எனக்குச் சில மாதங்களாக யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகமாக உள்ளது. இது எப்படி அதிகரிக்கிறது? இதைக் குறைப்பதற்கு வழி என்ன? எந்த உணவைச் சாப்பிடுவது? எதைத் தவிர்ப்பது? இதற்கு மாத்திரை எடுக்க வேண்டியது அவசியமா? - இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தால் மகிழ்வேன்.
- சி.கே. அன்பழகன், நாமக்கல்
தற்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறை காரணமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. உலக அளவில் 100 பேரில் 8 பேருக்கு இந்த நிலைமை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் உண்டாகிற ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணு தாங்கியின் உற்பத்திக்கு ‘பியூரின்’ எனும் மூலக்கூறுகள் தேவை. நாம் சாப்பிடும் அசைவ உணவில் இது அதிகம் இருக்கிறது. சைவ உணவில் தேவைக்கு இருக்கிறது.
இது குடலில் உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை முறைப்படி சிறுநீரில் வெளியேற்றிவிடுகின்றன. மிச்சமிருக்கும் அமிலம் ரத்தத்தில் இருக்கிறது. பெரும்பாலான உயிரினங்கள் அசைவம்தான் சாப்பிடுகின்றன. அப்படியானால், அவற்றுக்கும் யூரிக் அமிலப் பிரச்சினை வரவேண்டும் அல்லவா? உயிரினங்களுக்கு ‘யூரிகேஸ்’ எனும் என்சைம் இருக்கிறது. இது யூரிக் அமிலத்தை முழுவதுமாகச் செரித்துவிடுகிறது. இதனால் உயிரினங்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. யூரிகேஸ் என்சைம் நமக்கு இல்லை என்பதால்தான் பிரச்சினை. அளவுக்கு மீறி பியூரின் உள்ள உணவைச் சாப்பிட்டால், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்துவிடும்.
கல்லீரலில் உள்ள பிரச்சினை காரணமாக இது அதிக அளவில் உற்பத்தி ஆனாலும், உடலில் வேறு ஏதாவது உறுப்பில் பிரச்சினை இருந்து, யூரிக் அமிலம் வெளியேறுவதற்கு அது தடையாக இருந்தாலும் ரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கும்.
சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மி.கி. வரையிலும் ஆண்களுக்கு 8 மி.கி. வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிகங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’ (Gout) எனும் மூட்டுவலி வருகிறது. மேலும், இந்த அமிலம் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அப்போது சிறுநீரகங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உள்ளவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிப்பது ஆபத்தானது. அதிகரிக்கும் ஒவ்வொரு மில்லி கிராமும் இதய நோயை மோசமாக்கி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே இதயம் செயல் இழந்திருந்தால் (Heart failure), அந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.
யூரிக் அமில பாதிப்பு பெரும்பாலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பரம்பரை ரீதியாகவும் இது ஏற்படலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு, சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.
அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. ‘லீவோ டோப்பா’ எனும் மாத்திரையைச் சாப்பிடுபவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிக்கும்.
சிறுதானிய உணவு, முழுதானிய உணவு, பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவிலும் மதுவிலும்தான் யூரிக் அமிலம் அதிகம். உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. சாராயம் குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் எவ்வளவு சிரமப்படும் என்பதை நினைத்துப்பாருங்கள்.
எனவே கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவின் அளவைக் குறைத்துக்கொண்டால், பீர் உள்ளிட்ட மதுவை மறந்தால் யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பது தடுக்கப்படும்.
வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற அதிக இனிப்புள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைத்தாலே இந்த அமிலப் பிரச்சினையும் சரியாகிவிடும்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது எனும் காரணத்தாலேயே அதற்கு மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. உணவிலும் உடல் எடையிலும் கவனம் செலுத்தினாலே, இந்த அமிலம் குறைந்துவிடும். பாதிக்கப்பட்டவரின் வயது, உடலில் உள்ள பிரச்சினையை அடிப்படையாக வைத்து மாத்திரை தேவையா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் மருத்துவரை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |