மனிதன் எந்தச் செயலைத் தொடர்ந்து செய்கிறானோ, அதுவாகவே ஆகிறான். ஒரு செயலில் உன்னதம் அடைவது என்பது தனித்த ஒரு செயலல்ல. அது பன்னெடுங்காலப் பழக்கத்தின் விளைவே
- அரிஸ்டாட்டில்
மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள், இருக்க நினைப்பவர்கள். ‘முன்னைவிடச் சிறப்பாக’ என்பதே அவர்களின் தாரக மந்திரம். தாங்கள் வகுத்த எல்லைகளையே அடிக்கடி மீறி மீறிப் புதுப்புது எல்லைகளை விரிவுபடுத்திச் சாதனை புரிபவர்கள். நெருப்பை வசப்படுத்தியதில் தொடங்கி நிலவில் காலடி வைத்ததுவரை மனிதர்கள் புரிந்த சாதனைகள் பலப்பல!
அறிவியல், கலை , விளையாட்டு என எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உன்னதம் தொடுவதற்குப் பயிற்சி முதல் காரணம். சாதாரணமாக ஒருவர் புல்லாங்குழலில் ஊதும்போது ‘தேவர் மகன்’ படத்தில் ரேவதி சொல்வதுபோல் வெறும் காற்றுதான் வருகிறது. அதுவே ஹரிபிரசாத் சவுராஸ்யா ஊதும் காற்றானது கானடா ராகமாக வெளிப்படுவதற்குப் பயிற்சியே காரணம். இதையேதான் ‘சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’ என்கிறது பைந்தமிழ்ப் பாடல்.
ஒரு செயல் பழக்கமாகும்போது மூளையில் என்ன நடக்கிறது? மீண்டும் மீண்டும் ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கும்போது மூளையில் அச்செயலுடன் தொடர்புடைய நரம்புகளின் இணைப்புகள் வலுவடைகின்றன. இன்னும் வேகவேகமாகச் செயல்படத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் நம்முடைய கவனம் தேவைப்படாமலேயே தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குகின்றன.
முதன்முதலில் சைக்கிள் அல்லது கார் ஓட்டத் தொடங்கும்போது எப்படி இருக்கும்? முழுக் கவனமும் சாலை மீதும் வாகனம் மீதும் மட்டுமே பதிந்திருக்கும். எதிரே ஒரு கிலோமீட்டர் தொலைவில் யாராவது ஒருவர் சாலையைக் கடக்கிறார் என்றால், இங்கிருந்தே பிரேக்கைப் பிடிக்க ஆரம்பித்திருப்போம்.
ஆனால், அதுவே நன்கு பழகியவுடன் ஸ்டைலாகக் கையை விட்டுவிட்டு ஓட்டுவது, தொலைபேசியில் கடன் அட்டை வேண்டுமா எனக் கேட்பவர்களைத் திட்டிக்கொண்டே எதிரே வந்த லாரியிடமிருந்து லாகவமாக ஒதுங்குவது என அலப்பறை செய்கிறோம் அல்லவா? எப்படி இந்த மாற்றம் நடக்கிறது? மேலே சொன்னதுபோல் மூளையின் நரம்புகளின் இணைப்புகளில் ஏற்படும் மாறுதல்களால் முழுக் கவனமும் தேவைப்பட்ட ஒரு செயல், தீ சுட்டதும் உடனே கை பதறி விலகுவதுபோல் அனிச்சையாக நடைபெறத் தொடங்குகிறது.
நாம் தொடர்ந்து செய்யும் செயலின் விளைவுகள் மட்டுமல்ல. சில நேரம் நம்மையறியாமல் நடக்கும் தொடர்பில்லாத செயல்களும் அதன் விளைவுகளுக்கும் நமது உடல் பழகிவிடுகிறது. ரஷ்யாவின் மிகப் பெரிய அறிவியலாளர் பாவ்லோவ். அவர் ஒரு நாயைப் பாடாய்ப்படுத்திப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தினார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ உலகையே புரட்டிப் போட்டன.
அந்த நாய்க்கு உணவு வைக்கும் முன், ஒரு மணியடிப்பதை வழக்கமாக்கினார். பின்னர் அவர் உணவை வைக்காமல் வெறுமனே மணியை மட்டும் அடித்தார். அப்போதும் நாயின் உடலில் எச்சில், உணவை ஜீரணிக்க உதவும் சுரப்பிகளும் சுரப்பதைக் கண்டறிந்தார்.
இதிலிருந்து, ‘கொஞ்ச நாள் பழகியவுடன் ஒரு பொருளுக்கு மட்டுமல்ல, அதனுடன் பழக்கப்படுத்திய வேறொரு பொருளுக்கும் நமது உடல் அதேபோல் வினையாற்றுகிறது’ எனும் உண்மையை அவர் வெளிக்கொணர்ந்தார். இதை ஆங்கிலத்தில் ‘கண்டிஷனிங்’ என்பார்கள்.
சிலருக்கு நாள்தோறும் செய்தித்தாளில் திடுக்கிடும் செய்திகளைப் படித்தால்தான் காலைக் கடனே கழிக்க முடியும். வேறு சிலருக்கு இரவில் மெகா சீரியல்களில் வசைபாடுவதைக் கேட்டால்தான் தூக்கமே வரும். இதெல்லாமே ‘கண்டிஷனிங்’ எனப்படும் பழக்கமே. ஓர் இடத்தில் நமக்கு நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தால், அந்த இடத்துக்கு வந்தவுடனேயே எதுவும் நடக்காமலேயே நம்மை அறியாமல் உற்சாகம் பிறப்பதற்கும் , நமக்கு உற்சாகமூட்டும் விதமாகவும் கலகலப்பாகவும் பேசும் ஒருவர் வந்ததும் அவர் எதுவும் சொல்லாமல், செய்யாமல் நமக்கு உற்சாகம் கொப்பளிப்பதற்கும் இந்தப் பழக்கமே காரணம்.
‘இயல்பாக இருப்பற்குப் பல வருட ஒத்திகை தேவைப்படுகிறது’ என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. நமது கவனத்தைக் கோராமல் நம் உடல் தானாகச் செயல்படும்போது செயலின் விளைவைப் பற்றிப் பதற்றம் எதுவும் நமக்கு ஏற்படுவதில்லை. நன்கு பழகியபின் வண்டி ஓட்டுவதைப் போன்றது இது. எத்தனை கடின இலக்காக இருந்தாலும் விராட் கோலி விரட்டி விரட்டி அடித்து ஜெயிப்பது, தீவிர பயிற்சியால் அவர் வெற்றிபெறுவதைப் பழக்கமாக்கிக்கொண்டார் என்பதையே காட்டுகிறது. ஆக, வெற்றிக்கு முதல் படி பயிற்சியே!
சாதகமில்லாத சூழலைக்கூட நேர்மறையான எண்ணங்களுடன் பழக்கப்படுத்தினால், நம்மால் நிறைய சாதிக்க முடியும். ஆனால், சில இடங்களில் பழக்கமே நமக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் மாறுகிறது. எப்படி?
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com