வயோதிகத்தால் நலிவுற்றவர்களையும் மனத்தளவில் சோர்வுற்றவர்களையும், ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ!’ என்று வீறுகொண்டு எழச்செய்யும் மூலிகை இது! பால் மணம் மாறாத பாலகர் முதல் முதியவர்வரை அனைவரையும் தேற்றும் நீர்ப்பிரமி, பிரம்மிப்பின் உச்சம்! மனித உடலின் தலைமைச் செயலகமாகத் திகழும் மூளையின் செயல்பாடுகளை இது மெருகேற்றும்.
பெயர்க்காரணம்: பிரம்மி, வாக்குபவம், விமலம், பிரமிய வழுக்கை, பிரமியப் பூடு போன்ற வேறு பெயர்களைக் கொண்டது நீர்ப்பிரமி. ‘பிரம்மம்’ என்றால் தலையாயது என்ற பொருளில், மூளையின் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாவதால் ‘பிரமி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சொல் வன்மையை அதிகரிக்க வழங்கப்படும் மூலிகை என்பதால் ‘வாக்கு’பவம் என்று பெயர்.
அடையாளம்: நீர் ஆதாரம் அதிகமாக இருக்கும் இடங்களில் செழிப்பாக முளைத்தெழும் அழகான தாவரம். வழவழப்புடன் சதைப்பற்றுடன் கூடிய முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நீல நிற மலர்களைத் தாங்கிய ஓடு தண்டு வகையைச் சார்ந்த மூலிகை இது. ‘ஸ்குரோபுலரேசியே’ (Scrophulariaceae) குடும்பத்தின் உறுப்பினரான இதன் தாவரவியல் பெயர் ‘பகோபா மொனேரி’ (Bacopa monnieri). ‘பகோசைட்கள்’ (Bacosides), ‘பகோபாசைட்ஸ்’ (Bacopasides), பிரமைன் (Brahmine), ஹெர்பெஸ்டைன் (Herpestine) போன்ற தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.
உணவாக: வெண்ணெய் ஊற்றி வதக்கிய இதன் இலைகளைச் சுவைத்துச் சாப்பிட, கரகரத்திருக்கும் குரல், பூங்குழலிலிருந்து வெளிவரும் ஓசை போல ஸ்வரம் கற்பிக்கும்! இதைக் கீரையாகப் புசித்துவர, சிறுநீரைப் பெருக்கி, மலத்தை நயமாய் வெளித்தள்ளும்; கூடவே உடலுக்கு புஷ்டியைக் கொடுத்து, மனத்துக்கு உற்சாகமளிக்கும். இலைச் சாற்றைக்கொண்டு செய்யப்படும் ‘பிரமி நெய்’ எனும் சித்த மருந்து, மூளையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தும் நெய்ப்பான மருந்து. நினைவுத்திறனைப் பெருக்கி, அறிவாற்றலைத் துலங்கச் செய்யும் சாதுர்யமிக்க பிரமி நெய்யைச் சிறிதளவு சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.
நீர்ப்பிரமி இலைப்பொடி, அமுக்கராப் பொடி ஆகியவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து, வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து பானமாகத் தரலாம். குளிர்ச்சியை அள்ளிக் கொடுத்து, நரம்புகளை உரமாக்கும் சக்தி படைத்தது நீர்ப்பிரமி. இலைகளை அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுக்க, வெப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அள்ளிக்கொடுக்கும்.
மருந்தாக: நரம்பிழைகளுக்குப் பாதுகாப்பளித்து நினைவாற்றலைப் பெருக்கும் இதன் நுணுக்கமான செயல்பாடு குறித்து எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நுண்புலத்தோடு செயல்படுவதற்கு உதவும் மூளைப் புறணியின் குறிப்பிட்ட பகுதியை நீர்ப்பிரமி தூண்டுவதும் ஆய்வின் மூலம் அறியப்பட்டிருக்கிறது. மனப்பதற்றத்தைக் குறைத்து மன அழுத்தம் (டிப்ரஷன்) நோயில் உண்டாகும் குறிகுணங்களைக் குறைப்பதாகவும் நீர்ப்பிரமி தொடர்பான ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
அமைலாய்ட் திட்டுக்கள் மூளையில் படிவதைத் தடுத்து, அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தள்ளிப்போடுவதற்கும் நீர்ப்பிரமி உதவுகிறது. புற்று செல்களின் பெருக்கத்தைத் தடுப்பதற்கும் பிரமி பயன்படுவதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
வீட்டு மருந்தாக: இலைச் சாற்றோடு கோஷ்டம் சேர்த்துத் தேனில் குழைத்துக் கொடுக்க, செரியாமையால் உண்டாகும் எதிர்க்களித்தல் தொந்தரவு, உணவுக்குழலை எதிர்க்காமல் அடங்கும். நீர்ப்பிரமி செடியை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட, உடலில் தோன்றும் குத்தல் வலி மறையும்.
நீர்ப்பிரமி தாவர சூரணத்துடன் திப்பிலி, ஆடாதோடை, கடுக்காய், வசம்பு ஆகிய மூலிகைகளின் சூரணத்தைச் சேர்த்துத் தேனில் குழைத்துக் கொடுக்க, கட்டிய கோழை தொந்தரவு செய்யாமல் வெளியேறும். இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில மனநலக் கோளாறுகளைச் சரிசெய்யவும் நீர்ப்பிரமியைப் பயன்படுத்தலாம். செரிமானத்தைத் துரிதப்படுத்த இஞ்சிச் சாற்றில் பிரமி இலைச் சாற்றைக் கலந்து பருகலாம்.
நெஞ்சில் கோழைகட்டி, சுவாசம் கடுமையாகும்போது நீர்ப்பிரமியை அரைத்து மார்புப் பகுதியில் தேய்க்கலாம். மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களுக்கு, இதன் இலைகளை ஆமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி ஒத்தடமிட்டு, பிளாஸ்திரி போல்செய்து கட்ட பலன் கிடைக்கும். வெப்பத்தைத் தணிப்பதற்கு பிரமி தாவரத்தை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, கணுக்கால் முதல் பாதம் வரை வைத்துக் கட்டும் முறை வழக்கத்திலிருக்கிறது.
நீர்ப்பிரமி, கொத்துமல்லி விதைகள், செம்பருத்தி இதழ்கள், கரிசாலை ஆகியவற்றைத் தண்ணீர் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சி மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மருந்தாகக் கொடுத்து, மனநல ஆலோசனையும் வழங்க மதுவால் ஏற்பட்ட உறுப்புகளின் பாதிப்பைக் குறைக்கலாம். மன நோய்களுக்கான சித்த ‘மருத்துவக் குழம்பில்’ நீர்ப்பிரமியின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
மனவளத்தில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கண்கண்ட மருந்து நீர்ப்பிரமி. திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுக்கு நீர்ப்பிரமி சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்த, விரைவில் பேச்சிலேயே சொக்க வைப்பவர்களாக அவர்களை மாற்றும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்க, நீர்ப்பிரமியை அரைத்து, தலையில் வைத்துக் கட்டலாம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளில் நீர்ப்பிரமியின் சாற்றைச் சேர்த்துக்கொள்ள மருந்தின் தரம் அதிகரிக்கும்.
நினைவுத் திறனை அதிகரிக்க நீர்ப்பிரமியை உணவில் சேர்க்கும் வழக்கம் நெடுங்காலமாகவே நம்மிடையே உண்டு. வயிற்றுப் புண்களைக் குணமாக்க, நீர்ப்பிரமியுடன் மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்து சமைத்து சாப்பிட விரைவாக நலம் உண்டாகும்.
‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்’ மட்டுமல்ல; நீர்நாடி படர்ந்திருக்கும் நீர்ப்பிரமியும் இயற்கையின் அதிசயமே!…
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com