உடலுக்குள் செல்லும் ரசாயனக் கூறுகளை நீக்கும் திறன் உடலுக்கு உண்டுதான். ஆனால், உடலுக்கு அளிக்கப்படுகிற அவகாசத்தைப் பொறுத்தே தன்னுள் செலுத்தப்படும் தனக்கு எதிரான ரசாயனக் கூறுகளை உடலால் நீக்க முடியும்.
நாம் காலையில் பல் துலக்குகிறோம். அடுத்து மூன்று நான்கு மணி நேரத்துக்கு உள்ளுக்குள் எதையும் செலுத்தாமல் இருந்தால், பற்பசையில் உள்ள உடலுக்கு எதிரான முப்பதுக்கும் மேலான அத்தனை கூறுகளையும் உடல் நீக்கிவிடும். ஆனால், பல் துலக்கிய அடுத்த நிமிடமே அதே வாயால் தேநீர் அல்லது காபி அருந்துகிறோம். காலைப் பல் துலக்கலில் தொடங்கும் ரசாயன நுகர்வு, இரவு படுக்கைக்குச் செல்வது வரை தொடர்ந்து நீடிக்கிறது. இதுவே சாதாரணப் பல் பிரச்சினைகள் முதல் புற்றுநோய் கட்டிவரை பல்வேறு உடல்நலக் கேடுகளுக்குக் காரணமாகி விடுகிறது என்று எச்சரிக்கின்றனர் அமெரிக்கப் பல் மருத்துவர்கள்.
பற்பொடியின் மேன்மைகள்
ஈரப்பதமான பற்பசையை மூன்று மாதங்களாவது கெட்டுப் போகாத வண்ணம் பாதுகாக்கக் கண்டிப்பாகப் பதப்படுத்திகள் (preservatives) அவசியம். ஆனால், உலர்நிலையில் உள்ள பற்பொடிக்குப் பதப்படுத்திகள் தேவைப்படுவதில்லை. ஏனென்றால், உலர் தன்மையுள்ள பொடிகள் நிதானமாகவே கெடத் தொடங்குகின்றன. அது போக பல பற்பொடிகள் மூலிகைப் பொருட்களைக் கருக்கிச் சாம்பலாக்கித் தயாரிக்கப்படுபவை. அத்தோடு உப்பும் சேர்க்கப்படுகிறது. உப்பு ஒரு இயற்கைப் பதப்படுத்தி என்பதைச் சாதாரண ஊறுகாய் மூலமே நாம் அறிந்திருப்போம்.
நம் முன்னோரைப் போல் கரிக்கட்டையை நொறுக்கி உடன் உப்பைச் சேர்த்து பல்லைத் தேய்க்கும் அளவுக்குப் போக வேண்டியதில்லை. நெல்லின் உமியைச் சாம்பலாக்கி அதனுடன் சிறிதளவு இனிப்பும் சிறிதளவு பளபளப்பற்ற நிறமியும் சேர்த்துத் தயாரிக்கப்படும் மலிவான பல்பொடி, பற்பசையைக் காட்டிலும் பாதுகாப்பானது. இந்திய அரசின் மருந்துத் துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் இம்காப்ஸ் நான்கைந்து வகையான பற்பொடிகளைத் தயாரித்து விற்கிறது. அதேபோல் காதிகிராப்ட் நிறுவனமும் பற்பொடிகளைத் தயாரிக்கிறது. பற்பொடிப் பயன்பாட்டுக்கு மாறிய சில மாதங்களிலேயே அதன் தரத்தை நம்மால் உணர முடியும்.
பல் தேய்க்க பிரஷ், அத்தியாவசியமான ஒன்றல்ல. பற்பொடியைத் தொட்டோ வெறும் கையாலோ பல்லடுக்கைக் குறிபார்த்து மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் உள்ளும் புறமும் அழுத்தாமல் முழுக் கவனத்தோடு ஓரிரு நிமிடங்கள் தேய்த்தால் போதுமானது. குழந்தைகள் பற்பொடியை விழுங்கினால் எவ்வித ஆபத்தும் இல்லை. காரமும் உப்பும் உடைய பற்பொடியைக் குழந்தைகள் ஓரளவுக்கு மேல் அதிகமாக எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு.
வயிற்றுக்கும் பல்லுக்குமான தொடர்பு
சாக்லேட் போன்ற இனிப்புப் பண்டங்களின் கூழ் பற்களின் இடுக்கில் தங்கி விளைவிக்கும் கேடுகளைவிட அவற்றின் ரசாயனக் கூறுகள் மண்ணீரலைத் தளரச் செய்வதன் மூலமாகவே பல் சொத்தை நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல் பெரியவர்களின் கல்லீரலில் அளவுக்கு மிஞ்சிய ரசாயனத் தேக்கத்தால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாகவே பற்களின் வேர்கள் பாதிப்படைந்து, பற்கள் ஆட்டம் காண்கின்றன. மண்ணீரலின் தொடர்ச்சியான பாதிப்பே ஈறுகளைக் கருக்கவும் ஈறை வீங்கவும் வைத்து விடுகிறது. பற்களின் ஆற்றலுக்கு மீறிக் கடிப்பதாலும் தாடை பலவீனமற்று வீக்கம் ஏற்படுகிறது. ஈறில் சீழ் கட்டுவதற்கும் வயிற்றில் தோன்றும் புண், அழற்சி போன்ற தொல்லைகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பல்லில் ஈறினில், தாடையில் எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், அது தீரும்வரை உடனடியாக மெத்தென்ற காரத் தன்மையுள்ள சூப்பு போன்ற உணவைக் குறைவாக எடுத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு மாறிக்கொள்ள வேண்டும். அவ்வாறு மாறிக்கொண்டால் தன்னியல்பாகவே மேற்படி பிரச்சினைகள் குறைவதை உணர முடியும்.
அடுத்ததாக, சிறுநீரகத்தின் புற உறுப்பாகிய வாழ்நாளெல்லாம் வளரும் அழகு அணிகலன் ஒன்றைக் குறித்துப் பார்க்க உள்ளோம். அது என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com