இ
யற்கை மருத்துவத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்: ‘Healthy Self, Heal Thy Self’. அதாவது, ‘ஆரோக்கியமான சுயம், சுயமான குணம்’. யோகா, மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, நிற சிகிச்சை, நறுமண சிகிச்சை போன்ற இயற்கை மருத்துவ முறைகளால் நமக்கு ஏற்படும் நோய்களை நம்மால் எந்தப் பக்க விளைவுகளும் இல்லாமல் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
அதற்காக, நாமே சுய மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. மேற்கண்ட மருத்துவ முறைகளைத் தகுந்த மருத்துவரின் மேற்பார்வையில் அணுக வேண்டும்.
இந்த சிகிச்சை முறைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 23, 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் ‘கி ஹெல்த் எக்ஸ்போ 2018’ என்ற தலைப்பில் இயற்கை மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு இயற்கை மருத்துவ சிகிச்சைகளைப் பற்றி அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் அறிமுகம் கொடுக்க, இன்னும் சில மாணவர்கள் கண் பராமரிப்பு, நினைவாற்றல் மேம்பாடு, மனதை ஒருமைப்படுத்துதல் போன்றவற்றுக்கான பயிற்சிகளை வழங்கினர்.
‘வாட்ஸ் அப்’பில் வரும் மீம்ஸ்களைக் கொஞ்சம் ‘உல்டா’ செய்து, அவற்றில் நீரிழிவு, யோகாசனம் போன்ற விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எளிமையாகப் புரியும்படி கண்காட்சிச் சுவர்களில் ஆங்காங்கே ஒட்டியிருந்தார்கள். பார்வையாளர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன அவை.
சரி, அது என்ன ‘கி’..? சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் ‘கி’ எனும் ஒரு தத்துவம் இருக்கிறது. அதில் காற்றுதான், வாழ்க்கையின் சக்தியாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று, இயற்கை மருத்துவத்திலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
படங்கள்: ந.வினோத்குமார்