குழந்தைகளைக் கடத்திப் பெற்றோரிடம் பணம் பறிப்பது பழைய ஸ்டைல். இது டிஜிட்டல் யுகம். இதில், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் குழந்தைகளை விளையாட்டுக்கு அடிமையாக்கி, பெற்றோரிடமிருந்து பல கோடி ரூபாயைக் களவாடி உள்ளன. அண்மையில் நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் சமர்ப்பித்த ரகசிய ஆவணங்களின் மூலம் இந்த அதிர்ச்சிகரமான மோசடி அம்பலமாகியுள்ளது. இந்தத் திருட்டை ‘நட்பான மோசடி’ (Friendly fraud) என ஃபேஸ்புக் நிறுவனம் அழைக்கிறது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் குவிந்துள்ளன. இதை In-App கேம் என்று அழைப்பார்கள். அதாவது ஃபேஸ்புக் வலைத்தளத்திலோ செயலியிலோ நீங்கள் உள்நுழைந்து இந்த வீடியோ கேம்களை விளையாடலாம். இந்த கேம்களைக் குழந்தைகள் ஆர்வமாக விளையாடும்போது, விளையாட்டைச் சுவாரசியப்படுத்த அவர்கள் பல மேம்படுத்தல்களைச் செய்ய வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு கார் ரேஸ் என்றால் அதிக வேகம் செல்லும் கார்களை அவர்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும். இங்கேதான் ஃபேஸ்புக் தன் வேலையைக் காட்டி இருக்கிறது.
தெரிந்தே ஏமாற்றிய ஃபேஸ்புக்
எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறிவிட்டது. ஸ்மார்ட் போனிலேயே பலவித டிஜிட்டல் பண பரிவர்த்தனைச் செயலிகளைப் பயன்படுத்துகிறோம். கூகுள், facebook, whatsapp போன்ற செயலிகளில் வங்கிக் கடன் அட்டையை இணைத்துப்பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஃபேஸ்புக்குடன் தங்கள் கடன் அட்டையைப் பெற்றோர்கள் இணைத்திருப்பதே, இந்த மோசடிக்கு அடித்தளமாக உள்ளது.
ஃபேஸ்புக்கில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, ஃபேஸ்புக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் கடன் அட்டை பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் ஒவ்வொரு முறை வீடியோ கேமின் மேம்படுத்தல்களின்போது, ஓகே பட்டனைத் தேர்வு செய்தால் போதும், ஃபேஸ்புக் தாமாகவே பெற்றோர்களின் கடன் அட்டையில் இருந்து பணத்தை எடுத்துவிடும்.
இது குழந்தைகளுக்கும் தெரியாது, சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பெற்றோர்கள் கண்ணிலும் படாது. இப்படித்தான், வீடியோ கேம் ஆடிய ஒரு பையனிடமிருந்து ஒரே வாரத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாயை ஃபேஸ்புக் கறந்துள்ளது. பெற்றோர் அனுமதியின்றிக் குழந்தைகள் விளையாடுவதும் செலவு செய்வதும் ஃபேஸ்புக்குக்குத் தெரியும். இருந்தும், அவர்களிடமிருந்து ஃபேஸ்புக் பணம் கறந்துள்ளது.
ஃபேஸ்புக்கின் மோசடிகள்
பெற்றோரிடமிருந்து புகார்கள் குவியவே, அதைத் தவிர்க்க பல மென்பொருள்களை ஃபேஸ்புக் ஊழியர்கள் உருவாக்கியுள்ளனர். பல ஆலோசனைகளையும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கின் வருமானத்தை ஈட்ட இது ஒரு நல்ல வழி என்பதால், அதன் மேலாளர்கள் அவற்றைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளனர். கோபமடைந்த பெற்றோர்கள் ஒன்றாகக்கூடி வழக்குத் தொடுத்தனர்.
அந்த வழக்கில்தான் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ரகசிய ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை அல்ல கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தகவல் திருட்டுக்காகவும் அந்தரங்கத் தகவல்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் பல கோடி ரூபாய் அபராதம் ஃபேஸ்புக் மீது விதிக்கப்பட்டு உள்ளது.
விழிப்படைவோம்
இதில் ஃபேஸ்புக்கை மட்டும் குறைசொல்ல முடியாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையைக் கண்காணிக்காமல் இருக்கும் நமது அலட்சியமே எல்லாவற்றுக்கும் அடிப்படை. ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வார். எனவே, டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் விழிப்புடன் இருப்பதே, இது போன்ற நூதன மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வழி.