நலம் வாழ

டிஜிட்டல் போதை 22: ஸ்மார்ட் வகுப்பு- பிரச்சினைகளும் உண்டு!

வினோத் ஆறுமுகம்

உயிரினங்குகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசங்களில் ஒன்று மூளை வளர்ச்சி. மற்ற உயிரினங்கள் பிறக்கும்போதே அவற்றின் 90 சதவீத மூளை வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், மனிதனின் மூளை அப்படியல்ல. ஆள் வளர வளரத்தான் மூளையும் வளரும்.

மூளை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் டிஜிட்டல் திரைகளின் முன் சிறு வயதினரை அமரவைப்பது ஆபத்துதான். அமெரிக்கக் குழந்தைகள் நலக் கழகம், முதல் இரண்டு வயதுவரை குழந்தைகளுக்கு எந்தவித டிஜிட்டல் சாதனங்களையோ டிஜிட்டல் திரைகளையோ காட்டாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.

நாம் முன்பே இதைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். அப்படிச் செய்தால், மூளையில் கற்றலுக்குக் காரணமாக இருக்கும் ‘மையலின்’ பாதிக்கப்படும். அதனால் தெளிவாகச் சிந்திக்கும் திறன் தடைப்படும். தொடர்ச்சியான அதீத மின்காந்த அலைகள், குழந்தைகளின் கண்ணுக்கும் மூளைக்கும் ஆபத்து!

பாடங்களைக் காட்சிகளாகக் கற்பது, நல்லதுதான். ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை. உதாரணத்துக்கு, கடினமான அறிவியல் விளக்கங்கள், புவியியல் தொடர்பான பாடங்களை கிராஃபிக்ஸ் உதவியுடன் நடத்தும்போது அதிக பலன் கிடைக்கும். அனைத்தையுமே டிஜிட்டல் திரையில்தான் கற்போம் எனும்போதுதான் பிரச்சினை முளைக்கிறது.

வண்ணமயமான கல்வி உள்ளடக்கம், உங்கள் குழந்தைகளின் கவனத்தைக் குவிக்க உதவும் என்கிறார்கள். அதில்தான் பிரச்சினையே. அதீத வண்ணமயமான திரைகள் வெகு சீக்கிரமே சலித்துப்போய்விடும். பின்னர் அவர்கள் கவனத்தைக் கோரும், மிக அதிக வண்ணமயமான காட்சிகளைக் காட்ட வேண்டியிருக்கும். வண்ணமயத்துக்குப் பழகிவிட்டபின் சாதாரணப் புத்தகம், சாதாரணத் திரையில் தென்படும் எழுத்துகளை அவர்கள் படிக்க விரும்புவதில்லை.

கற்றல் என்பது கண்ணுக்கும் மூளைக்குமானது மட்டுமல்ல; ஐம்புலனும் சேர்ந்து இயங்குவது. குழந்தையின் வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மட்டுமல்ல; மூளை வளர்ச்சியும் சேர்ந்ததுதான். மூளை வளர்ச்சி என்பது வெறும் பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்வதல்ல. தர்க்கம், கலைத் திறன், சிந்திப்பது, படைப்பாற்றல் போன்ற உணர்வுகளும் சேர்ந்ததுதான் மூளை வளர்ச்சி. ‘இன்புட்’ கொடுத்தால் ‘அவுட்புட்’ கொடுக்கும் இயந்திரமாக மாணவர்களைப் பார்க்காதீர்கள். சாற்றைப் பருகாமல் சக்கையைத் தின்னும் கூட்டமாக அவர்களை மாற்றிவிடாதீர்கள்.

மெய் உலகில், நிஜ வாழ்க்கையில் அனைத்துப் புலன்களுக்கும் வாய்ப்பளித்துச் சுதந்திரமாக, சொல்லப்போனால் நிதானமாகக் கற்பதே நீண்டகால நோக்கில் நன்மை தரும். அதுவே மூளையைப் பயன்படுத்தும் கல்வி. ‘டெக்னாலஜி’ என்பது அந்த மூளையை விரிவுபடுத்தும் ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர, கருவியே மூளை இல்லை.

பாடப்புத்தகத்தில் படிக்கும்போது அது எல்லையில்லாக் கற்பனையை வளர்க்கும். ஆனால், வீடியோ கேம்களாக, காட்சிகளாகப் பாடங்களைச் சுருக்கும்போது, மாணவர்களின் கற்பனையைச் சட்டகத்துக்குள் அடைக்க முனைகிறீர்கள் என்று அர்த்தம்.

(அடுத்த வாரம்: நீங்கள் ‘ஸ்மார்ட்’ பெற்றோரா?)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

SCROLL FOR NEXT