நலம் வாழ

குளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது?

கனி

இந்த ஆண்டு குளிர் சற்றே கூடுதலாக நிலவுகிறது. குளிர் காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் கூடுதல் கவனம் எடுத்துகொள்ள வேண்டியிருக்கும்.

உடற்பயிற்சியேசிறந்தது

உங்களுக்கு வெளியில் நடப்பதும் ஓடுவதும்தான் பிடித்தமான உடற்பயிற்சியா? ஆனால், இந்தப் பயிற்சியைக் குளிர் காலத்தில் மேற்கொள்வது சற்றுக் கடினமானது. குளிர் காலத்தின் தாக்கம் சற்றுக் குறையும்வரை, உடற்பயிற்சிக் கூடத்திலேயே பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அந்தப் பயிற்சிகளை உங்களின் அன்றாட வழக்கமாக்கிக்கொள்வது அவசியம். இந்த உடற்பயிற்சியோடு, சரியான உணவுப் பழக்கமும் போதுமான தூக்கமும் குளிர் காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

கைகளைக் கழுவ வேண்டும்

குளிர் காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவது நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும். குளிர் காலத்தில், அதிகமான நேரத்தை அறைகளுக்குள்ளே செலவழிப்பதால், நோய்க் கிருமிகளின் தாக்கத்தால் நீங்கள் பாதிக்கப்படலாம். வெளியே சென்று வந்துவுடன், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது நோய்க் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.

பழங்கள், காய்கறிகள்

குளிர் காலத்தில் நாம் எந்த உணவை உட்கொள்கிறோம் என்பதுதான் உடல் ஆரோக்கியத்தைப் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இந்தக் காலத்தில், கூடுதல் நேரத்தை நாம் வீட்டில் கழிப்போம் என்பதால், உடலில் அதிகமான கலோரிகள் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.

அதனால், அதிகக் கொழுப்புச் சத்து, மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்துக் கூடுதலாகப் பழங்களையும் காய்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது உடலில் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். இது குளிர் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு உதவும்.

போதுமான தூக்கம்

குளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடப்பதற்குப் போதுமான தூக்கம் அவசியம். சரியான தூக்கம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும். எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் கூடுதலாகத் தூங்க வேண்டுமென்று பொருள்.

இந்த எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நம்மால் குளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடந்துவிட முடியும்.

SCROLL FOR NEXT