நலம் வாழ

இது ‘ஒரு பக்க’ கதை!

மு.வீராசாமி
உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்: மார்ச் 11-18


இது கதையல்ல... நிஜம். நாளை உங்களுக்கும் நிகழலாம்!

நீண்ட நாட்களுக்குப் பின் அவரைப் பார்க்கிறேன். சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நண்பரைப் பார்த்தபோது அவருடைய நடையில் ஒரு மாறுபாடு இருந்ததை உணர முடிந்தது. அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் அவர். சாலையின் இடது ஓரமாகப் போடப்பட்டிருந்த வெள்ளைக் கோட்டை ஒட்டியே கவனமாக மெதுவாக நடந்தார். நடையில் தயக்கமும் வலதுபுறம் சென்றுவிடுவோமோ என்ற பயமும் தெரிந்தது.

வேக வேகமாகச் சென்று அவரின் இடதுபுறமாகத் தெரியும்படி நலம் விசாரித்துவிட்டு, ‘என்ன சார் உங்களுக்குக் கண்ணில் கிளாகோமா எதுவும் இருக்கிறதா?’ என்று கேட்டதும் ஒரு நிமிடம் அந்தக் கேள்வியால் வியப்படைந்தாலும், மறுநிமிடமே அவரது கண்ணிலிருந்து நீர் வர ஆரம்பித்து விட்டது.

மருத்துவமனையில் அவர் பணிபுரிந்தபோது அடிக்கடி தலைவலிக்கிறது, கண்ணில் ஏதோ அசவுகரியம் என்பார். கண்களைப் பரிசோதியுங்கள் என்று நான் சொன்னதை கண்டுகொள்ளவே இல்லை. ஒருமுறை பக்கத்துக் கிராமத்தில் நடைபெற்ற இலவசக் கண் சிகிச்சை முகாமில் அவருடைய கண்ணில் பிரஷர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தலைமை மருத்துவமனைக்கு விரைவாக சென்று முழுமையாகப் பரிசோதனைசெய்து, முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள்.

‘உடம்பில்தானே பிரஷர் வரும். அது என்ன கண்ணில் பிரஷர் இருக்கிறது என்று சொல்கிறார்கள்? மருத்துவமனைக்கு வரச் செய்வதற்காக அப்படி சொல்லி ஏமாற்றுகிறார்கள்’ என்றும் தேவையில்லாத செலவை இழுத்து விடுவார்கள் என்றும் நினைத்து பயந்து அவர் போகவில்லையாம்.

நாளடைவில், சாப்பிடும்போது இலையின் ஒருபுறம் வைக்கப்படும் காய்கறிகளைச் சாப்பிடாமலேயே எழுந்துவிடுவாராம். மனைவி பார்த்துவிட்டுச் சொன்ன பிறகுதான் தனக்கு ஒரு பக்கப் பார்வை வெகுவாகக் குறைந்துபோய் விட்டிருந்தது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதன்பின் மருத்துவமனைக்குச் சென்றபோது ஏறக்குறைய வலது கண்ணில் பார்வை முழுவதுமாகப் பறிபோயிருந்தது. பிரஷர் அதிகமாகி பார்வை நரம்புகள் பட்டுப்போய் விட்டன என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மனிதருக்கு சர்க்கரை, அத்துடன் கண்ணில் கேடராக்ட் வேறு. எல்லாம் சேர்ந்து பாடாய்ப்படுத்தி இப்போது இந்த நிலையில் இருக்கிறார். இத்தனைக்கும் அவர் மருத்துவத் துறையில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்பது வேதனையான செய்தி.

உடம்பில் இயல்பான ரத்த அழுத்தம் பராமரிக்கப்படுவதுபோல் நம் கண்ணிலும் அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கண்ணில் இருக்கும் இந்த அழுத்தம், இயல்பான அழுத்தத்தைவிட அதிகரித்தால் அதை கிளாகோமா (கண்நீர் அழுத்த உயர்வு) என்று சொல்கிறார்கள்.

சில நோய்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தும். பிரச்சினையை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, முதுகுவலி, வயிற்றுவலி போன்றவற்றை நம்மால் உணர முடியும்.

ஆனால், கிளாகோமா என்ற கண்நீர் அழுத்த உயர்வில் எந்தவித அறிகுறிகளும் பொதுவாக வெளிப்படுவதில்லை என்பதுதான் பிரச்சினையே. ஓரளவு பிரச்சினையை உணர்வதற்குள் பார்வைத் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கண்நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் 40 வயதை நெருங்கும்போது ஏற்படலாம் என்பதால், இந்த வயதில் கண் பரிசோதனையை எல்லோருமே ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது. கண்ணில் பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எப்படி நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு 40 வயதில் பரிசோதனை செய்துகொள்கிறோமோ, அதைப் போன்றே கண்நீர் அழுத்த பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.

40 வயதில் செய்யவேண்டிய பரிசோதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வருமுன் காப்பதுதான் இதற்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் மருந்து அல்லது தேவையானபோது லேசர் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

SCROLL FOR NEXT