நலம் வாழ

குழந்தைகளின் அற்புத உலகம்

ம.சுசித்ரா

குழந்தைகளின் உலகம் முற்றிலும் வித்தியாசமானது. அதைப் புரிந்துகொள்ளச் சில அடிப்படைகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதிதாகப் பெற்றோரானவர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளக் கீழ்க்கண்ட குறிப்புகள் உதவும். பிறந்தது முதல் 2 மாதங்கள்வரை வளர்ந்த குழந்தைகளைப் பற்றி பார்ப்போம்.

புது மொட்டு

(பிறந்தது முதல் இரண்டு மாதங்கள்வரை)

1. யார் தன்னிடம் அன்பு செலுத்தி, நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுடைய முகத்தைக் குழந்தை எளிமையாக அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கும்.

2. பல்வேறு வண்ணங்களில், பலவிதமான வடிவங்களில் இருக்கும் பொருள்களைப் பார்ப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த விஷயமாக இருக்கும். ஆனால், பிறந்து இரண்டு மாதங்கள்வரை 30 சென்டிமீட்டர் தொலைவுக்குத்தான் குழந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.

3. மிருதுவாக உடலைத் தடவி, வருடி விடுவது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். இப்படிச் செய்யும்போது குழந்தை சுகமாக உணரும்.

சுய உணர்வு: குழந்தையிடம் அன்பு செலுத்தும்போது, அது பாதுகாப்பாக உணரும். அரவணைப்பு குழந்தைக்குக் கூடுதல் நன்மை தரும்.

உடல்: கைகள், கால்களை நன்கு விரித்து, உடற்பயிற்சி செய்யப் போதுமான இடமும், நேரமும் குழந்தைக்குத் தேவை.

உறவு: குழந்தையின் தேவையை உணர்ந்துகொண்டு அதன் மீது உடனடி கவனத்தை மென்மையாக வெளிப்படுத்தும்போது அன்பையும் நம்பகத்தன்மையையும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கிறது.

புரிதல்: குழந்தையின் கண்களால் மெதுவான அசைவுகளைப் பின்தொடர முடியும்.

கருத்துப் பரிமாற்றம்: பெற்றோரைப் பார்க்கும்போதும், பெற்றோரின் குரலைக் கேட்கும்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திச் சிரித்து, சத்தம் எழுப்பத் தோன்றும்.

SCROLL FOR NEXT