நலம் வாழ

நலம், நலமறிய ஆவல் 28: உடல் எடை... உளுந்து வடை..!

கு.கணேசன்

நா

ன் சிறு வயது முதலே ஒல்லியாகத்தான் இருக்கிறேன். சாப்பாட்டில் எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டிலிருந்து, உடல் எடை கூட வேண்டி உடற்பயிற்சி செய்துவருகிறேன். சிறிது முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், அதற்குள் கை கால் வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போய், உடல் பழைய நிலைக்கே வந்துவிட்டது.

அதன் பின் மீண்டும் தற்போது இரண்டு வாரங்களாக வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இப்போது வேலைக்குச் செல்வதால் அரை மணி நேரம் மட்டும் உடற்பயிற்சி செய்கிறேன். உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? யூடியூப்பில் எடை அதிகரிப்பது பற்றி நிறைய வீடியோக்கள் வருகின்றன . அதையெல்லாம் பின்பற்றலாமா? உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

- அந்தோணி இன்ஃபேன்ட், தஞ்சாவூர்.

பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக சாத்தியம் உண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் ‘உடல் ஒல்லியாக உள்ளதே’ என்று கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கும் இப்படி இருக்க வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி செய்தால் உடல் எடை கூடுகிறது என்கிறீர்கள். நல்லது. சாதாரண உடற்பயிற்சிகளைவிட ஜிம் போன்ற தசைகளை அதிகரிக்கும் பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்துவந்தால், உங்கள் எடை இன்னும் விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

யூடியூப்பில் எடை அதிகரிப்பது பற்றி நிறைய வீடியோக்கள் வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், எல்லாமே எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. தகுந்த உணவியல் நிபுணர், உடற்பயிற்சியாளர் உதவியுடன், தங்களுக்குத் தேவையான கலோரி அளவைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப உணவு முறையை மாற்றிக்கொள்வதும் தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் மிக நல்லது. அது முடியாவிட்டால், நான் சொல்லும் பொதுவான வழிகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் உணவிலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்து பெரிதும் உதவுகிறது. பால், பாலில் இருந்து உருவாக்கப்பட்ட தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பாலாடைக் கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. இவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைக்கட்டிய பயறு போன்றவை புரதம் நிறைந்தவை. அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.

சைவ உணவான உளுத்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உளுந்தங்களி, உளுந்த வடை, இட்லிப் பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் புஷ்டியாக வளரும். தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம். மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரி, அவித்த வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறுகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது உடலை வளர்க்க உதவும். வாரம் இரு முறை இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும். தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும்.

உடல் தசைகள் பொலிவு பெறுவதற்குச் சிறிதளவு கொழுப்பும் தேவை. இதை நெய், வெண்ணெய், எண்ணெய், தயிர், ஆட்டிறைச்சி, முட்டை போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது, மதிய உணவின்போது பருப்பில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது, தயிர் அல்லது லஸ்ஸி குடிப்பது, மாலையில் இரண்டு வடை அல்லது நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது போன்ற உணவுப் பழக்கங்களால் தேவையான அளவுக்குக் கொழுப்புச் சத்து கிடைத்துவிடும். இவற்றின் மூலம் உடல் மினுமினுப்படையும்.

இயற்கைப் பழச்சாறு, பால், மில்க் ஷேக், லஸ்ஸி போன்ற பானங்களையும் அருந்துங்கள். கறுப்பு சாக்லேட் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு, சிப்ஸ் போன்ற மாவுச் சத்து நிறைந்தவற்றை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றாக உடல் வளர்ச்சி பெற்று வரும்போது திடீரென்று உடல் மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்கள்தான் காரணமாக இருக்க முடியும். குறிப்பாக காச நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சவலை நோய், சிறுநீரக நோய், மனநோய், குடல் புழுக்கள், அஜீரணம், சீலியாக் நோய், தைராய்டு மிகுநிலை என்று பெரிய பட்டியலே போடலாம்.

ஒல்லி உடலுக்கு நோய் காரணமா அல்லது பரம்பரை காரணமா என்பதை ஒல்லியாக உள்ளவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலைப் புஷ்டியாக்க முடியும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். | மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in | முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம் | 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
SCROLL FOR NEXT