சமீபத்தில் இறந்துபோன நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். இறந்தவரின் மூத்த மகன் வாசலிலேயே என்னைப் பார்த்ததும் என் கையைப் பற்றி, "அப்பாவோட கண்களைத் தானம் செஞ்சாச்சு, அதிகாலையிலேயே ஆஸ்பத்திரிலேர்ந்து டாக்டர்ங்க வந்து கண்களை எடுத்துட்டுப் போயிட்டாங்க" என்று சொல்லிக்கொண்டே இறந்த உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.
கண்களை எடுத்ததற்குச் சின்ன அடையாளமும் இன்றி இறந்தவரின் முகம் அமைதியாகக் காணப்பட்டது. இறப்பு நிகழ்ந்த வீட்டில், ஒருவர் எப்படி இறந்தார் என்பதை முதலில் கூறாமல், கண் தானம் செய்தது குறித்துக் கூறியது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி.
யாருக்குப் பயன்?
முதுமை, பலவித நோய்கள், விபத்துகளால் நாள்தோறும் பலர் இறக்கிறார்கள். அவர்களுடைய கண்கள் அனைத்தும் மண்ணுக்குள் வீணாகத்தான் போகின்றன. பார்வையிழந்த எத்தனையோ பேருக்கு அந்தக் கண்களைக் கொண்டு பார்வை கொடுக்க முடியும்.
கண்புரை, கண் நீர் அழுத்த உயர்வு, விழித்திரை பிரிதல், பார்வை நரம்பு பிரச்சினை, விழிப்படலப் பாதிப்பு போன்ற பல காரணங்களால் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இதில் விழிப்படலப் பார்வையிழப்புக்கு (கார்னியல் பிளைண்ட்னெஸ்) மட்டுமே கண் தானம் மூலம் பார்வை கொடுக்க முடியும்.
புதிய பார்வை
கண்ணில் ஏற்படும் சில நோய்களாலோ, கண்ணில் ஏற்படும் காயங்களாலோ விழிப்படலம் பாதிக்கப்பட்டு, ஒளி ஊடுருவும் தன்மையை இழந்து பார்வையிழப்பு ஏற்படுகிறது. இதில் கவனிக்க வேண்டியது கண்ணின் மற்றப் பகுதிகளான விழியாடி, விழித்திரை, பார்வை நரம்பு ஆகிய அனைத்துமே நல்ல நிலையில்தான் இருக்கும். முன்பகுதியான விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மட்டுமே, இந்த வகை பார்வையிழப்பு ஏற்படுகிறது.
விழிப்படலப் பார்வையிழப்பை அறுவை மருத்துவத்தால் சரிசெய்ய முடியும். இந்த வகையில் பார்வையிழந்தவரின் விழிப்படலத்தை நீக்கிவிட்டு, கண் தானம் மூலம் பெறப்படும் கண் விழிப்படலத்தை அதற்குப் பதிலாகப் பொருத்திவிடுகிறார்கள். இதன் மூலம் பார்வையிழந்தவர் பார்க்க முடியும். இந்த அறுவை மருத்துவத்தில் முழு கண்ணையும் அப்படியே மாற்றுவது கிடையாது.
கண் தானம் செய்வதற்கு முன்னரே, அதற்காகப் பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் இறந்தவுடன் அவரது நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ சம்மதித்தால் போதும்; விழிப்படலத்தை எடுக்கலாம். ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தவுடன் ‘சொந்தக்காரங்களுக்கு சொல்லியாச்சா, பந்தலுக்குச் சொல்லியாச்சா, மயானத்துக்குச் சொல்லியாச்சா?’ என்று கேட்பதுபோல் ‘கண் வங்கிக்கு சொல்லியாச்சா?’ என்று கேட்கும் நிலை ஏற்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் இறந்தவுடன் ஆறு மணி நேரத்துக்குள் கண்களை உடலிலிருந்து எடுக்க வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.
கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.
ஊக்குவிப்பு
கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் வீட்டின் முன் அறையில் பார்வையில் படும் இடத்தில் ‘கண் தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பம்’ என்று எழுதி வைக்கலாம். இது இரண்டு வழிகளில் உதவும். ஒன்று, வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களைக் கண் தானம் செய்ய அது தூண்டும். மற்றொன்று, அந்த வீட்டில் யாராவது இறந்துவிட்டால் – இறந்தவர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது நினைவுகூரப்பட்டு, கண் வங்கிக்கு உடன் தகவல் சொல்ல வசதியாக இருக்கும். இதன் மூலம் அவரது விருப்பம் நிறைவேற்றப்படும்.
இப்படிக் கண் தானம் செய்வதை ஒரு குடும்ப நிகழ்வாக மாற்றுவதன் மூலம், கண் தானத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்.
தொடர்புக்கு: veera.opt@gmail.com