய்தல் மன ஆரோக்கியம் அறிய: குறிப்பாக மனச்சோர்வு, மற்ற மனம் சார்ந்த பிரச்சினை கள் நமக்கே தெரியாமல் இருக்கின்றனவா எனக் கண்டறிய மனநல மருத்துவரின் ஆலோசனையை ஆண்டுதோறும் பெறுதல்
என்ன செய்ய வேண்டும்?
மூளை செயல்திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகளை (Occupational Therapy) வழங்கலாம். எடுத்துக்காட்டாக நடத்தை சார்ந்த, அன்றாட வேலை சார்ந்த பயிற்சிகள். குறிப்பாகக் கீழே விழாமல் நடக்க, விபத்துக் களில் சிக்காமல் தவிர்ப்பது போன்றவை.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல். எடுத்துக்காட்டாக இரைச்சலைத் தவிர்த்தல், கூர்மையான பொருட்களை, வாகன சாவிகளை மறைவான இடத்தில வைப்பது.
மறதி நோய் கண்டவர்களுடன் உரையாடும் போது கண்களைப் பார்த்து, கனிவுடன் எளிய வார்த்தைகளில் உரையாடுதல்
உடற்பயிற்சிகளை ஊக்குவித்தல், காலைக்கடனைக் கழிப்பதற்கும் படுக்கும்முன் கழிப்பறை செல்வதையும் ஊக்குவித்தல்
தினசரி எடுக்கும் மருந்துகளை, முக்கிய நிகழ்வுகளை, தினசரி வேலைகளை நினைவூட்டும் வண்ணம் தகவல் பலகையைச் சுவரில் மாட்டிவிடுதல்
மருந்துகள்
மறதிநோய்க்குக் கொடுக்கப்படும் நவீன மருந்துகளால் பெரிய அளவில் முன்னேற்றம் கிடைப்பதில்லை. மாற்று மருத்துவத்தாலும் மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவதில்லை என்று நினைத்து போலி மருத்துவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
மூலிகை மருந்துகள்: வல்லாரை, பிரம்மி, அஸ்வகந்தா, ஜின்செங், ஜிங்கோ பிலோபா போன்றவை மாத்திரைகளாக, சத்து பானங்களாகக் கிடைக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் அவற்றைத் தினசரி பயன்படுத்தலாம்
இயல், இசை, நாட்டியத்தின் மேல் ஆர்வம் காட்டுதல் வீட்டு விலங்குகளுடன் விளையாடுதல் ஓவியம் வரைவது மூளைத் தூண்டலுக்கு நல்ல பயிற்சியாக அமையும் புதிய நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
சமூகப் பணிகளில் முடிந்தவரை ஈடுபாடு காட்டலாம் ஒருவருக்குத் தெரிந்த தொழில் குறித்த ஆலோசனையை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
உணவு
ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கும் சேர்த்தே உணவுத்திட்டம் அமைய வேண்டும் உணவை ஒரே நேரத்தில் அதிகம் எடுப்பதைவிட, ஒரு நாளில் பல முறை என உணவைச் சிறிய சிறிய அளவாகப் பிரித்து எடுக்க வேண்டும்
உணவில் காய்கறிகள், பழங்கள், கொட்டை வகைகளை அதிகரித்தும், புரதமும் கொழுப்பும் கூடாமல் இருக்கும் வண்ணம் திட்டமிட வேண்டும்
உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும், முடியாதவர்களுக்கு புரை ஏறாத வண்ணம் திரவ வடிவில் சத்துணவைக் கூழாக்கிக் கொடுக்கலாம் ஒருபோதும் படுக்க வைத்து உணவை உட்கொள்ளக் கூடாது.
அதிக காரம், மசாலா, புளிப்பு வேண்டாம் உணவு உண்ணும்போது சுற்றுப்புறம் இரைச்சல் இல்லாமலும் சுகாதாரமான இடமாகவும் இருக்க வேண்டும் போதிய அளவு நீரை சிறுகச் சிறுக அருந்த வேண்டும்சரியான உடலஎடையைப் பராமரிக்க வேண்டும்
கவனத்தில் கொள்ள வேண்டிய உணவு:
வைட்டமின் 'இ'யைத் தாங்கிய முளைவிட்ட கோதுமைப் புல், தாவர எண்ணெய்கள், தவிட்டு எண்ணெய், மீன், கரும்பச்சை நிறக் கீரைகள், அடர்வண்ணம் கொண்ட பழங்கள், சூரிய காந்தி விதை, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை மூளைச் செல்களின் அழிவைக் குறைத்து, உடலில் தேங்கும் கழிவை அகற்றுவதில் வல்லவை
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 FA) தாங்கிய ஆளி விதை, வால்நட், சோயா போன்றவை மனநலத்தை, மூளைச் செல்களைப் புதுப்பித்தலில் பலன் தரும்
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், குறிப்பாகத் தக்காளி, திராட்சை, வாழைப்பழம், மஞ்சள் தூள், மீன் நல்ல பலனைத் தருவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அசைவ உணவு, அடர் கொழுப்பு நிறைந்த விலங்கு எண்ணெய் போன்றவை நோயின் உக்கிரத்தை அதிகரிப்பவை. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வேண்டவே வேண்டாம்
நேரடியாக ஞெகிழிப் பைகளில் பார்சல் கட்டித்தரப்பட்ட உணவு
வேதியியல் பொருட்களைத் தாங்கிய, வண்ண மேற்றப்பட்ட, செயற்கை சுவை யூட்டப்பட்ட, பதப்படுத்திய உணவு வகைகள்
அதிக சர்க்கரை, உப்பு
இரவில் தொலைக்காட்சி பார்ப்பது, கண்விழிப்பது
உடற்பயிற்சி அற்ற சோம்பலான வாழ்க்கை
மன உளைச்சல், மனச்சோர்வு
மறதிநோய் வந்த பிறகு தவிர்ப்பது இயலாது. வந்த பிறகு தவிப்பதும் தடுமாறுவதும் துயரம்தான். முப்பாட்டன் வள்ளுவன் சொன்னதுபோல் ‘வருமுன் காப்பதே' ஆகச் சிறந்தது என்ற சிந்தனையை உள்வாங்க வேண்டும்.
இவை மறதிநோயின் அறிகுறியா? # திடீரென ஏற்படும் சிந்தனைத் தடுமாற்றம், விரைவாக மூளை செயல்திறன் குறைதல் - இவை மூளைத்தொற்று, பக்கவாதம், மூளை உறைகளில் ரத்தக்கசிவுக்கான அறிகுறிகள் (Subdural Haematoma) # சிந்தனைத் தடுமாற்றம் சில நாட்களும் இயல்பாக சில நாட்களும் மாறிமாறி இருப்பது, கற்பனை உலகில் சஞ்சரித்தல் - இவை மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் # இளம் வயதில் ஏற்படும் திடீர் நடத்தை மாற்றம் - இதில் பெரும்பாலும் மறதி இருக்காது (முன் மூளை சார்ந்த பிரச்சினையாக இருக்கும் - FTD) குணப்படுத்தக் கூடிய மறதி நோய் மது, மனச்சோர்வு, நச்சுக்களால், மருந்துகளால் (உறக்கமெழுப்பி, போதை மருந்துகள்), நோய்த்தொற்றுகளால் (CNS Infections), நாளமில்லா சுரப்புக் கோளாறுகளால் மறதி நோய் ஏற்பட்டிருந்தால், குணப்படுத்திவிட முடியும். |
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com