தினமும் 180 லிட்டர் ரத்தத்தை இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து சுத்தப்படுத்துகின்றன. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. ஆனால், சிறுநீரை வெளியேற்றுவது மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல; அதற்கு இன்னும் பிற முக்கிய வேலைகள் உண்டு. சிறுநீரகம்,உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது. ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மூச்சுக்குழாய், ரத்தக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள்களை வெளியேற்றுகிறது. சாப்பிடும் உணவிலும் மருந்து களிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் கெடுவது ஏன்?
கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடிப்பது, மது அருந்துவது, சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது, உணவு நச்சுகள், ரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia),புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் போன்றவற்றால் சிறுநீரகம் கெடுகிறது. இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி விட்டால், சிறுநீரகம் அவ்வளவாகப் பாதிக்கப்படாது. தவறினால், சிறுநீரகம் செயலிழப்பதைத் தவிர்க்க முடியாது.
திடீர் சிறுநீரகச் செயலிழப்பு
வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத் துக்கு ரத்த ஓட்டம் குறைந்துபோனாலும், மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உண்டானாலும், பாம்புக்கடி, குளவிக்கடி போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டாலும், மருந்து ஒவ்வாமை ஆகிவிட்டாலும், கர்ப்பிணி களுக்குஆபத்தான கருச்சிதைவு, அதீத உதிரப்போக்கு போன்ற பிரசவச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் சிறுநீரகம் திடீரெனச் செயலிழக்கும். அப்போது சிறுநீர் பிரிவது குறையும்; முகம், பாதம் வீங்கும். சிலருக்கு உடலில் நீர்கோத்து உடல் முழுவதும் வீங்குவதும் உண்டு.
நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு
கட்டுப்படாமல் நீடிக்கும் நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்ச மாகச் செயலிழக்கும். ஒரு கட்டத்தில் மொத்தமாகவே செயலிழந்துவிடும். இதனால், சிறுநீர் வெளியேறுவது குறைந்து, உடலில் கழிவுகள் தேங்கி பொது ஆரோக்கியம் பாதிக்கப்படும்; உயிருக்கு ஆபத்து நேரும்.
குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது, பசி குறைவது, வாந்தி வருவது, சாப்பிட முடியாதது, தூக்கம் இல்லாதது, ரத்தசோகை ஏற்படுவது, உடலில் அரிப்பும் சோர்வும் ஏற்படுவது, முகம்/கைகால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சு இளைப்பு உண்டாவது போன்றவை நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின்அறிகுறிகள்.
பரிசோதனைகள் என்னென்ன?
சிறுநீரகப் பிரச்சினைகள் ஆரம்பத்தி லேயே வெளியில் தெரியாது; பிரச்சினைகள் பெரிதாகி ஆபத்தான கட்டத்துக்கு வந்தபிறகுதான் அவற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியும். 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வதுநல்லது. ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐவிபி பரிசோதனை (Intravenous pyelogram – IVP), சி.டி. ஸ்கேன்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவுகின்றன.
சிகிச்சை முறைகள்
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்தி லேயே கவனித்துவிட்டால், நோய்க் கான அடிப்படைக் காரணத்தை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால், சிறுநீரகம் கடுமையாகச் செயலிழந்துவிட்டால் மருந்து சிகிச்சை மட்டும் போதாது; ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்னும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும்தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) செய்ய வேண்டியதும் வரும்.
ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்
உப்பு - உஷார்!
ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், சோடா தண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
ரத்தச் சர்க்கரை அளவோடு இருக்கட்டும்!
சர்க்கரை நோயுள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவு 120 மி.கி./டெசி லிட்டர். ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.
புகை சிறுநீரகத்துக்குப் பகை!
'நிகோட்டின்' நச்சு ரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், சிறுநீரகப் புற்றுநோயும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பைப் புகைப்பழக்கம் அதிகப்படுத்தும்.
குடிக்கும் தண்ணீர் முக்கியம்!
வெப்பப் பிரதேசத்தில் வசிக்கும் நாம் தினசரி 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் சீராக வெளியேறும்; சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும். அதேவேளையில் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.
சுய மருத்துவம் வேண்டாம்!
மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரை மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது சிறுநீரகத்தைப் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு மருந்தையும் நீங்களாகவே வாங்கிச் சாப்பிடாதீர்கள். மாற்று மருத்துவம் என்னும் பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதைத் தவிருங்கள். காரணம், முறையில்லாமல் தயாரிக்கப்படும் லேகிய மருந்துகளில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப்பாதிக்கக்கூடியவை.
சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது.
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், உடனே கழித்து விட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப் பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது.
தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மது அருந்தாதீர்கள்
மதுவில் உள்ள பல ரசாயனங்கள் சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும்.
தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
எந்த ஓர் உடற்பயிற்சியும் நல்லதுதான். ஆனாலும், நடைப்பயிற்சி தான் எல்லோருக்குமான எளிய பயிற்சி. அடுத்தது, யோகா. தினமும் 6 – 8 மணி நேரம் உறங்கி ஓய்வெடுங்கள்.