நலம் வாழ

செயலி என்ன செய்யும்? 19 - தட்டிக்கொடுக்கும் செயலி

வினோத் ஆறுமுகம்

ஹாபிட்புல் செயலி பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். இந்தச் செயலியை ஒரு சிறு குழந்தைகூடப் பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் எளிமையாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தச் செயலியின் முதல் வெற்றியே இந்த எளிமைதான். ஒரு செயலைத் தொடர்ந்து 66 நாட்களாவது (சனி, ஞாயிறு நீங்கலாக) அதாவது 3 மாதங்களாவது தொடர்ந்து செய்தால்தான் அது உங்களுக்குப் பழக்கமாக மாறி இருக்கும் என்று ஹாபிட்புல் சொல்கிறது.

இலவசமாகத் தரவிறக்கம் செய்தது என்றால், ஹாபிட்புல்லில் அதிகபட்சமாக 5 பழக்கங்களை நீங்கள் சேர்க்கலாம். பணம் கொடுத்து வாங்கினால் சுமார் நூறு பழக்கங்களை நீங்கள் சேர்த்துக் கண்காணிக்கலாம். ஹாபிட்புல்லில் உங்கள் குறிக்கோளை முதலில் உள்ளிட வேண்டும். எந்தச் செயலை உங்கள் வழக்கமாக மாற்றப் போகிறீர்கள் என்பதை அதில் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு பழக்கத்தைச் சேர்க்கும்போதே, அதற்காக நீங்கள் தினமும் செய்ய வேண்டிய செயல்களைச் சிறிது சிறிதாக உடைத்து 66 நாட்களுக்குத் தேவையான ஒரு எளிதான திட்டத்தை இந்தச் செயலி உருவாக்குகிறது. கச்சிதமாக ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதே தோல்வியின் முதல் படி. ஏனென்றால், நடைமுறையில் நம்மால் அனைத்தையும் கனகச்சிதமாகச் செய்ய முடியாது.

இந்தச் செயலியே, இந்த உளவியலை உள்வாங்கிக் கொண்டிருப்பதால், நீங்கள் கச்சிதமாகச் செய்யாத செயலை, உங்கள் முன் தொகுத்துக் காண்பித்து, அவற்றில் நீங்கள் அடைந்துள்ள சிறு முன்னேற்றத்தைக் காட்டி உங்களைத் தட்டிக் கொடுக்கும். இது உங்கள் மனத்தில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவதால், நீங்கள் தொடர்ந்து சோர்வடையாமல் அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்வீர்கள்.

நீங்கள் ஒவ்வொன்றாகச் சேர்க்கும் பழக்கங்களை அழகாகத் தொகுத்து காட்டும். உங்களின் தின செயல்களின் முடிவுகள், நேரம், தொடர முடியாத நாட்கள், திட்டங்கள் என அனைத்தையும் தொகுத்துப் பட்டியலாக உங்கள் பார்வைக்கு வைக்கும். இந்த வசதியின் காரணமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்க முடிகிறது. துல்லியமாகப் புள்ளிவிவரங்களுடன் கண்காணிப்பதால் நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள், எங்கே சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பது போன்ற விவரங்களும் உங்களுக்குத் தெரிய வருகின்றன.

செய்ய முடியாத செயல்களுக்கான, உண்மையான காரணங்கள் உங்கள் கண் முன்னால் விரிவதால், அதற்குத் தேவையான மாற்றுத் திட்டங்களை உங்களால் எளிதாக வகுக்க முடியும். இது மாதிரியான செயலிகளில் இருக்கும் சிறப்பம்சமே அதில் இயங்கும் குழுக்கள்தாம். செயலியைப் பற்றிய தொழில்நுட்பச் சந்தேகங்கள் முதல் நீங்கள் ஒரு பழக்கத்தைத் தொடர விரும்பும்போது ஏற்படும் தடங்கல்கள்வரை, பல விஷயங்களை இந்தக் குழுவில் விவாதித்து நாம் விளக்கம் பெறலாம்.

ஹாபிட்புல் போன்று பல செயலிகள் இன்று சந்தையில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்தச் செயலிகளின் பட்டியலை நான் கொடுத்துள்ளேன். உங்களுக்கு விருப்பமான செயலியைத் தரவிறக்கம்செய்து இந்த ஆண்டை மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம்.

1. Habit Bull (For IOS and Android)

2. Productive - Habit Tracker (For IOS only)

3. Strides: Habit Tracker

4. STREAKS (For IOS Only )

5. Habitica (For IOS Android)

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

SCROLL FOR NEXT