முழு ஆண்டு தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. உணவை மறந்து தேர்வுகளே உலகம் என்று பெரும்பாலான மாணவர்கள் பதற்றத்தின் உச்சத்தில் இருப்பார்கள். உணவைத் துறப்பது உடல்நலனை மட்டும் பாதிப்பதில்லை, அது படிப்பைப் பாதிக்கும், பயத்தை அதிகரிக்கும், நினைவாற்றலைக் குலைக்கும், மதிப்பெண்ணைக் குறைக்கும். சரியான நேரத்தில் உட்கொள்ளும் முறையான உணவே தேர்வின் வெற்றிக்கு அடித்தளம்.
உண்ணும் முறை
வழக்கமாக உணவு உட்கொள்ளும் முறைக்கும் தேர்வு காலத்தில் உட்கொள்ளும் முறைக்கும் வித்தியாசம் உண்டு. தேர்வு காலத்தில், மூன்று வேளை உணவுக்குப் பதிலாகச் சிறிது சிறிதாக என அதிக வேளை உணவை உட்கொள்வது, மூளையைச் சோர்வின்றிப் புத்துணர்ச்சியுடன் செயல்படவைக்கும். அதிகமானஉணவை உட்கொண்டால், மூளையின் செயலாற்றல் மங்கி, எளிதில் சோர்ந்துவிடும்.
காலை உணவு
தேர்வு நேரத்தில், மாணவர்கள் தங்களை அறியாமல் செய்யும் பொதுவான தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. மூளை ஆற்றலுடன் செயல்பட, காலை உணவு மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்வு நாள் காலையில், அரசனைப் போல உண்ண வேண்டும். புரதம் மிகுந்த தானிய உணவையோ மெதுவாகச் செரிக்கும் கார்போஹைட்ரைட் உணவையோ காலையில் உட்கொள்வது மிகவும் நல்லது.
மெதுவாகச் செரிக்கும் உணவுக்கு நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும் தன்மையுண்டு. பால், முட்டை போன்ற புரதச் சத்து மிகுந்த உணவு, நீண்ட நேரத்துக்குப் பசியை அண்டவிடாமல் செய்யும். இதனுடன், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவைச் சேர்த்து உட்கொள்வது, மூளைக்குக் கூடுதல் ஆற்றலை அளிக்கும்.
நொறுக்குத் தீனி கவனம் தேவை
படிக்கும்போது நொறுக்குத் தீனிகளைக் கொறிப்பது மாணவர்களின் விருப்பம். அந்த நொறுக்குத் தீனிகளில் அதிகக் கொழுப்போ இனிப்போ இல்லாமல் பார்த்துக்கொள்வது மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது. மாணவர்கள் உட்கொள்ளும் நொறுக்குத் தீனிகளில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஊட்டச்சத்துகள் போன்றவை மிகுந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு முளை கட்டிய பயிர்கள், பழங்கள், காய்கறியும் சீஸும் மிகுந்த சாண்ட்விச், உலர் பழங்கள்.
ஒமேகா-3 கொழுப்பு மிகவும் அவசியம்
ஒமேகா-3 கொழுப்பு இதயத்துக்கும் நினைவாற்ற லுக்கும் மனத்தின் ஒருமுகத்தன்மைக்கும் மிகவும் நல்லது. மன அழுத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் ஆற்றல் ஒமேகா-3 கொழுப்புக்கு உண்டு. இதில் சோகம் என்னவென்றால், இந்த ஒமேகா-3 கொழுப்பை நமது உடலால் உற்பத்திசெய்ய இயலாது.
நாம் சாப்பிடும் உணவிலிருந்தே, தனக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பை உடம்பு கிரகித்துக்கொள்கிறது. எனவே, நமது உணவில், குறிப்பாகத் தேர்வு நாட்களில் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. மீன் உணவு, ஆளி விதையிலும் முலாம்பழம்விதையிலும் சூரியகாந்தி விதையிலும் ஒமேகா -3 கொழுப்புகள் மிகுதியாக உள்ளன.
தண்ணீரே உற்ற நண்பன்
தாகம் அதிகம் இருக்கும்போது உங்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. ஒருவித எரிச்சல் மிகுந்த தடுமாற்றமே அப்போது இருக்கும். எனவே, தேர்வு நாட்களில், உடலில் போதிய நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். தண்ணீரோடு சேர்த்து மோர் இளநீர், குளிர்ச்சி தரும் பானங்கள் போன்றவற்றைப் பருகுவதும் நல்லது. இது உடலுக்கு நீர்ச்சத்தோடு சேர்த்து ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
தேர்வு மட்டும் வாழ்க்கை அல்ல; அது வாழ்க்கையின் சிறு நிலையே. எனவே, முறையான உணவைத் தகுந்த நேரத்தில் உட்கொண்டால் பயமின்றி பதற்றமின்றித் தேர்வை ஒரு கை பார்க்கலாம். மதிப்பெண்களை வாரிக் குவிக்கலாம்.